தென் சூடான் எதிர்த்தரப்புகள் அமைதிப் பேச்சுக்கு உடன்பாடு - Sri Lanka Muslim

தென் சூடான் எதிர்த்தரப்புகள் அமைதிப் பேச்சுக்கு உடன்பாடு

Contributors

தென் சூடானின் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நெருங்கிய எதிர்காலத்தில் எத்தியோப்பியாவில் ஆரம்பமாகும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் தென் சூடானில் கடும் மோதல் நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

தென் சூடான் ஜனாதிபதி செல்வா கிர் மற்றும் அவரால் பதவி விலக்கப்பட்ட துணை ஜனாதிபதி ரிக் மச்சருக்கு ஆதரவானோருக்கு இடையிலான மோதல் இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இந்த மோதல்களில் குறைந்தது 1000 பேர் கொல்லப்பட்டதோடு 121,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மோதலை முடிவுக்கு கொண்டு வர கிழக்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமைக்குள் கிளர்ச்சியாளர் கள் யுத்த நிறுத்தத்தை கடைப் பிடித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்பா விட்டால் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உகண்டா ஜனாதிபதி யவ்ரி முஸவெளி கடந்த திங்கட்கிழமை எச்சரித்திருந்தார்.

அழுத்தங்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு குழுவொன்றை அனுப்புவதாக கிளர்ச்சித் தலைவர் மச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் முன்னர் மோதலை நிறுத்துமாறு தமது படையினருக்கு உத்தரவிடப்போவதில்லை என குறிப்பிட்டார். அதிகாரப் போட்டி காரணமாக ஜனாதிபதி கிர்ரினால் துணை ஜனாதிபதி மச்சர் பதவி நீக்கப்பட்டார். அவர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார். தலைநகர் ஜுபாவில் ஆரம்பமான மோதல் தற்போது நாடுபூராக பரவியுள்ளது.

இதில் முக்கியத்துவம் வாய்ந்த பொர் நகரில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் தொடர்கிறது. மச்சர் படையினரிடம் நகரம் வீழ்ந்துவிட்டதாக அரச தரப்பு உறுதி செய்துள்ளது. பொர் நகரில் இருந்து மக்கள் அவரியல் நகரை நோக்கி வெளியேறி வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்த பெரும்பாலானவர்கள் வெட்டவெளியில் உறங்குவதாகவும் சுத்தமான நீர் மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் காணப்படுவதாகவும் மருத்துவ நன்கொடை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த டேவிட் நாஷ் என்பவர் விபரித்துள்ளார்.

இதனிடையே தென் சூடானின் பல எல்லைப் பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றியதாக சூடான் இராணுவம் அறிவித்துள்ளது.பொர் நகரை கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் ஜுபாவை நோக்கி முன்னேறி வருவதாக கிளர்ச்சித் தலைவர் மச்சர் எ. எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

அட்டிஸ் அபாபாவில் இடம்பெற விருக்கும் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை வெற்றி அளித்தாலேயே தாக்கதல்கள் நிறுத்தப்படும் என்றும் தாம் அமைதிப் பேச்சுவார்த்தை பங்கேற்பேன் என்றும் மச்சர் குறிப்பிட்டுள்ளார்.மச்சரின் கிளர்ச்சிப் படையில் அவருக்கு விசுவாசமான இராணுவத்தினர் மற்றும் வெள்ளை இராணுவம் என்ற இனப் பிரிவு ஆயுதக் குழுவும் உள்ளடங்கு கின்றனர்.

இந்நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை சிக்கலாக அமையும் என அவதானிகள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப் பகிர்வு ஆலோசனையை ஜனாதிபதி கிர் முற்றாக நிராகரித் துள்ளார். தென் சூடான் உலகில் மிக இளைய நாடாகும். இரண்டு தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு சூடானிலிருந்து தென் சூடான் விடுதலை பெற்றது.(tk)

Web Design by Srilanka Muslims Web Team