தேசியரீதியில் மும்முனைகளில் மோதிக்கொள்ளும் தேர்தல் » Sri Lanka Muslim

தேசியரீதியில் மும்முனைகளில் மோதிக்கொள்ளும் தேர்தல்

party

Contributors
author image

Fahmy Mohideen

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.என்றாலும் தேசியஅரசியலை மிகவும் சவால்களுக்கு உள்ளாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.நாடு முழுவதற்குமான இந்த தேர்தலில் நல்லாட்சியின் வாழ்வா சாவா போராட்டம் பெப்ரவரி 11ம் திகதிக்குப் பின்னர் மறுவடிவம் பெறலாம்.

அந்தவகையில் தெற்கில் மைதிரி,ரணில் மற்றும் மஹிந்த ஆகிய மும்முனைப் போட்டி நிலவுகிறது.இந்தவகையில் மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்தப் போட்டி பலமாகவும் இதர மாகாணங்களில் நாளுக்கு  நாள் தீவிரமடைகிறது.

மைதிரி:
மைதிரியைப் பொறுத்தவரையில் சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி தனது தலமைத்துவத்தையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டி உள்ளது.மஹிந்த அணியினர் சுதந்திரக் கட்சியை தோற்கடித்து மைதிரியை கட்சிக்குள் அதிகாரமற்றவராக மாற்றும் சந்தர்ப்பமாக இந்தத் தேர்தலை சந்திக்கின்றனர்.

மத்தியவங்கி பிணைமுறி,மிகின்லங்கா ஒப்பந்தம் போன்ற விடயங்களை தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டு ஐதேகட்சியையும் மஹிந்தவைப் போன்ற ஊழல்வாதிகளாக காட்ட மைதிரி முயல்கின்றார்.

அத்துடன் மஹிந்த கட்சியைத் தோற்கடிப்பது. அதன்மூலம் அவருடன் எஞ்சியிருக்கும் சுதந்திரக்ட்சியினரை தன்பக்கம் இழுத்துக் கொள்வதற்கான சகல முயற்சியிலும் இறங்கியுள்ளார்.மஹிந்த அணியினரை ஐதேகட்சிக்கு அடுத்த நிலைக்குத்தேர்தலில்  தள்ளுவதன் மூலம் கட்சியில் தனது தலமைத்துவமும் ஐனாதிபதி கிரீடமும் பாதுகாப்பாக இருக்கும்.
ஏனெனில் மஹிந்த அல்லது ரணில் அணியினர் வெற்றிபெற்றால் தன்னை அதிகாரமற்ற ஒரு பொம்மையாக கட்சியில் மஹிந்தவும், அரசாங்கத்தில் ரணிலும் ஆட்டிப்படைப்பர் என்ற பயம் மைதிரியிடம் உள்ளது.

ஆரம்பத்தில் தன்னை பதவிகளுக்கு ஆசைகளற்ற ஒருவராகக் காட்டினாலும்,காலப்போக்கில் மைதிரியின் செயற்பாடுகள் அதிகாரத்தை அதிகரிக்கும் போராட்டக்காரராக மாறினார்.

வடகிழக்கில் முஸ்லீம் கட்சிகளும்,மத்தியமாகாணத்தில் மலையகக் கட்சிகளும் ஐதேகட்சிச் சின்னத்தில் போட்டியிடுவது மைதிரியை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

ரணில்மீதும்,மஹிந்த மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்பி தன்னை தேசபிதாவாக காட்ட மைதிரி முயற்சிக்கிறார்.பதவிகளுக்காகவும்,பணத்துக்காவும் கட்சிமாறும் தேசிய அரசியலில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது சந்தேகமே. ஏனெனில் மைதிரியுடன் இருக்கும் பல அமைச்சர்கள் கட்சி மாறியவர்களும் மஹிந்தவுடன் நெருங்கிய விசுவாசிகளுமே.

மஹிந்த அணி:
==========
மஹிந்த அணியினர் கடந்ததேர்தல்களை விட இந்தத் தேர்தலில் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர்.மைதிரி மீதான தனிப்பட்ட கோபங்களுக்கு அப்பால் சுதந்திரக் கட்சியை தனது கைக்குள் கொண்டுவருவதற்கான சவாலாக எடுத்துள்ளார்.

குடும்பாதிக்கம்,ஊழல் மற்றும் மோசடி போன்ற பலத்த கோஷத்துடன் மஹிந்த அணி நல்லாட்சியால் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணை என்ற படத்துடன் மட்டுமே மஹிந்த அணியினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உயிர்வாழ்கிறது.

இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சுதந்திரக்கட்சியை பலவீனமாக்கும் என்ற நோக்கில் மைதிரி தாமதமாக்கினார்.இது மஹிந்த அணியினரை பலமாக்கி ,மக்களிடம் இருந்த அதிருப்தியை குறைத்துள்ளது.

மேலும் மஹிந்தமீது தெற்கு,வடமேல் மற்றும் வடமத்தியமாகாண மக்கள் எதிர்பார்த்தளவு நம்பிக்கை இழக்கவில்லை.மஹிந்தவின் வேட்பாளர்களும்,கூட்டங்களுக்கான மக்களும் அவரை நாட்டை மீட்ட தேசிய வீரனாக மக்கள் இன்னும் காண்பதை புலப்படுத்துகிறது.

மைதிரியை தோற்கடிக்க மஹிந்த எடுக்கின்ற தேர்தல் ரணிலை மறுபக்கம் வெற்றியாலராக்கும்.ஏனெனில் மஹிந்தவின் எதிர்பார்ப்பும் காய்நகர்த்தலும் மைதிரிக்கு எதிராகவே உள்ளது. ரணிலின் கையோங்கினாலும் மஹிந்த சுதந்திரக் கட்சிக்குள் அதிகாரம் பெற்றால் அடுத்த நகர்வில் இலகுவாக ஐதேகட்சியை பலவீனமாக்குவார்.

சந்திரிக்கா,ராஜித போன்ற பலரின் ஆசீர்வாதத்துடன் ஆட்சி ஏறிய மைதிரிமீது அதிருப்பி அதிகரித்துள்ளது.குறிப்பாக சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் மைதிரி தோல்வி கண்டதாகவே அவரது நெருங்கியவர்களால் விமர்சிக்கப்படுகிறார்.இதனால் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக தோல்விகண்ட ஐதேகட்சியை மேலும் பலப்படுத்த மஹிந்த கட்சிக்கு அவசியமென வலியுறுத்துகின்றனர்.

உண்மையில் வடகிழக்கிற்கு வெளியை தனது முழுப்பலத்தையும் இந்தத் தேர்தலில் காட்ட மஹிந்த களமிறங்கி உள்ளார்.இவருக்கு கணிசமாளவு சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அதிகளவு ஆதரவு உள்ளது.

ஐதேகட்சி மீதான தொடர்ச்சியான ஊழல் மற்றும் பல குற்றச்சாட்டுகள்,தன்மீதான ஊழலை தற்காலிகமாக மறைக்கும் கவசமாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் மைதிரியைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று கட்சிக்குள் மீள்வருவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவது.அதன்மூலம் மைதிரியின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பலவீனமாக்குவது.பின்னர் சக்திமிக்க பேரம்பேச்சுடன் அதிகாரத்தை பங்குபிரிப்பது என்ற திட்டமிடலுடன் தேர்தலை முகம்கொடுக்கின்றார்.

ரணில்
========
கடந்த 20க்கு மேற்பட்ட தேர்தல்களில் தோல்விகண்ட ரணிலுக்கு நல்லாட்சி திடீர் மீட்சியைக் கொடுத்தது.கட்சிக்குள் தலமைத்துவத்திற்கு எதிராக வலுவடைந்த மோதல்களுக்கு மத்தியில் நல்லாட்சி ரணிலை ஓரளவு பாதுகாத்தது.

இதன்முலம் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்தி தனது சகாக்கலை அதிகாரமுள்ளவர்களாக மாற்ற முயன்றார்.ரவிகருணாயக்க,மங்கள,திலக்மாரப்பன,மற்றும் மலிக்சமரவீர போன்றவர்களுக்கு அதிகாரத்தையும் பலத்தையும் வழங்கினார்.

இதன்காரணமாக சஜித் தலமையில் கட்சிக்குள் பலமாக இருந்த அணியினரை பலவீனமாக்கினார்.துரதிஷ்டவசமாக தன்னுடன் இருந்த நெருங்கிய சகாக்கலின் அமைச்சு மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் அவருக்கு ஆபத்தாக மாறிவிட்டது.இன்று ஐதேகட்சி வரலாற்றில் முதல்தடவையாக ஊழல்குற்றச்சாட்டுக்கு ரணில் தவறான வழிகாட்டலால் இடமளித்துள்ளார்.

மேலும் தேர்தலில் மைதிரி அல்லது மஹிந்த அணி முன்னிலைக்கு வந்தால் தனது பதவிக்கு முடிவுகாலமாக அமையலாம் என்ற பயம் உருவாகியுள்ளது.ஏனெனில் கடந்த 3  வருடங்களாக அதிகாரத்தில் இருந்த போதும் கட்சியை தேசியரீதியில் மறுசீரமைக்கவில்லை.மஹிந்தவிற்கு எதிரான மக்களின் கோஷங்களையும் சுதந்திரக்கட்சி உட்பூசலையும் ஐதேகட்சிக்கு ஆதரவாக மாற்றுவதில் தோல்விகண்டார் என்ற வலுவான குற்றச்சாட்டு உள்ளது.

தேர்தலில் தான் தோற்றால் ஐதேகட்சியை மைதிரி மற்றும் மஹிந்த ஆகியோரின் இருபக்க நெருக்கடியில் இருந்து பாதுகாப்பது கடினமாகிவிடும்.இதன்காரணமாகவே தனது கட்சியை பலமானதாக காட்டுவதற்கு வடகிழக்கில் ACMC,SLMC மலைநாட்டில் தமிழ்முற்போக்கு கூட்டணியை யானைச் சின்னத்தில் களமிறக்கு உள்ளார்.இதற்காக பல்வேறு சலுகைகளை இந்தக் கட்சிகளுக்கு வழங்கியுள்ளார்.

மைதிரியையும் மஹிந்தவையும் தொடர்ந்து எதிரிகளாக வைத்திருப்பதில் தனக்கான சூழலை ஓரளவு ரணில் ஆரோக்கியமாக வைத்துள்ளார்.இதற்காக ஐதேகட்சி மீதான அண்மைக்கால மைதிரியின் நெருக்கடியையும் பெரிதுபடுத்தாமல் உள்ளார்.மைதிரியுடன் மஹிந்த அணி கூட்டுச்சேராத வரையில் ரணில் பாதுகாப்பாக இருக்கலாம்.

இருந்தும் தற்போது ஐதேகட்சிக்குள் சஜித் அணயினரின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.ரணிலின் சகாக்கலால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் சஜித் சார்பானவர்கள் மீண்டும் கட்சிக்குள் பலமாற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.இவர்கள் தற்போது அமைதியாக இருந்தாலும் ரணில் மற்றும் அவரின் சகாக்கலான ரவி,திலக், சாகல மற்றும் மலிக்சமரவீர போன்றவர்களை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் தனது உறவினரான ருவன் விஜயவர்தனவை அடுத்த ஐதேகட்சியின் தலமைக்கு நிறுத்த ரணில் மேற்கொள்ளும் பலமுயற்சிகள் விமர்சிக்கப்படுகிறது.இதனால் பல ஐதேகட்சி உள்ளூர் தலமைகள் தேர்தலில் அமைதியாக உள்ளனர்.இதனால் இந்த் தேர்தலில் ஐதேகட்சி தோல்விகண்டால் ரணிலுக்கு அரசாங்கத்தில் மட்டுமல்ல கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு உண்டாகலாம்.

அதேநேரம் ஐதேகட்சி வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தில் இருக்கும் அதிக ஆசனங்களுடன் TNA மற்றும் முஸ்லீம் கட்சிகள் ஆதரவுடன் அரசாங்கத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே இவரது அமைதிக்கு காரணம்.தனக்கு அதிகாரப் போட்டியாளயாக மைதிரியையே இலக்குவைத்து ரணில் நகர்கிறார்.

தனக்கும் கட்சிக்கும் எதிரான மைதிரியின் நகர்வுகளை இந்தத் தேர்தலில் ஐதேகட்சியின் வெற்றிமூலம் தனது ஆட்டத்தை ரணில் ஆடுவதற்கு எதிர்பார்க்கிறார்.மைதிரியை ஒருபுறம் கட்சிக்குள் மஹிந்தவை வைத்தும் மறுபுறம் அரசாங்கத்தில் பெரும்பான்மை ஆதரவை ஐதேகட்சிக்கு உள்வாங்கி பலவீனப்படுத்த ரணில் தேர்தல் முடிவை எதிர்பார்க்கிபார்.

2020தேர்தலை இலக்காக வைத்து தேர்தல் கூட்டுகளுக்கும் கட்சித் தாவல்களுக்கும் இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடுவுகளே களம் அமைத்துக் கொடுக்கும்.

ஆகவே ரணில்,மைதிரி மற்றும் மஹிந்த ஆகிய மூன்று தலமைக்குள் நெருக்கடிமிக்க தேர்தலாகும்.தங்களது தலமைத்துவத்தை பலப்படுத்தவும் எதிர்கால வெற்றிக்கும் வெள்ளோட்டமும் சவால்கள் நிறைந்ததுமாகும்.

Web Design by The Design Lanka