தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு நேரடிக் களத்தில்..! - Sri Lanka Muslim

தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு நேரடிக் களத்தில்..!

Contributors

லொஹான் ரத்வத்தே தொடர்பில் பெரும் சர்ச்சைக்குள்ளான விவகாரத்தை விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேரடியாக களமிறங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இந்த சம்பவங்களை விசாரிக்க செப்டம்பர் 15ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், உண்மையை வெளிக்கொணர சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி அநுராதபுரம் சிறைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரை மண்டியிட செய்து, தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் கொழும்பு அரசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், லொஹான் ரத்வத்தேவை உடன் கைது செய்ய வேண்டும் எனவும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேரடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து பொறுப்பான சாட்சிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூடிய விரைவில் விசாரணைக்கு அழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team