தலையைத் தப்ப வைக்க தலைவர் முயற்சி » Sri Lanka Muslim

தலையைத் தப்ப வைக்க தலைவர் முயற்சி

baseer

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Basheer Segu Dawood


மீண்டும் இலங்கை அரசியலின் கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு தொலை பேசியுள்ளார்.

இச்செய்தி என்னை 2010 ஆம் ஆண்டு மஹிந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்ட போது இடம் பெற்ற அரசியல் விளையாட்டை மனக் கண் முன்னே நினைவலைகளாகக் கொணர்ந்து நிறுத்துகிறது.

அன்று மஹிந்த, காங்கிரசின் சில எம்பிக்களைக் குழுவாக அழைத்து தனது அரசுடன் இணைந்து கொள்ளுமாறு கோரினார். அந்த எம்பிக்கள் குழுவில் நான், ஹஸனலி மற்றும் அஸ்லம் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

அந்த எம்பிக்கள் றவூப் ஹக்கீம் அல்லது பஷீர் வராமல் நாங்கள் மட்டும் இணைந்தோமானால் ஹக்கீமும் பஷீரும் சேர்ந்து எங்களைக் காலி பண்ணிவிடுவார்கள், எனவே அவர்கள் இருவரையும் சேர்த்துப் பேசுங்கள் என்று மஹிந்தவிடம் கூறினர். இதற்கு அவர் ஹக்கீம் எனக்கு வேண்டாம், அவரை என்னால் நம்ப முடியாது என்று கூறினார். பின்னர் மஹிந்த பஷீரை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு அங்கிருந்த எம்பிக்கள் பஷீரை ஹக்கீமை விட்டுப் பிரித்து எடுத்தால் நாங்கள் உங்களோடு சேரத் தயார், பஷீர் இல்லாமல் ஹக்கீமால் இயங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலுக்கு அமைவாக மஹிந்த என்னை அழைத்துப் பேசினார்.

நான் இணைவதாக இருந்தால் கட்சியாகவே இணைவேன் என்று மஹிந்தவிடம் உறுதியாகச் சொன்னேன்.அதற்கு ஹக்கீமை நம்ப முடியாது அவர் ரணிலின் ஆள், ஆதலால் 2007 ஆம் ஆண்டில் நடந்தது போல் ஒரு வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிக்கு மாறிவிடுவார், அவரை நம்பமுடியாது என்று மஹிந்த என்னிடம் கூறினார்.

அத்தோடு, நீங்கள் கட்சியைக் கைப்பற்றுவதற்கும் உங்களைத் தலைவராக்குவதற்கும் நான் உதவி செய்கிறேன் என்றும், உங்களை கெபினட் அமைச்சராக நியமிக்கிறேன் என்றும், மற்றவர்களுக்குப் பிரதி அமைச்சுப் பதவிகளைத் தருகிறேன் என்றும் மஹிந்த கூறினார்.

அதற்கு ஹக்கீம் இல்லாமல் நான் வரமாட்டேன், உங்களுக்கு நாடாளுமன்றில் வாக்குகள்தானே தேவை, கட்சியாக வந்தோமானால் எட்டு வாக்குகள் தேறும். குழுவாக வந்தால் ஐந்துதானே கிடைக்கும் எனக் கூறி கட்சியில்லாமல் வரமுடியாது என்று உறுதியாகக் கூறினேன்.

இவ்வளவோடு இந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

தனது கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்பிக்களோடு அரசு பேசுவதை அறிந்துகொண்ட ஹக்கீம், மஹிந்தவின் அன்றைய “படியாவான” சச்சின் வாஸ் குணவர்த்தனவுடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஒரு நாள் மஹிந்த கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஓய்விலிருந்த போது என்னுடன் கைத் தொலை பேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முயன்றார், எனது தொடர்பு கிடைக்காமையால், எனது கொழும்பு வீட்டுத் தொலைபேசிக்கு அவரது மெய்ப்பாதுகாவலர் மூலமாகத் தொடர்பு கொண்டு ஜனாதிபதியின் நேரடிக் கைத் தொலை பேசி இலக்கத்தைக் கொடுத்து அவசரமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டேன்.

நான் உடனடியாக ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டேன். அவ்வேளை அவர் “ஒயாகே நாயகதுமா மாவ ஹம்பவெண்ட ஓணே கியல கியணவா ஹம்பவெண்டத ” என்று என்னைக் கேட்டார். அதற்கு நான் சந்தியுங்கள் சேர் நீங்கள் இருவரும் உடன்பாடு காணுங்கள் நாம் கட்சியாக இணைவோம் என்று கூறினேன்.

இதன் பின்னர் ஹக்கீம் சச்சினுடன் சென்று கண்டியில் மஹித்தவைச் சந்தித்து அரசுடன் இணையும் முடிவை எடுத்தார். இந்த சச்சின் வாஸ்தான் இறுதிவரை ஹக்கீமுக்கும் மஹிந்உக்கும் இடைத் தரகராகச் செயற்பட்வர். 2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலின் போதும் முதல்கட்ட பணப் பரிமாற்றத்தைச் செய்தவரும் இந்த வாஸேதான்.

மஹிந்த அரசுடன் இரண்டாவது முறையாக மு.காங்கிரஸ் இணைந்து கொண்ட போது ஹக்கீம் தனக்கு மட்டும் கெபினட் அமைச்சையும் எனக்கு மட்டும் பிரதி அமைச்சையும் பெற்றுக் கொண்டு மற்ற எம்பிக்கள் எவருக்கும் பிரதி அமைச்சுக்களைக் கொடுக்கக் கூடாது என்ற உடன்பாட்டையும் மஹிந்தவிடம் செய்துகொண்டார்.அவருக்கு நீதியமைச்சும், எனக்கு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சும் கிடைத்தது.

அமைச்சு சத்தியப் பிரமாண நிகழ்வின் போது ஹக்கீமிடம் உங்களுக்கு “நீதியில் பாதி, எனக்கு பாதியில் நீதி” என்று கூறினேன். இதனைக் கேட்டுக் கொண்டிருத்த புலவலர் ஹாஷிம் உமர் இன்று என்னைச் சந்திக்கும் போதும் ‘பாதி’ என்றே அழைக்கிறார்.

நான் கெபினட்டை எதிர்பார்த்திருந்ததால் பிரதியைப் பாதி என்றும், நிதி அமைச்சிலிருந்து Attorney General Department பிடுங்கப்பட்டதால் நீதியில் பாதி என்றும் சொன்னேன்.

Web Design by The Design Lanka