தேசிய அமைப்பாளர் நியமனம் : சஜிதை தள்ளிவிட்டு, ராஜபக்ஸவினருக்கு சால்வையை போட்ட ஹக்கீம்..! - Sri Lanka Muslim

தேசிய அமைப்பாளர் நியமனம் : சஜிதை தள்ளிவிட்டு, ராஜபக்ஸவினருக்கு சால்வையை போட்ட ஹக்கீம்..!

Contributors

கிழக்கு மாகாண மக்களின் எதிரியாக கருதப்பட்ட சபீக் ரஜாப்தீன் ஐ.தே.கவுக்கு மாறியதும், மு.காவின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாகியது. அடுத்து தேசிய அமைப்பாளராக போவது யார் என்ற வினா, அவர் கட்சி மாறிய ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், பிற்பட்ட காலப்பகுதியில் அது பற்றி யாரும் பேசியதாகயில்லை. இது பற்றி தூக்கி பிடித்து பேசுமளவு இலங்கை முஸ்லிம் அரசியலுமில்லை. இதை அப்படியே விட்டிருக்கலாம். பிரதி தேசிய அமைப்பாளரை பதில் தேசிய அமைப்பாளராக தொடரச் செய்திருக்கலாம். அது ஒன்றும் மலை பிளக்கும் பொறுப்புமல்ல. இவ்வாறு செய்யாமல் பா.உறுப்பினர் தௌபீக்கை நியமனம் செய்துள்ளது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

20ஐ ஆதரித்தவர்கள் மீது இலங்கை முஸ்லிம்களே வெறுப்படைந்துள்ள நிலையில், பா.உறுப்பினர் தௌபீக்கை குறித்த பதவிக்கு நியமித்தால் ஒரு பாரிய சர்ச்சை எழும் என்பதை ஹக்கீம் அறியாதவரல்ல. தௌபீக்கையே நியமித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அவருக்கில்லை. இவ்வாறான நிலையில் தௌபீக்கை குறித்த பதவிக்கு நியமித்துள்ளதன் மூலம் ஏதோ ஒரு பலமான செய்தியை ஹக்கீம் சொல்ல வருகிறார் என்பது வெளிப்படையான உண்மை. வேலியில் செல்லும் ஓணானை யாரும் வேட்டிக்குள் விட விரும்பமாட்டார்கள் அல்லவா? கிழக்கு மாகாண மக்களை முழங்காலிடச் செய்வேன் என கூறிய நபரையே தேசிய அமைப்பாளராக்கி, சமாளித்த ஹக்கீமுக்கு, இதன் மூலம் எழப்போகும் விமர்சனங்களை சமாளிப்பது பெரிய விடயமல்ல அல்லவா?

இதனூடாக ஹக்கீம் சொல்ல வரும் செய்தி என்ன என்பது நீண்ட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு பகுதி. ஹக்கீமின் செயற்பாடுகளை வைத்து நோக்கும் போது 20க்கு, தனது பா.உறுப்பினர்கள் ஆதரவளித்தமையை தண்டிக்க கூடிய ஒரு பெரிய குற்றமாக நோக்கவில்லை. அப்படி நோக்கினாலும் தண்டிப்பது கட்சிக்கு ஆபத்தானது என்ற நிலைப்பாட்டில் உள்ளார் என்பது தெளிவானது. இதனை இந் நியமனத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் எடுக்கலாம். மு.காவின் தலைவர் ஹக்கீம் வேறு சில இடங்களிலும் 20க்கு ஆதரித்தவர்களை நியாயப்படுத்தி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20க்கு ஆதரவளித்தவர்களில் ஹரீஸ், நஸீர் ஹாபிஸ் ஆகிய இருவரையும் ஹக்கீம் துரோகிகளாக காட்ட முனையும் அதே வேளை ( இதற்கு மு.கா தலைவர் பக்கத்தில் சில நியாயங்கள் இருக்கலாம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் இருவருக்கும் எதிராக ஹக்கீம் செயற்பட்டிருந்தார். ), பைசால் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோரை பூரணமாக அரவணைத்து செல்வதை விரும்புவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. ” தௌபீக் நம்மட ஆள் தான் ” என்பதை இக் குறித்த விடயத்தினூடாக, மு.கா ஆதரவாளர்களுக்கு ஹக்கீம் நேரடியாக சொல்லியுள்ளதாகவும் நோக்கலாம். இனியென்ன..? போராளிகளுக்கு தௌபீக் எம்.பி புனிதராகிவிடுவார். துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பில், மு.காவின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய, மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் மு.காவின் உயர்பீடத்திலுள்ளோர் ஒன்று கூடிய கூட்டம் 20ஐ ஆதரித்தமைக்காக, தௌபீக் எம்.பிக்கு யாரோ ஒருவர் ஏசியதால் குழம்பியிருந்தமை அந் நேரத்தில் பிரபலமான பேசு பொருளாகியிருந்தது. அந்த நபர் இப்போது தேங்காய் துருவி கொண்டா இருப்பார்? ரோசமா…?

மு.கா தலைவர் ஹக்கீம் இந் நியமனத்தை வழங்கிய காலப்பகுதி மிக முக்கியமானது. சஜித் பிரேமதாச அ.இ.ம.காவோடு, தனக்கு எந்த தொடர்புமில்லை எனவும், 20க்கு ஆதரவளித்தவர்களை, தனது கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியிருந்த காலப்பகுதி. சஜித் அ.இ.ம.காவுக்கு சொல்லும் அனைத்து மு.காவுக்கும் பொருந்தும். இதனூடாக சஜித் ஹக்கீமுக்கு ஒரு செய்தியை சொல்ல முனைந்திருக்கலாம். இக் காலப்பகுதியில் 20க்கு ஆதரவளித்தவர்களில் ஒருவரான தௌபீக் எம்.பிக்கு மு.கா தலைவர் ஹக்கீம் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கி, கௌரவித்திருப்பது மறைமுகமாக சஜிதுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது, ” உன் ஆட்டத்தை என்னிடம் காட்டாதே, இது எனது கட்சி, இதில் நான் நினைப்பதே தீர்மானம் “ என்ற வகையிலும் நோக்கலாம். இது ஒரு கட்சி தலைமையின் தைரியமான செயற்பாடு. அதனை இந்த இடத்திலா காட்ட வேண்டும் என்பது வேறு விடயம்.

அ.இ.ம.கா தலைவர், தனது கட்சியை சேர்ந்த, 20க்கு ஆதரவளித்த இருவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்திருந்தார். இம் முடிவே இன்று அவர் தடுப்புகாவலில் இருக்க காரணம் என்பது பலராலும் பேசப்படும் ஒரு விடயம். அ.இ.ம.கா தலைவருக்கு நடக்கும் அனைத்திலும் மு.கா தலைவருக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது. ” துள்ளினால், உனக்கும் இந் நிலையே “ என்பதே அச் செய்தியாகும். இதனை முன்னாள் மா.ச.உறுப்பினர் தவம், தனது கட்டுரை ஒன்றிலும் தெளிவு செய்திருந்தார். ” வாப்பா… நாம உங்கட பக்கம் தான், தேவை என்டா இருபதுக்கு ஆதரவளித்தவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறேன் “ என ராஜபக்ஸ அணியினருக்கு ஒரு பலமான செய்தியை இதனூடாக அனுப்பியுள்ளாதாகவும் நோக்கலாம். தௌபீக் எம்.பி மொட்டு பக்கம் உறுதியாக உள்ளார். ஹக்கீம் தௌபீக்கை தலையில் தூக்கி வைத்துள்ளார். அப்படியானால் ஹக்கீம்…? இந்த கணக்கை தீர்த்தால் விடை புரியும்.

ஹக்கீமின் இந்த செயற்பாடு ஐ.ம.சக்தியினரின் கவனத்திற்கு செல்லாமல் இருந்திருக்காது. அவர்களும் இவரை முழுமையாக நம்பி செயற்பட முடியாது என்ற நிலைக்கு வந்திருப்பர். ஏற்கனவே அவர்களுக்கு சந்தேகம், இதன் பிறகுமா, இவர் நமது ஆளென நம்புவார்கள்..? இன்று இம்றான் மஹ்றூப் ஹக்கீமை இது தொடர்பில் நேரடியாக விமர்சித்திருந்தமை ஐ.ம.சவுக்குள் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளமையை உறுதி செய்கிறது. இம்றான் மஹ்ரூப் நினைத்ததை பேச முடியாதல்லவா?

அ.இ.ம.காவுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லையென சஜித் சொன்னது போன்று, மு.காவை நோக்கியும் சொல்லிவிட்டால், ஹக்கீம், தனது பல பிரச்சினைகளை இலகுவாக சமாளித்து விடுவார். அவருக்கு தற்போது தேவையானதும் அதுவே! தற்போது ஐ.ம.சவோடு பயணித்து எதை தான் கிழிக்க இயலும்? ஐ.ம.சவை சேர்ந்த முக்கியஸ்தர்களை நோக்கி, இத் தேசிய அமைப்பாளர் நியமனத்தை யாராவது கேள்விக்குட்படுத்தினால், அவர்கள் சஜித் அ.இ.ம.காவுக்கு சொன்னது போன்ற ஒரு பதிலை சொல்ல உந்தப்படுவார்கள். இதனை வைத்து சஜிதை துரோகியாக்கலாம். எவ்வளவோ செய்த எங்களுக்கு இப்படி சொல்வதா என போராளிகள் கம்பெடுக்காமல் விடுவார்களா? தனக்கு தேவையான பக்கம் அமரலாம். தேவையான முடிவை எடுக்கலாம். குறைந்தது நடு நிலை வகிக்கலாம். மீன் ஓடி திரிந்தால் தானே, வலை வீசி பிடிக்க முடியும்? 20ஐ ஆதரித்தவர்களை நியாயப்படுத்தி விடலாம். மொட்டு பக்கம் சாய்ந்தாலும் குறைவான விமர்சனங்களே இருக்கும். சஜித், தங்களை நோக்கியும் இவ்வாறு கூற வேண்டும் என்பதற்காகவும் ஹக்கீம் இதனை செய்திருக்கலாம் என்ற பேச்சுக்களும் இல்லாமலில்லை. தான், தானாக வெளியேறியதாக காட்டாது, தன்னை வெளியேற்றியதாக காட்டும் அரசியல் சாணக்கியம். இருந்தாலும் ஹக்கீமை மிக நிதானமாகவே ஐ.ம.சக்தி கையாளும் என்றே நம்பப்படுகிறது.

இவ்விடயங்களை நன்கு ஆராய்ந்தால் 20க்கு ஆதரித்தவர்களை ஹக்கீம் நியாயப்படுத்த முனைவதையும், சஜிதுக்கு ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளதையும், ராஜபக்ஸவினருக்கு சால்வை அணிவித்துள்ளமையையும் அறிந்துகொள்ள முடியும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team