தவிசாளர் நௌசாத் அரசியல் செய்ய விரும்பாததால் குற்றவாளியானாரா…? - Sri Lanka Muslim

தவிசாளர் நௌசாத் அரசியல் செய்ய விரும்பாததால் குற்றவாளியானாரா…?

Contributors

“தவிசாளர் நௌசாத் கொரோனாவால் மரணித்தவர்களை சம்மாந்துறையில் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை” என்ற குற்றச் சாட்டு சிலரால் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வருகிறது. சம்மாந்துறை முஅல்லா மஹல்லா பிரதேசமானது அடக்கம் செய்வதற்கு சுகாதார பிரிவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை என்ற விடயம் மிகத் தெளிவாக இருக்க, தவிசாளர் நௌசாதை குற்றம் சாட்டுவதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. இவர் இக் குற்றத்தை சுமக்க குறித்த விடயத்தில் அரசியல் செய்ய விரும்பாமையையே பிரதான காரணமாக குறிப்பிட முடியும்.

சம்மாந்துறையில் கொரோனாவால் மரணமடைந்திருந்த நபரின் குடும்பம் தவிசாளர் நௌசாதை சந்தித்து இடம் வழங்குமாறு கோரியுள்ளது. அவர் குறித்த இடத்தில் அடக்கம் செய்ய முடியுமா என சுகாதார பிரிவினால் ஆய்வு நடக்கவுள்ளது. அவர்கள் பரிந்துரைத்தால் வழங்குகிறேன் என்ற அடிப்படையில் பதிலளித்துள்ளார். நியாயமான கருத்து தானே! கடந்த வியாழக்கிழமை நடைபெற்றிருந்த கள ஆய்வில் அக் குறித்த சம்மாந்துறை பிரதேசம் அடக்கம் செய்ய பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக தவிசாளர் நௌசாத்துக்கு அவ்விடத்தை வழங்க வேண்டிய தேவை எழுந்திருக்கவுமில்லை.

குறித்த குடும்பத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு அரசியல் வாதியாக தவிசாளர் நௌசாத் அனுமதி கடிதத்தை வழங்கியிருக்கலாம். அப்படி வழங்கியிருந்தாலும், அக் கடிதம் கள ஆய்வை செய்த குழுவிடமே பரிந்துரைக்கு சென்றிருக்கும். அவர்கள் ஏற்கனவே கள ஆய்வை செய்து பொருத்தமற்றது என அடையாளம் கண்டிருந்ததால் உடனடியாக நிராகரித்திருப்பார்கள். அக் குடும்பத்தினர் சில நாட்கள் அநியாயமாக அலைந்திருப்பார்கள். வேறு ஏதும் நடந்திருக்கப் போவதில்லை. அவர் அரசியல் செய்ய முனையாது, குறித்த விடயத்தை முறையாக அணுகியதால் இன்று குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.

எத்தனையோ தவிசாளர்கள், “நாங்கள் எங்களது பிரதேசத்தில் அடக்கம் செய்ய இடம் வழங்குகிறோம் “ என பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஏதாவது நடந்துள்ளதா? இன்றுவரை ஓட்டமாவடி பிரதேசம் மட்டுமே அடக்கம் செய்ய பொருத்தமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தவிசாளர் இடம் வழங்குவதற்கு தயாராக இருந்தாலும், குறித்த இடம் பொருத்தமானதாக இருந்தால் மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

தற்போது தவிசாளர் நௌசாத் மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகவே நோக்க முடிகிறது. அற்ப அரசியல் இலாபத்துக்காக சம்மாந்துறையின் மாண்பு பொது வெளியில் கேள்விக்குட்படுத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team