தென் ஆப்ரிக்க அணியை வீ ழ்த்தி முதன் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது பாகிஸ்தான் அணி - Sri Lanka Muslim

தென் ஆப்ரிக்க அணியை வீ ழ்த்தி முதன் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது பாகிஸ்தான் அணி

Contributors

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது பாகிஸ்தான் அணி. நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஒரு ரன் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றிருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று போர்ட் எலிசபெத்தில் நடந்தது. “டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.

ஷெசாத் சதம்:

மழை காரணமாக போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு ஜாம்ஷெத் (2), ஹபீஸ் (8), கேப்டன் மிஸ்பா (12) ஏமாற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெசாத், தனது 3வது சதம் (102) கடந்து வெளியேறினார். மக்சூத் 42 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 45 ஓவரில் 262 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன், 6 விக்கெட் வீழ்த்தினார்.

ஆம்லா ஆறுதல்:

எட்டக் கூடிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித் (1) அதிர்ச்சி கொடுத்தார். குயின்டன் டி காக் 47, காலிஸ் 6 ரன்கள் எடுத்தனர். டிவிலியர்ஸ் 45 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ஆம்லா (98) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து திரும்ப, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ஜுனைடு கான் வீசிய இந்த ஓவரில் முதல் பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்தார்.

2வது பந்தில் டுமினி (15) அவுட்டானார். அடுத்த மூன்று பந்தில் 2 ரன்கள் கிடைத்தன. கடைசி பந்தில் 6 ரன் தேவை என்ற நிலையில், உதிரியாக 4 ரன்கள் வந்தன. முடிவில், 45 ஓவரில், தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 261 ரன்கள் மட்டும் எடுக்க, பாகிஸ்தான் அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது. மில்லர் (2), மெக்லாரன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஜுனைடு கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தனது 500வது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற தென் ஆப்ரிக்க அணி, தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. இதையடுத்து, ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. தவிர, இரு அணிகள் மோதிய ஒருநாள் தொடர்களில், பாகிஸ்தான் அணி கோப்பை வெல்வது, கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன் முறை.

Web Design by Srilanka Muslims Web Team