தலவாக்கலையில் கோர விபத்து - 25 வயது யுவதி பலி! சாரதி இருவர் கைது. - Sri Lanka Muslim

தலவாக்கலையில் கோர விபத்து – 25 வயது யுவதி பலி! சாரதி இருவர் கைது.

Contributors

தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (23) காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த யுவதியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் தாய் காயமடைந்துள்ளார். மேலும், முச்சக்கர வண்டி சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த 25 வயதான கணேஷன் நித்யாவின் சடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளை – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

Web Design by Srilanka Muslims Web Team