திகன கலவரத்தில் அடிவாங்கிய முஸ்லிம்களை குற்றவாளியாக்கிய ஜனாதிபதி..!! » Sri Lanka Muslim

திகன கலவரத்தில் அடிவாங்கிய முஸ்லிம்களை குற்றவாளியாக்கிய ஜனாதிபதி..!!

nabuhan

Contributors
author image

ஊடகப்பிரிவு

திகன கலவரத்தை, “ சிங்கள-முஸ்லிம் ” கலவரமென ஜனாதிபதி லண்டனில் கூறியுள்ளதன் மூலம், திகன கலவரத்தில் ஓடி ஒளிந்தும், அடிவாங்கிய, அப்பாவி முஸ்லிம்களும், குறித்த கலவரத்தில் ஈடுபட்டது போன்ற செய்தியை சர்வதேசத்துக்கு கொண்டு செர்த்துள்ளாரென பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்…

ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு உரையாற்றுகையில், சில தினங்களுக்கு முன்னர் திகனையில் இடம்பெற்ற கலவரத்தை சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இடம்பெற்ற ஒரு கலவரமாக குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக என்ன நடைபெற்றாலும், தனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பது ஜனாதிபதியின் வழமை. முஸ்லிம்களின் பெரும் ஆதரவோடு ஜனாதிபதி ஆசனத்தில் உட்கார்ந்த, ஜனாதிபதி மைத்திரிப்பால இவ்வாறு செயற்படுவதானது முஸ்லிம்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும். தற்போது லண்டனில் கூறியிருப்பதை பார்க்கின்ற போது, அவர், தனது வழமையான மௌனத்தை கடைப்பிடிப்பதே சிறப்பு போன்று எண்ணத் தோன்றுகின்றது.

திகனையில் இடம்பெற்றது சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல. அவ்வாறு கூறும் பட்சத்தில், முஸ்லிம்களும் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற அர்த்தத்தை வழங்கிவிடும். திகனை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் முற்று முழுதாக பேரினத்தை சேர்ந்தவர்களே. இது சர்வதேசமே உற்று நோக்கிய ஒரு விடயம் என்பதால், சர்வதேசத்தில் முஸ்லிம்கள் மீதான தவறான எண்ணத்துக்கு காரணமாக அமைந்து விடும்.

இவற்றையெல்லாம் நன்கு கவனத்தில் கொண்டு, ஜனாதிபதி மைத்திரி, தனக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Web Design by The Design Lanka