துப்பாக்கி முனையில் அரசியல் கைதிகள் மிரட்டல் - லொஹான் தொடர்பில் சட்டமா அதிபரின் உத்தரவு..! - Sri Lanka Muslim

துப்பாக்கி முனையில் அரசியல் கைதிகள் மிரட்டல் – லொஹான் தொடர்பில் சட்டமா அதிபரின் உத்தரவு..!

Contributors
author image

Editorial Team

அநுராதபுரம் சிறைக்குள் அத்துமீறி தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி அச்சறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெற்று விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தினால் இந்த உத்தரவு காவல்துறைமா அதிபருக்கு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அண்மையில் அத்துமீறிப் பிரவேசித்து இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் மீது தனது துப்பாக்கியை வைத்து அச்சறுத்திய  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்மையில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 08 கைதிகள் இணைந்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஊடாக இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதை முடிவுசெய்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, யசந்த கோத்தாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் தலைமையிலான குழு இன்று கூடியது.

கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் இதன்போது ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் மனுதாரர்களின் பாதுகாப்பு கருதி அநுராதபுரம் சிறையிலிருந்து அவர்கள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்  சிறைச்சாலைத் திணைக்கள ஆணையாளருக்கும் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான ஆட்சேபனை இருப்பின் அதனை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிரதிவாதிகளான  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அநுராதபுரம் சிறை பொறுப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை வழங்கும்படியும் அறிவித்துள்ளது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கமைய, சிறை அதிகாரிகளுக்கும் கூட சிறைக்குள் துப்பாக்கியை எடுத்துச்செல்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் சிறைக்குள் துப்பாக்கியை எடுத்துச் சென்றமை கடும் குற்றம் என்று நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களை வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறைகளுக்கு மாற்றும்படி உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார். இதன்போது குறுக்கீடு செய்த பிரதி சொலிசிடர் ஜெனரல் ரஜீவ குணதிலக்க, மனுதாரர்கள் இடையே இருவர் கொழும்பிலுள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றம் பெற விருப்பம் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஏனைய கைதிகளின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்களை மாற்ற வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டதாக அரச சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார். இந்த விடயங்களைக் கவனத்திற்கெடுத்த உச்சநீதிமன்றம், மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team