திருகோணமலை சண்முகா விவகாரம்: மெல்லத் தமிழ் இனிச் சாகும்.... » Sri Lanka Muslim

திருகோணமலை சண்முகா விவகாரம்: மெல்லத் தமிழ் இனிச் சாகும்….

trinco

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Sajeeth Ahamed


திருகோணமலை சண்முகா விவகாரத்தில் மூக்கினை நுழைக்க சில காரணங்கள் மாத்திரமே இருக்கின்றன. ஹபாயா விடயத்தினை பூதாகரமாக்கி சேலை கட்டுவதுதான் தமிழர் பண்பாடு என்பதெல்லாம் விஜய் பட டயலாக்குகளுக்கு மட்டுமே கட்டுப் படியாகும். இது ஒரு புறமிருக்க, அதென்ன கொச்சை தமிழ்? கொஞ்சம் விவரமா சொல்லத் தொடங்கினால் பத்தி பெருத்துவிடும். இருப்பினும் சில சமாச்சாரங்களைத் தொட்டு தமிழை வாழ வைக்கலாம் என நினைக்கிறேன். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்றான் பாரதி. அந்த மகாகவியின் வாயில் சீனியினை அள்ளிப் போட வேண்டும்.

சிவன் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தான். அத்தோடு வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென்குமரி வரை தமிழ் பரந்து பாடித்திரிந்தது என்பதே வரலாறு. எக்கச்சக்கமான குழப்படிகள் நிறைந்த இவ்வரலாற்றில் காலங்களே உங்கள் ஆதாரங்கள். சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் போதும்டா சாமி வகுப்பெடுக்கிறது.

இனி,

இப்படியான காலங்களில் சமூகத்தை பிரதிபலிக்கக் கூடிய இலக்கியங்கள் எல்லாம் சாரமாரியான சுத்த தமிழில் தோன்றிக் கிழித்தன. ‘கருங்கால் வேம்பின் ஒன்பு யாணர்’ எனும் பாடலை பத்துப் பத்து விதமாக விளக்கம் கொடுத்த காலம் இத்தவரைக்கும் தொடர்கிறது. தமிழ் மொழியோடு வடமொழி கல்யாணம் முடித்து மணிப்பிரவாள நடை எனும் மொழியினைத்தான் இந்த நாள் வரைக்கும் சுத்த தமிழ் என பீற்றிக் கொண்டிருக்கிறோம். கிறுகி, மறுகா, திரும்பி எல்லாம் கிழக்கின் தனித்துவமான வட்டாரச் சொற்கள். பரீட்சை தாள்களில் ‘கிறுகி’எந்த கிளைமொழிச் சொல் என கேள்வி வந்தால், சுத்த தமிழ் எனப் பிதட்டி விடை எழுதாமல் விரண்டு விடுவீர்களோ?

நிற்க,

முஸ்லிம்கள் வளர்த்த தமிழ் வரலாறு பெரிது ஐயா. ஆறுமுக நாவலர் வெள்ளாளச் சாதியில் நின்று தமிழ் பண்பாட்டை பிளவுபடுத்தி, தமிழினத்திற்கு வைத்த ஆப்பினை எங்கு போய் முறையிடுவது? தொன்று தொட்டு முஸ்லிம்கள் செய்த தமிழ் இலக்கிய முயற்சிகள் வரலாற்றின் அழியாத் தடங்கள். எங்களைப் பார்த்து கொச்சை தமிழ் எனச் சொல்லாதீர்கள்.

உம்மனைவரை விடவும் மிகச் சிறப்பாக தமிழ் பேசுவோம். தமிழ் மொழித்தினப் போட்டிகளில் தமிழே வாழ்வாக எண்ணி பல ஆண்டுகள் தொடராக பயிற்சி பெற்று வில்லுப் பாட்டு, நாட்டார் பாடல், விவாதம் என அகில இலங்கை ரீதியாக முதலாம் இடங்களைப் பெற்று தமிழின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறோம். இடைக்கிடை நீங்கள் மாகாண மட்டத்தில் வைத்த ஆப்புகளைத் தவிர நாங்களே எங்கள் தமிழை வளப்படுத்தியிருக்கிறோம்.

எங்கள் தமிழ் கொச்சை தமிழ் அல்ல. கொச்சை என்பதை நாம் பட்டியல் படுத்தினால் நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்வீர்கள். அவ்வளவு பாரதூரமாக பம்பரம் கட்டுவோம். இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். நான் பணி புரியும் நிறுவனத்தில் தமிழ் சகோதரிகளும் பணி புரிகின்றனர். விழாக்கள் நடைபெறும் போது, நாற்பது இறைச்சி பெட்டீஸ் வாங்கினால் தேடிப் பிடித்து, பத்து முட்டை பெட்டீஸ் வாங்குவோம்.

அதுவே தமிழுக்கும் அதன் பண்பாட்டிற்கும் நாம் கொடுக்கும் மரியாதை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை மறந்து விடாதே தமிழினமே. இந்த அசிலில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து உம்மோடு கும்மியடிப்பது பாதாள கிணற்றை பார்த்துக் கொண்டே விழுவதற்கு ஒப்பாகும். படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசான்களே இந்து எனும் கோஷத்தில் இனவாதம் பேசுவதா? அடச் சீ…. கனவு நிஜமாகும். மெல்லத் தமிழ் இனிச் சாகும்…

Web Design by The Design Lanka