தாய்நாட்டுக்கு சர்வதேச புகழை ஈட்டித்தந்த ஈட்டி வீரனுக்கு கௌரமிகு வாழ்த்துக்கள் : ஹரீஸ் எம்.பி வாழ்த்து ! - Sri Lanka Muslim

தாய்நாட்டுக்கு சர்வதேச புகழை ஈட்டித்தந்த ஈட்டி வீரனுக்கு கௌரமிகு வாழ்த்துக்கள் : ஹரீஸ் எம்.பி வாழ்த்து !

Contributors

நூருல் ஹுதா உமர்

பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை இராணுவ வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளதுடன் டோக்கியோவில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தனது முதலாவது தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளது எனும் மகிழ்ச்சிகரமான செய்தி இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மட்டுமின்றி பெருமையான நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது என முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில் மேலும், எப் 46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் தங்கப் பதக்கம் வென்றுள்ளத்துடன் அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். இதன் மூலம் இலங்கை விளையாட்டுத்துறைக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் 1996 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக்கிண்ணத்தையும் அதன் பின்னர் டீ 20 உலக கிண்ணத்தையும் வென்ற இலங்கை கிரிக்கட் அணி சர்வதேச அரங்கில் தனது நாமத்தை பலமாக பதித்தது. அதே போன்ற ஒரு வரலாற்று நிகழ்வே இன்று நிகழ்ந்திருப்பதும்.

இந்த சாதனையை நிலை நாட்டிய வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் அவர்களுக்கும், அவரது பயிற்சியாளர்கள், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விளையாட்டு திணைக்கள உத்தியோகத்தர்கள் என இந்த வரலாற்று நிகழ்வின் பின்னணியில் இருந்த எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறந்த பொறிமுறைகளை உருவாக்கி அழகிய முறையில் செயலாற்றி வரும் தேசிய விளையாட்டு வீரர்களில் ஒருவரான நாமல் ராஜபக்ஸ அவர்களுக்கும் என்னுடைய விசேட பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team