தாய்லாந்து: பண மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை » Sri Lanka Muslim

தாய்லாந்து: பண மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை

_99411220_d959a624-3ead-4952-b7cb-39af7766cd5c

Contributors
author image

BBC

பண மோசடியில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

34 வயதான புடிட் கிட்டித்ரடிலோக், தன் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக அதிகளவிலான லாபம் திருப்பி அளிக்கப்படும் எனக்கூறி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

புடிட்டின் அறிவுறுத்தலின்படி, சுமார் 40,000 பேர் 160 மில்லியன் டாலர்களுக்கு மேலாக அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

புடிட், சட்டவிரோதமாக பலருக்கு முறைகேடாகக் வழங்கியதும், சுமார் 2,653 மோசடிகள் புரிந்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதினால், 13,275 ஆண்டுகள் சிறை தண்டனையானது, 6,637 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டது.

புடிட் இருவகைக் குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றுள்ளார். இவற்றில் ஒவ்வொரு வகையிலும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே ஒருவர் சிறையில் இருக்க முடியும் என்பதால் மொத்தமாக இவர் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்க வாய்ப்பில்லை.

புடிட் தாம் ஏற்பாடு செய்த கருத்தரங்குகளில் பங்கேற்றவர்களை, கட்டுமானம், அழகுக்கலை, பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்ய ஊக்குவித்தார் என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

முதலீடு செய்பவர்களுக்கு பெரும் லாபமும், புதிய உறுப்பினர்களை சேர்ப்போருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக பாங்காக் போஸ்ட் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

பிற பிரமிட் வடிவத் திட்டத்தையும் போலவே, இதிலும் புதிய பண முதலீடுகளைக் கொண்டு முதலில் சேர்ந்தவர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட புடிடுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதையடுத்து, பாங்காக் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரின் இரு நிறுவனங்களுக்கும் தலா 20 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரிந்த 2,653 பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் 17 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டை 7.5 சதவீத ஆண்டு வட்டியோடு திருப்பித் தரும்படி புடிட்டுக்கும் அவரது நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Web Design by The Design Lanka