தவிசாளர் கதிரைக்காக, ஆதரவுக்கு முஸ்லிங்களை தேடிய போது அவர்களை தமிழின துரோகியாக நோக்காதது ஏன்? - குமாரஸ்ரீ கேள்வியெழுப்புகிறார் ! - Sri Lanka Muslim

தவிசாளர் கதிரைக்காக, ஆதரவுக்கு முஸ்லிங்களை தேடிய போது அவர்களை தமிழின துரோகியாக நோக்காதது ஏன்? – குமாரஸ்ரீ கேள்வியெழுப்புகிறார் !

Contributors

நூருல் ஹுதா உமர்

தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு இனங்களின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இச்சபையில் தமிழராகிய நான் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களின் நியாயமான பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கும் போது என்னை தமிழ் இனத்தின் துரோகி என ஊரிலுள்ள சில தலமைகளோடு இணைந்து முத்திரை குத்த முனைகின்றார். இவ்வாறான இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பிரேரணைகளை எமது உயரிய சபைக்கு கொண்டுவந்து அதில் நான் நியாயத்தின் பால் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு சார்பாக செயற்பட்டால் எனக்கு தமிழினத்துரோகி என முத்திரையும் குத்தப்பட்டுகின்றது. இவருடைய இவ்வாறான செயற்பாட்டிற்கு எமது ஊரிலுள்ள சில ஆலயத்தலைவர்களும் படித்த புத்தியீவிகளும் சில துடிப்புள்ள இளைஞர்களும் துணைபோவது வேதனையாகவுள்ளது என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், காரைதீவு பிரதேசசபையின் அதிகாரம் இன்று தவிசாளரின் ஊழல் நிறைந்த கொடுங்கோல் ஆட்சிக்குள் சிக்குண்டு சிதைவடைந்து கிடக்கின்றது. சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஓரம் கட்டி தான் தோன்றித்தனமாக அவர் செயற்பட்டு வருகின்றார். சபை அமைத்த காலம் முதல் சபைக்கு வெளியேயும் சபைக்கு உள்ளும் இவருடைய செயற்பாடுகளை கண்டித்து வரும் என்மீது தவிசாளர் பல பொய்யான இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வருகின்றார். சபை ஆரம்பித்த காலம் முதல் பல வகையான ஊழல்கள் நிறைந்த ஆட்சியை செய்து பொதுமக்கள் மத்தியில் ஒரு கூட்டத்தை கூட நடாத்த முடியாமல் இருந்தவர், இன்று என்னை தமிழினத்தின் துரோகியாக பொதுமக்கள் மத்தியில் சித்தரித்து அதன் மூலம் தனக்கு மக்கள் பலம் இருக்கின்றது எனும் மாயையை உருவாக்க முனைகிறார்.

இன்னும் சில மாதங்களில் தனது ஊழல் ஆட்சி கவிழ்ந்துவிடும் நிலையை அறிந்து கடந்த 42 வது சபை அமர்வில் நடந்த விடயங்களை உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கின்றார். அரசியலிலும் சரி பொதுவாழ்விலும் சரி மனிதாபிமானத்தோடு செயற்படும் என்னை சபையிலிருந்து வெளியேற்றுவதற்கு நான் போட்டியிட்ட சுயேட்சைகுழுவின் சில செயற்பாட்டாளர்களும் உண்மை நிலையறியாமல் துணை நிற்கின்றனர்.

இச்சபை ஆட்சியை அமைக்கும்போது தற்போதுள்ள சபையின் தவிசாளர் கதிரைக்காக அப்போது முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்தவர்கள் தமிழினத்துரோகி அல்லது ஊர் துரோகிகளில்லையா? உபதவிசாளர் தெரிவில் முஸ்லிம் உறுப்பினர்கள் இருவருக்கும் சபையில் வாக்களித்தவர்கள் யார்? அல்லது அம்மன் கோயிலுக்கு அருகில் மாடு வெட்டும் மடுவம் அமைப்பதற்கு சபையில் அனுமதி வழங்கியவர்கள் யார்? அப்போதெல்லாம் இன்று என்னை தமிழின துரோகி என தூற்றுபவர்கள் எங்கே சென்றார்கள். மக்களுக்காகவே அரசியல் களமாடும் நான் அடங்குவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே. மனசாட்சியியுடன் மக்கள் பணியை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team