தவம் தவமிருக்கின்றாரா..? - Sri Lanka Muslim
Contributors

தவம் மிக அழகிய விதத்தில் சமூக வலைத்தள அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மைக் காலமாக அ.இ.ம.கா தலைவர் மீது அவருக்கு பாசம் பொங்கி வழிகின்றது. அது பாசமல்ல, வேசமாகும். பா.உறுப்பினர் முஷர்ரப்பை இகழ்வதற்காக அவர் எடுத்துள்ள ஆயுதமே, அந்த பாச விளையாட்டுக்கள்.

பாராளுமன்றத்தில் நேற்றும், அதற்கு முன்னைய தினமும் வாக்கெடுப்புக்கள் நடைபெற்றிருந்தன. நேற்று நடந்த வாக்கெடுப்பில் மு.காவின் தலைவர் எதிர்த்து வாக்களிக்க, மு.காவின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதற்கு முன்பு நடைபெற்றிருந்த வாக்கெடுப்பில் மு.காவின் தலைவர் எதிர்த்து வாக்களிக்க, ஏனையோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. கட்சியின் தலைவர் ஒரு பக்கம் ஓடுகிறார், உறுப்பினர்கள் ஒரு பக்கம் ஓடுகிறார்கள். இது பற்றியெல்லாம் தவம் வாயே திறக்கவில்லை.

அவர் எதனை கண்டித்து/கிண்டலடித்து, முகநூலில் பதிவிட்டுள்ளார் தெரியுமா? இந்த வாக்கெடுப்பில் பா.உறுப்பினர் முஷர்ரப் ஆதரவாக வாக்களித்துள்ளதையே! குறித்த வாக்கெடுப்பு நடந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே அந்த விமர்சிப்பை அவதானிக்க முடிந்தது. விமர்சனம் செய்துள்ள விடயம் சரி, செய்த நோக்கம் அரசியல் நோக்குடையது. அவரது கட்சியில் மாடும், வண்டிலும் வெவ்வேறு திசையில் ஓடுகிறது. அது பற்றியெல்லாம் சிந்திக்காதளவு, இவருக்கு அ.இ.ம.கா தலைவர் மீது பாசமா?

துறைமுக நகர சட்டத்தை எதிர்ப்பதை கடமையாக கூறிய தவம், தனது தலைவர் அதற்கு வாக்களிக்காது ஓடி ஒளிந்ததை பற்றி இன்று வரை வாய் திறக்கவில்லை. திறக்கவும் மாட்டார். மு.கா தலைவர் தவறிழைத்தால், அதனை எதிர்க்கும் திராணி இவர்களிடமில்லை. எமது பா.உறுப்பினர்கள் அரசுக்கு எவ்வளவு முட்டு கொடுக்கிறார்களோ, அதே வேலையையே தவம் போன்றவர்கள் ஹக்கீமுக்கு செய்கின்றனர். தங்களுக்கு சாதகமாக பக்கம் சாமரம் வீசுகின்றனர். இருவரும் செய்யும் வேலை ஒன்று தான். முதலில் தன் கட்சியினரை ( துறைமுக நகர சட்டத்துக்கு வாக்களித்த தலைவர் உட்பட ) விமர்சித்து விட்டு, மாற்று கட்சியினரை தவம் விமர்சிக்க வேண்டும். அதுவே பொருத்தமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team