தாருன் நுஸ்ரா: பாலியல் துஷ்பிரயோகம் இழைக்கப்பட்ட அநாதைச் சிறுமிகளுக்கான உங்கள் குரல்கள் எங்கே? » Sri Lanka Muslim

தாருன் நுஸ்ரா: பாலியல் துஷ்பிரயோகம் இழைக்கப்பட்ட அநாதைச் சிறுமிகளுக்கான உங்கள் குரல்கள் எங்கே?

noora

Contributors
author image

ஜாபீர் றாசி முஹம்மத்

அநீதியான சூழ்நிலைகளில் நீ நொதுமலாக இருந்தால்,நீ அநியாயக்காரனின் பக்கத்தை ஆதரிக்கிறாய் என்று அர்த்தம் -டெஸ்மண்ட் டுடு

நெஞ்சு திடுக்கிட்டுத் தெறிக்கிறது.கோபம் கனலாய்ப் பறக்கிறது.ஒரு கோழையின் பயமும்,ஒரு ஏழையின் இயலாமையும் என்னைக் கொன்று போடுகிறது.

” தூ மனிதனா நீ” என்று நானே என்னைத் துப்பிக்கொள்கிறேன்.

தாடி வைத்துக்கொண்டிருக்கிறாய்,கரண்டைக் காலுக்கு மேலே காற்சட்டை அணிகிறாய், வார்த்தைக்கு வார்த்தை ஸலபிஸம் பேசுகிறாய்,சமுதாய நீதி என்கிறாய்,சத்திய அரசியல் என்கிறாய்.ஆனால் அந்தப் பதினெட்டு அப்பாவி அநாதைகளுக்காக ஒருவார்த்தை கூடப் பேசாமல் விட்டாயே பாவி என்று என் கண்ணாடி என்னைப் பார்த்து பழிக்கிறது.

அரசியல்வாதியின் முகத்திரையைக் கிழிக்க என் கூரைக் கல்லில் தேய்த்து நீ கூராக்கினாய் இந்தப் பெண் அநாதைகளுக்காக ஒரு வார்த்தை உன்னால் எழுதாமல் போய்விட்டதே என்று எனது பேனை என் முகத்திரையை இப்போது கிழிக்கிறது.

உனக்கு நாவைத் தந்தேன்.உன் நாவின் முடிச்சுகளை அவிழ்த்தும் தந்தேன்.வார்தைகளைக் கோர்த்துப் பேசப் பழகித் தந்தேன் உனது நாவால் கர்ப்பழிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு வார்த்தை பேசினாயா என்று எனது இறைவன் என கழுத்தைப் பிடித்தால் இனி நான் என்ன செய்வேன்.

ஏன் நீ அமைதியாக இருக்கிறாய்?மரீனா தாஹா ரிபாய் ஒரு முஸ்லிம் பெண் என்பதனாலா?

ஏன் நீ அமைதியாக இருக்கிறாய்?தாருன்னுஸ்ராவை இயக்கும் மரீனா ரிபாய் ஒரு தௌஹீத்வாதி என்பதனாலா?

ஏன் நீ அமைதியாக இருக்கிறாய்?

தாருன் நுஸ்ராவில் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட 18 பெண் பிள்ளைகளும் உனது பிள்ளைகள் இல்லை,அநாதைப் பிள்ளைகள் என்பதனாலா?

ஏன் நீ அமைதியாக இருக்கிறாய்? பாலியல் துஷ்பிரயோகம் நடந்தது ஒரு முஸ்லிம் தஃவா அமைப்பில் இயங்கும் அநாதை இல்லம் என்பதனாலா?

ஏன் நீ அமைதியாக இருக்கிறாய்? ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் அபச்சாரத்தை எழுதினால வெளிநாட்டுப் பணம் உனக்கும் வராமல் போகும் என்பதனாலா?

ஏன் நீ அமைதியாக இருக்கிறாய்?இது வெளியே வந்தால் பொது பல சேனா உன்னைச் சந்திக்கு இழுக்கும் என்ற பயத்தினாலா?

இல்லை உனக்கு நடந்தது என்ன என்று தெரியாதா?

தெரியாவிட்டால சொல்கிறேன் சுருக்கமாக. பின்னர் ஆவணங்களோடு விரிவாக.

டாக்டர் மரீனா தாஹா ரிபாய் கொழும்பில் ஒரு கண்வைத்தியர்.தௌஹீத்வாதி.பிரபலமான ஒரு பெண் புள்ளி.தஃவாப் பிரச்சாரம் தீயாய்ச் செய்பவர்.

அவர் பெண் பிள்ளைகளுக்கென்று ஒரு அநாதை விடுதி நடத்தி வருகிறார். அநாதைகளின் பெயரைச் சொல்லிச் சொல்லி காசு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது அவர்களுக்கு.அது வேறு கதை.

டாக்டர் மரீனாவின் தாருன் நுஸ்ராவில் இருக்கும் 18 பெண் குழந்தைகளைப் பராமரிக்க மரீனாவால் நியமிக்கப்பட்ட, மரீனாவிற்கு விசுவாசமான ஒரு பெண்ணின் உடந்தையோடு அப்பெண்ணின் 62 வயதான கணவன் அந்த அப்பாவி பெண் அநாதைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். ஒரு 12 வயது சிறுமி கர்ப்பழிக்கப்பட்டிருக்கிறார்.

அந்தப் பெண்ணும்,கணவனும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடர்கிறது.அந்த அனாதைப் பிள்ளைகளின் சார்பாகப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் அநாதைகள்.

இந்தச் செய்தியை எந்த முஸ்லிம் ஊடகமும்

வெளிப்படையாக எதையும் வெளிக்கொணரவில்லை. எந்த தஃவா அமைப்புகளும் இதைப் பற்றிப் பேசவில்லை.சில பத்திரிகைகளிடம் இவற்றைப் பற்றிப் பிரபலமான முஸ்லிம் நபர்கள் எழுத வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைப் பற்றி முக நூலில்பேசியவர்கள் எல்லாம் ஷீயாப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதனால் இது ஷீயாக்களின் சதி என்று பிரச்சாரம் செய்து மூடி மறைக்கப்படுகிறது.

தங்களை தஃவா அமைப்பு என்று சொல்லிக் கொள்பவர்கள், தூர நோக்கோடு நடப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், தௌஹீத்வாதிகள் என்போர் யாரும் பேச முன்வரவில்லை.இது வித்யாவின் வழக்கு மாதிரி சமூகத்தின் கவனத்தை அடையாததால் குற்றமிழைத்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். எந்த விடுதியில் அந்த அனாதைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்களோ அந்த விடுதிக்கு மீண்டும்அனுப்பப்பட்டிருக்கிறார்கள் அந்த அப்பாவி அனாதைகள்.

குற்றவாளிகளுக்காகப் பிரபலமான சட்டத்தரணிகள் ஆஜராகுகிறார்கள்.பணம் பாதாளம் வரையும் செல்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அப்பாவி அனாதைகள் குரலில்லாமல் தவிக்கிறார்கள்.

‘எனது மகள் பாத்திமா தவறு செய்தாலும் கையை வெட்டுவேன்’ என்று சொன்ன மாநபியின் சந்ததிகள் நாம். இன்று தவறு செய்தவர்களை மூடி மறைக்க முற்படுகிறோம்.

அந்த அநாதைப் பெண்களுக்கு நீதி வேண்டும். குற்றவாளி முஸ்லிம் என்றாலும் காபிர் என்றாலும் அவனுக்கு எதிராக முஸ்லிம்கள் நாங்கள் போராடுவோம் என்பதைப் பொது பல சேனாவுக்குப் புரிய வைக்கவேண்டும். குற்றமிழைத்தவர் யாராக இருந்தாலும் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதிகாரம்,பிரபலம்,பணம் என்பவற்றை வைத்துக் கொண்டு தப்பிக்க நினைக்கும் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.

தாயிகளே,தௌஹீத்வாதிகளே, சமூக ஆர்வலர்களே, ஷூரா சபையினரே, உலமாக்களே

பாலியல் துஷ்பிரயோகம் இழைக்கப்பட்ட குரலற்ற அநாதைச் சிறுமிகளுக்கான உங்கள் குரல்கள் எங்கே?

Web Design by The Design Lanka