தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்..! - Sri Lanka Muslim

தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலை, கலாச்சார பீடத்தின் தற்போதைய பீடாதிபதி சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவர் அதே பல்கலைக்கழகத்தின் மாணவராவார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி உயர்வு 09.08.2021 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும். இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் சமூகவியல் முதற்தொகுதி மாணவராக கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, முதல் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர். பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் இள (43) வயதில் உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவுக்குழுவின் பேரவைக்குழுவிற்கு தெரிவுக் குழுவினால் சமர்ப்பித்த பட்டியலில் முதலாம் இடத்தை இவர் தக்கவைத்திருந்தார் என்பதுடன் இவர் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team