துபாயில் சாரதிகள் இல்லாத தானியங்கி கார்கள் » Sri Lanka Muslim

துபாயில் சாரதிகள் இல்லாத தானியங்கி கார்கள்

car

Contributors
author image

World News Editorial Team

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேட்டரி மூலம் இயங்கும் டிரைவர் இல்லா தானியங்கி கார்களை தங்களது நாட்டில் ஓடவிட துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.

 

இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ’கூகுள்’ தற்போது புதிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் கட்டுப்பாடுகளோ, ஸ்டீரிங் வீலோ, பெடல்களோ இருக்காது. அதற்கு பதிலாக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் பொத்தான்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தானியங்கித் தொழில்நுட்பத்தை மக்கள் ஏற்கும் வகையில் இந்த கார் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இருவருக்கான இருக்கைகள் கொண்ட இந்த கார் மின்சார சக்தியில் இயங்கும்.

 

ஆரம்பகட்டமாக மணிக்கு 25 மைல் வேகத்தில் செல்லும் விதமாக தயாரிக்கப்படும் இவ்வகை கார்களில் பாதசாரிகளுக்குத் தீங்கிழைக்காத வண்ணம் முன்புறம் பஞ்சு போன்ற மென்மையான மேற்புறமும், நெகிழ்வான கண்ணாடியும் பயன்படுத்தப்படும். லேசர் மற்றும் ரேடார் சென்சார்களைப் பயன்படுத்தி கூகுள் சாலை வரைபடத்தின் துணையுடன் இயங்கும் இந்த கார் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

 

இதுவரை முழுமையான தானியங்கி வசதி கொண்ட கார் எதுவும் சந்தைக்கு வராத நிலையில், தற்போது கணினி மென்பொருள் மற்றும் கைபேசி உலகில் கொடிகட்டி பறக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுபோன்ற தானியங்கி கார்களை ரகசியமாக தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில், இத்தகைய தொழில்நுட்பத்தின் மூலம் தயாராகும் பேட்டரியால் டிரைவர் இல்லா தானியங்கி கார்களை துபாய் சாலைகளில் சோதனை முறையில் இயக்கிப் பார்த்து, இந்த திட்டம் வெற்றி பெற்றால் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் இவற்றை பெரிய அளவில் பயன்படுத்த துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதன் மூலம் எரிபொருள் செலவும் மிச்சமாகும். துபாய் நகரமே ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக மாறிவிடும் என அந்நாட்டின் போக்குவரத்து துறை உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

இத்தகைய தானியங்கி கார்களுக்கென சாலைகளில் தனி பாதைகளை அமைத்து, முக்கிய கடைவீதிகளில் இருந்து விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பொது போக்குவரத்து மையங்களுக்கு மக்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க முடியும். இதன் விளைவாக வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தேவையான இட நெருக்கடியுல் பெருமளவில் குறையும். இவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன சென்சார்களின் உதவியால் சாலை விபத்துகளும் வெகுவாக குறையும் என நம்பப்படுகிறது.

Web Design by The Design Lanka