தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட அமெரிக்கர்களான ராஜபக்ஷர்கள் நாட்டை இல்லாமல் ஆக்கியுள்ளனர்..! - Sri Lanka Muslim

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட அமெரிக்கர்களான ராஜபக்ஷர்கள் நாட்டை இல்லாமல் ஆக்கியுள்ளனர்..!

Contributors
author image

Editorial Team

அரசாங்கம் மக்களின் பெறுமதியான வளங்களை ஒன்றொன்றாக விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தின் கெடுதியான கொள்கைகளின் பிரதிபலனை நாடு எதிர்நோக்கி வருகின்றது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தி துறையில் அரசாங்கம் கை வைத்துள்ளது. அவற்றை விற்பனை செய்து வருகிறது எனவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய வளமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் உடன்படிக்கையை திரும்ப பெறுமாறு கோரி கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட ராஜபக்சவினர் நாட்டின் வளங்களை விற்பனை செய்து, மக்களுக்கு நாட்டை இல்லாம் ஆக்கியுள்ளனர் என கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முக்கியமான கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மீது கை வைக்கப்பட்டு விட்டது. அதன் முக்கியமான பங்குகள் அமெரிக்காவில் இருந்து வந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அமெரிக்கரான பசில் ராஜபக்ச ஆகியோர் விற்பனை செய்துள்ளனர்.

மின்சார சபையின் ஊழியர் தற்போதும் அந்த உடன்படிக்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். இதற்கு நாங்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவோம். அரசாங்கம், துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க முயற்சித்து வருகின்றது.

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட எரிசக்தி அமைச்சர் அண்மையில் இந்திய நிறுவனத்துடன் உடன்படிக்கையை செய்து, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.

அதேபோல் பெறுமதியான கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றது. தேசப்பற்றை பூசிக்கொண்டே தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அப்படி தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், துறைமுக, மின் உற்பத்தி நிலையம், பெறுமதியான கட்டடங்கள், எண்ணெய் தாங்கிகள் ஆகியவற்றின் உரிமையை மக்களுக்கு இல்லாமல் ஆக்கியுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team