தொடரும் தோல்வி: இந்திய துடுப்பாட்டக்காரர் மீது டோனி பாய்ச்சல் - Sri Lanka Muslim

தொடரும் தோல்வி: இந்திய துடுப்பாட்டக்காரர் மீது டோனி பாய்ச்சல்

Contributors

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டித்தொடரில் ஜோகன்னஸ் பர்க்கில் நடந்த முதல் போட்டியில்141 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

டர்பனில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 134 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி தென் ஆப்ரிக்காவிடம் தொடரை இழந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்களை குவித்தது. தொடக்க வீரர்கள் குயன்டன் காக் (106), ஹசிம் அம்லா (100) ஆகியோர் சதம் அடித்தனர். முகமது ஷமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 35.2 ஓவரில் 146 ஓட்டங்களுடன் சுருண்டது. ரெய்னா அதிகபட்சமாக 36 ஓட்டங்களை எடுத்தார். சோட்சோபே 4 விக்கெட்டும், ஸ்டெய்ன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி தெரிவிக்கையில்,

முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களால் தோல்வி ஏற்பட்டது. முதல் போட்டியில் இருந்து அவர்கள் பாடம் கற்று இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள்.
ஆனால் இரண்டாவது போட்டியில் துடுப்பாட்டக்காரர்கள் மோசமாக விளையாடியதால் தோல்வி அடைந்தோம்.

இந்திய துடுப்பாட்டக்காரர்கள் ஆடிய விதமே சரியில்லை என்று தான் என்னால் சொல்ல முடியும். முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்து விடுவதால் நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது.

ஒரு தொடரை வைத்து முடிவு செய்யவில்லை. துடுப்பாட்டம் மோசமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். தோல்வியை பற்றி கவலைப் படவில்லை. அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவதே முக்கியமானது என டோனி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team