தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஆணையாளரை சந்திக்கச்சென்ற போது - Sri Lanka Muslim

தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஆணையாளரை சந்திக்கச்சென்ற போது

Contributors
author image

Mujeeb Ibrahim

கடந்த புதன்கிழமை பொதுநல விடயமொன்று கருதி தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஆணையாளரை சந்திக்கச்சென்றிருந்தேன்.
அது Public day என்ற படியால் இருபது பேருக்கு மேல் வரிசையில் காத்திருந்தார்கள்.

வேறொரு தினமென்றால் அவரது அறையிலேயே சந்தித்திருக்கலாம், இவ்வளவு பேரை கடந்து சந்தித்து முடிய எந்நேரமாகுமோ என்றெல்லாம் மனசுக்குள் எண்ணிய படி நானும் ஒரு சீட்டில் அமர்ந்த போது காலை 11:10.
அது மாநகரசபையின் கூட்டங்கள் நடைபெறுகிற அறை.

மாநகர முதல்வரின் அலங்கரிக்கப்பட்ட ஆசனம் ஒரு பக்கத்தில் ஒதுக்குப்பட்டு கிடக்கிறது.
உறுப்பினர்கள் அமர்ந்து கூட்டம் நடாத்துகிற அந்த ஓவல் வடிவிலான மேசையை சுற்றி மாநகரசபையின் உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆணையாளர் மக்கள் முறைப்பாடுகளை விசாரித்து தீர்வுகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
அதற்கு அண்மையில் நிரலாய் அமைந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தோர், ஒவ்வொருவராய் ஆணையாளரை நோக்கி நகரும் போது வரிசையும் நகர்ந்து கொண்டிருந்தது.
இரண்டாவது வரிசையிலிருந்த நான் முதல் வரிசைக்கு வந்தேன்.

பிறகு எனக்கு முன்னே ஐந்து பேர் என்ற நிலை வந்தபோது மாநகர சபை ஊழியர் ஒருவர் அழகான தட்டொன்றில் Nescafe கொண்டுவந்தார்!!!
ஆச்சரியமாகத்தான் இருந்தது!
முன்னரெல்லாம் அரச காரியாலயமொன்றில் வேலை முடிக்க சென்றால் ஒரு கோப்பை(file) எடுப்பதற்கு அரசபணியாளர்கள் காட்டுகிற எடுப்பும், ஞமலிகள் போல பாய்கிற பாய்ச்சலும் ஞாபகம் வந்தது.

Nescafe இனை குடித்துவிட்டு குவளையினை என்னசெய்வது என்று யோசிக்கிற போது பக்கத்திலிருந்த பெண்ணொருவர் கீழே வையுங்கள் அவர்கள் எடுத்துப்போவார்கள் என்றார்.
அந்தப்பெண்ணுக்கு ஒரு நாற்பது வயதுகடந்திருக்கும் வறுமையின் கோலம் தலை, முகம் மற்றும் ஆடைகளில் தெரிந்தது.

நானும் குவளையினை கீழே வைத்தேன்.
அந்த பெண்ணின் முறையும் வந்தது.
ஆணையாளரிடம் சென்றார், அவர் கதிரையில் அமர்ந்து தனது விடயத்தை சொல்லிக்கொண்டிருந்த போது அவருக்கு அருகில் ஒரு அஜானுபாகுவான இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.

அவனது புஜங்கள் இரண்டும் பருத்து தடித்திருந்தன.
Body building செய்திருப்பான். வறுமையிலும் அதற்கெல்லாம் அம்மா பணம் தேடி கொடுத்திருப்பாள் போலும்.
ஆணையாளர் பேசத்தொடங்கினார்…

” இவ்வளவு வாட்டசாட்டமான இளைஞனாக இருக்கிறாய், இங்கே குப்பை அள்ளுவதற்கும், காண் தோண்டுவதற்கும் வேலை கேட்டா அம்மாவை கூட்டிவந்திருக்கிறாய்?, food city அல்லது Cargill’s இல் ஒரு வேலைக்கு முயற்சி செய்யலாம்தானே”
“உன்னிடம் ஓயெல் இருக்கிறதா”

“………”
“Driving license இருக்கிறதா?”
“………”
” உடம்பை மட்டும் வளர்த்து போதாது தம்பி, மூளையினையும் வளர்க்கவேண்டும், உடம்பை வளர்த்து அரசியல்வாதியை பிடித்து வேலை தேடிய காலம் மலை ஏறிப்போய்விட்டது”
பிறகு எல்லோரையும் பார்த்து ஆணையாளர் சொன்னார்.

“இங்கே 15 சாரதிகளுக்கு வெற்றிடமிருக்கிறது. OL ஆறுபாடமும், மூன்று வருட அனுபவத்துடன் சாரதி அனுமதி பத்திரமும் தேவை. மாதம் 45,000/- சம்பளம். மூன்று முறை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவிட்டோம், இதுவரை ஒருவரே கிடைத்துள்ளார்”

அவர்கள் நகர்ந்துசென்றதும் எனது முறை வந்தது, தற்போதைய இளைஞர்களின் கல்விதகைமைகள், அவர்களின் போக்கு பற்றி எல்லாம் தொடர்ந்தும் பேசினார்….
அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தால் வேலை கிடைக்குமென்று இன்னும் இளைஞர்கள் நம்பிக்கொண்டிருப்பதை எனது பங்குக்கு சொல்லிவைத்தேன்.

2008ம் ஆண்டு நான் குடிவந்த பிறகு இதுவரை சீரமைக்கப்படாமல் கிடக்கும் எங்களது வீதி பற்றிய மனுவொன்றை கொடுத்தேன்.
இந்த மாத இறுதியில் புதிய வீதியை போட்டுத்தருவதாக உறுதியளித்தார்.

எழும்பிவருகிற போது நண்பகல் 12:02.
முக்கால் மூளைக்காரர்களால் நிரம்பிவழிந்த இந்த மாநகர சபையின் ஆட்சி கலைந்த பிறகு ஆணையாளரின் கீழ் மிக நேர்த்தியாக , வீரியத்துடன் இயங்குவதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை முழுக்க ஆணையாளர்களும், செயலாளர்களும் உள்ளூராட்சி மன்றங்களை சிறப்பாக நிர்வகித்து வழிநடாத்துவதாகவே பொதுமக்களும் பேசிக்கொள்கிறார்கள்!

நிலவரம் இப்படி இருக்க கலவரமானவர்களை இந்த சபைகளுக்கு தேர்ந்தெடுக்க இன்னொரு தேர்தல் எதற்கு என்றே எண்ணத்தோன்றுகிறது!
அரசியல் பதவி ஆசனம் ஒன்றிற்கு குறைந்தபட்ச தகுதியாக AL இல் மூன்றுபாடம் என்றொரு விதிசெய்யமாட்டார்களா?

Web Design by Srilanka Muslims Web Team