துரிதப் படுத்தப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை..! - Sri Lanka Muslim

துரிதப் படுத்தப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை..!

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக அதன் விசாரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கண்டி சிறிமல்வத்தயில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

குண்டசாலை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சேவை நிலையம் மற்றும் பலநோக்குக் கட்டிடத்தை திறந்து வைக்கும் வகையில் இந்த வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இங்கு அமைச்சர´ மேலும் உரையாற்றுகையில் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக பாராளுமன்ற விவாதத்திற்கும் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சில குற்றச்செயல்கள் தொடர்பில் குறுகிய காலத்திற்குள் விடயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். எனினும் சிக்கலான சம்பவம் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துவதற்கு பாதுகாப்புத் தரப்பிற்கு பல வருடங்கள் எடுக்கலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள போதிலும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தாக்குதலுக்கு பின்னணியாக இருந்து திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக உளவுப்பிரிவு உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அப்போதைய அரசாங்கத்தால் தவிர்த்திருக்க முடியும். வெளியாகும் கருத்துக்களுக்கு அமைய இதனை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல சுட்டிக்காட்டினார்.

இந்தத் தாக்குதலைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இரண்டு வருடங்களின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சி விரல் நீட்டுவது கேலிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team