தீவிரவாதி பக்ரூதினை கைது செய்தது எவ்வாறு? தமிழக அரசு விளக்கம் - Sri Lanka Muslim

தீவிரவாதி பக்ரூதினை கைது செய்தது எவ்வாறு? தமிழக அரசு விளக்கம்

Contributors

தீவிரவாதி பொலிஸ் பக்ரூதினை கைது செய்தது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தீவிரவாதி பொலிஸ் பக்ருதீனை கடந்த 4ம் திகதி பொலிசார் கைது செய்தனர். அதன் பின்னர் பக்ருதீன் கைது விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.அப்துல் ரஹீம் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் என்னுடைய நண்பர் பொலிஸ் பக்ருதீனை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை பொலிசார் உறுதி செய்ய மறுக்கின்றனர். எனவே அவரை என்கவுண்டர் மூலம் கொலை செய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளனரோ என்ற அச்சம் உள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, பக்ருதீனை கைது செய்துள்ளதாகவும், கைது குறித்து பக்ருதீனின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறியிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி முன்பு கடந்த 23ம் திகதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பக்ருதீன் கைது சம்பவத்தில் தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே தமிழக பொலிசார் மீது நீதிமன்றம் அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், பொலிஸ் பக்ருதீனை இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன், வீரகுமார் ஆகியோர் கைது செய்யவில்லை.

அவர்கள் 3 பேரும் பக்ருதீனை பிடித்து வைத்திருந்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சென்று, பக்ருதீனை கைது செய்தார். அதே நேரம் பக்ருதீனை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு சன்மானம் வழங்கியது.

ஆனால் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு சன்மானம் வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறுவது தவறு. அண்ணாதுரைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொலிஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டபோது, அவரது உடலில் காயம் எதுவும் இல்லை என்றும் பக்ருதீன் கண்ணில் உள்ள காயத்துக்கு பொலிஸ்தான் காரணம் என்று மாஜிஸ்திரேட்டிடம் அவர் புகாரும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் பக்ருதீன் கைது செய்யப்படும்போது பொதுமக்களிடம் சாட்சி கையெழுத்து வாங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. பக்ருதீன் தீவிரவாதி என்பதால் பொதுமக்கள் சாட்சி கையெழுத்திட முன்வர விரும்பவில்லை.

அக்டோபர் 4ம் திகதி பக்ருதீன் கைது செய்யப்பட்டது குறித்து மறுநாள்தான் அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த காலதாமதத்துக்கு காரணம் பக்ருதீனின் கைது குறித்த தகவலை அவரது உறவினர்கள் பெற மறுத்துவிட்டார்கள். அதனால் அவரது தாயாருக்கு காலதாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே பக்ருதீன் கைது சம்பவத்தில் எந்த விதிமுறைகளையும் பொலிசார் மீறவில்லை என்றும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விசாரணையானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team