தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும். – ஜனாதிபதி » Sri Lanka Muslim

தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும். – ஜனாதிபதி

mai6

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கஷ்டமான பணிக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அந்த சவாலை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தலவை விளையாட்டு மைதானத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மகாவலி எச் வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

என்னதான் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டபோதும் எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத பணிகளை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, அதன்மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் பெரும்பான்மை விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மொரகஹகந்த திட்டத்தின் கீழ் முன்னைய அரசர்களின் காலத்திற்கு பின்னர் அதிக எண்ணிக்கையான குளங்கள் இப்போது ஒரேயடியாக நாட்டில் புனர்நிர்மானம் செய்யப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம் இப்பிரதேச விவசாய சமூகத்தின் வாழ்க்கை சுபீட்சம் அடையுமெனத் தெரிவித்தார்.

இதுவரை எந்தவொரு அரசாங்கத்திடம் இருந்தும் தீர்வு கிடைக்காத குப்பை பிரச்சினைக்கு இந்த நாட்டில் இதற்கு பின்னர் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லாத வகையில் நிலையானதொரு தீர்வை அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த வகையில் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றில் தயாரிக்கப்படும் கூட்டு உரம் விவசாய சமூகத்திற்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு ஒரு லட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மகாவலி எச் வலயத்தில் விவசாய சமூகத்திற்கு 6200 காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நூறு பேருக்கு ஜனாதிபதி அவர்களினால் காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் அமைச்சர்களான பி.ஹெரிசன், சந்ராணி பண்டார, பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, இந்திக்க பண்டாரநாயக்க, சாராநாத் பஸ்நாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் சந்திம மஹிந்த சூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து எப்பாவல கூட்டுறவு நிலைய வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், தான் அங்கு வழங்கள் அதிகாரியாக சேவை செய்த காலத்தில் தன்னுடன் கடமையாற்றிய ஊழியர்களை சந்தித்து சுமுகமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பணிக்குழாம் உறுப்பினர்கள் விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் சந்திரசேகர ஒரு விசேட நினைவுச் சின்னத்தையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தனர்.

ஜனாதிபதி அவர்கள் அங்கு சேவை செய்த காலத்திற்குரிய சுயவிபரக் கோவையும் தலைவரினால் ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் பணிக்குழாமினருடன் ஒரு புகைப்படத்திற்கும் தோற்றினார்.

Web Design by The Design Lanka