தேரரின் தகனமும் நல்லிணக்கமும் » Sri Lanka Muslim

தேரரின் தகனமும் நல்லிணக்கமும்

pik

Contributors
author image

BBC

 நளினி ரத்னராஜா பெண்கள்,
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்


கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல)

இலங்கையில் எந்த இடத்திலும் பிறக்கலாம், வாழலாம் , அனால் மரணித்த பின் புதைப்பதும் அல்லது எரிப்பதும் கொஞ்சம் சிரமமானதும் சிக்கலானதும் கூட என்பதை நினைக்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அண்மையில் யாழ்ப்பானத்தில் உள்ள நாக விகாரையின் வணக்கத்துக்குரிய விஹாராதிபதி மீகாகன்ஜன் துறை ஞானரத்த தேரரின் மரணமும் அதை அடுத்து அவரின் பூத உடல் பொது வெளியில் யாழ்ப்பாணத்தில் தகனம் செய்யப்பட்டதும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பலையும் இதற்கு நல்ல உதாரணம்.

விஹாரதிபதியான மீகாகன்ஜன்துறை ஞானரத்த தேரர் 1991 யிலுருந்து யாழ்பாணத்தில் இருந்து வருகின்றார். அது மட்டுமல்ல இவர் வடக்கு மாகாணத்தின் தலைமை தேரராகவும் இருந்தார். யாழ்பாணத்தில் இருக்கும் நாக விகாரை முக்கியமான வணக்க ஸ்தலங்களில் ஒன்றாக இலங்கையில் காணப்படுகிறது. வடக்கில் குடி கொண்டிருக்கும் ராணுவத்தின் பிரதான வணக்க ஸ்தலமாகவும் இந்த நாக விகாரை காணப்படுகிறது.

குறிப்பாக தெற்கில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகர்கள், வெளிநாட்டு உள்நாட்டு யாத்ரிகர்கள் வழிபடும் பிரதான இடம் இந்த நாக விகாரை. யாத்திரிகர்கள் பிரதானமாக இந்த நாக விகாரைக்கும் நைனாதீவில் இருக்கும் நாகபூஷணி அம்மன் கோவிலுக்கும் செல்வது வழக்கம். நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு கௌதம புத்தர் விஜயம் செய்ததாக கூட பௌத்தர்களால் நம்பப்படுகிறது. ஆகவே யாழ்பாணத்தில் பல தசாப்தங்களாக வாழ்ந்த வணக்கத்துக்குரிய ஞானரத்த தேரர் இறந்ததும் அவர் பிறந்த ஊரில் தகனம் செய்யப்படாமல் யாழ்ப்பாணத்தில் தகனம் செய்யபட்டார்.

இவ்வாறான மதிப்புக்குரிய மதத்தலைவர்கள் இறந்தால் அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தகனம் செய்யப்படுவது சிங்களவர்களுடைய காலச்சாரத்தில் வழக்காக காணப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது இலகுவாக இருக்கும். பொது இடங்கள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலை மைதானங்கள், சுதந்திர சதுக்கம் போன்ற பொது வெளிகள் இவ்வாறான தகனங்களுக்கு பாவிக்கப்படும். கொழும்பில் இருக்கும் சுதந்திர சதுக்கத்தில் பல பிரபலமான அரசியல் வாதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், ராணுவஅதிகாரிகள் போன்றோரின் தகனக்கிரிகைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் விஹாராதிபதி இறந்த யாழ்பாணத்தில் மிகவும் சொற்ப அளவில் கூட சாதாரண சிங்கள குடிமக்கள் தற்போது வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத பிணக்காலும் நடந்த போரினாலும் யாழ்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் போர் முடிந்து ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அவர்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பவில்லை என்பதை ஞாபகப்படுத்தல் அவசியம். இவ்வாறு இருக்குமிடத்து விஹாராதிபதி இங்கே பொது மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது மக்களிடையே சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பி உள்ளது.

அகவே இந்த தகனக்கிரியைக்கு எதிராக பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. அதில் முக்கியமாக இந்த இடம் 1974 இல் கொல்லபட்ட தமிழர்களின் ஞாபகார்த்த இடத்துக்கும் இந்து ஆலயத்துக்கும் அண்மையில் இருப்பதும் பிரதான காரணமாகும். அகவே 12 பேர் உள்ளடங்கிய யாழ்பாணத்தில் வசிக்கும் சட்டத்தரணிகள் குழு மாவட்ட நீதி மன்றத்தில் தேர்ந்தேட்டுக்கபட்ட இடத்தில் தகனம் செய்வதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தது. அவர்கள் இவ்வாறு பொது வெளியில் தகனம் செய்வது சுற்றாடலையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் எனவும் இதற்கான மாநகர சபையின் அனுமதியை பெற்று கொள்ளமால் இருப்பதையும் காரணம் காட்டினர். கூடவே இவ்வாறு தகனம் செய்து விட்டு அவ்விடத்தில் தேரரின் ஞாபகார்த்த சிலை வைக்கப்படலாம், அவ்வாறு வைக்கப்படுமிடத்து இது சிங்கள ஆதிக்கத்தை வடக்கில் நிலை நட்டும் யுக்தி எனவும் கருத்தப்பட்டது.

எது எப்படியாயினும் நீதிபதி தகனம் செய்யவிருந்த இடம் தொல் பொருளாராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமான அரச காணியாக இருப்பதால் அங்கே தகனம் செய்ய முடியும் என அறிவித்தார்.

இங்கே இந்த தகனகிரிகை ஒரு அரசியல் பிரச்சினையாக பார்க்கப்படுவதற்கு பிரதான காரணம் இன்னும் இனப் பிரச்சினை அல்லது தேசியப் பிரச்சனை முடிவுக்கு வராததும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் தீர்வும் கிடைக்காததும், இனங்களுக்கிடையே சரியான புரிந்துணர்வும் இல்லாததும், அதற்கான வினைத்திறனான நடவடிக்கைகள் அரசால் இன்னும் முன் எடுக்கபடாமையும் ,நல்லிணக்கமும் காணப்படாமையும் ஆகும்.

இதனால் மக்கள் குழம்பி இருப்பதும், கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக எல்லாவற்றையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைமையும் காணப்படுகிறது என்பது யதார்த்தம். அது மட்டுமல்ல மத குருக்கள்அல்லது மதத்தலைவர்கள் இறந்தால் அவர்களை மயானத்தில் நல்லடக்கம் செய்வதோ அல்லது தகனம் செய்வதோ தான் வழக்கமாக உள்ள நிலையில் தேரரின் தகனம் பொது வெளியில் நடைபெறுவது சிங்களமயப்படுத்தலின் ஒரு பாகமோ என்ற பீதியை தமிழர்களிடையே உருவாக்கி விட்டது.

அதிகப்படியான உயர் ராணுவ அதிகாரிகள், ராணுவம், முப்படைகளின் தளபதி போன்றோரின் பிரசன்னமும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் ஏதுவான காரணிகளாக அமைந்தது. இதுவே தேரரின் தகனக்கிரிகையை எதிர்ப்பதற்கும் காரணமானது.

சாதரணமாக இவ்வாறு மதகுரு மரணிக்கும் இடத்தில் அந்த கிராம மக்களும் விஹாரையை சேர்ந்தவர்களும் சேர்ந்து பூதவுடலை என்ன செய்வது, எங்கே எரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பார் .

இது ஒரு புறமிருக்க வடக்கில் ராணுவம் சமூக அபிவிருத்தி போன்றவற்றில் பங்கெடுப்பது, விவசாயம் செய்தல் அதை மக்களுக்கு விற்பனை செய்தல், மக்களை விவசாய வேலைக்கமர்த்தி அவர்களுக்கு ஊதியம் வழங்குதல், உணவங்களை பெரிய அளவில் அமைத்து வியாபாரம் செய்வது, போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதை போரால் பாதிக்கபட்ட, வாழ்வாதாரத்துக்கு அல்லல்படும் மக்களின் பொருளாதரத்தை தங்கள் கைகளில் எடுப்பதோடு, தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்க பாவிக்கும் யுக்தியாக மக்களும் சிவில் சமூகமும் , அரசியல்வாதிகளும் பார்க்கின்றனர்.

இவ்வாறாக கடந்த காலங்களிலும் ராணுவத்தின் தலையீடும் பிரசன்னமும் தமிழ் மக்களின் அபிலாசைகளை மழுங்கடிக்கும் பேரினவாத அரசியல் யுக்தியாகவே இருந்ததையும் மறந்து விட முடியாது. அது மட்டுமல்ல வடக்கில் இருந்து ராணுவத்தை அகற்றி கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போரட்டம் நடத்தும் இந்த காலப்பகுதியில் இவ்வகையான அரசின் செயல்பாடுகள் வருத்தமும் நம்பிக்கை இன்மையையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றன.

வணக்கத்துக்குரிய தேரரின் தகனக்கிரியையானது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு ஒரு துரும்பாக பாவிக்கப்பட்டிருக்கலாம். நல்லிணக்கம் வேண்டும் என்று பாடுபடும் தமிழர்கள் இந்த தேரரின் தகனக்கிரியை எதிர்த்ததன் மூலம் நல்லிணக்கத்துக்கு தமிழர்கள் தயாரில்லை என்று தெற்கில் வாழும் பெரும்பான்மை சமூகமும் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. இவ்வகையான சம்பவங்களை தங்களுடைய இனவாத கோஷமாக முதலீடாக பேரினவாத அரசியல் வாதிகளும் எடுத்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

தேரரின் தகனக்கிரியைக்கான இடத்தை தேர்வு செய்வது, கிரியையை எங்கே செய்வது என அங்கு வாழும் மக்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி அறிய அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மக்களுடனும் சிவில் சமூகத்துடனும் , மாநகரசபையுடனும் மற்றும் மாகாண சபையுடனும் கலந்தாலோசித்திருந்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்கி சரியான இடத்தை தெரிவு செய்து கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

அது மாத்திரமல்ல இங்கே பல் சமய குழுக்கள், ஒன்றியங்கள் காணப்படுகின்றன. அவர்களிடமும் ஆலோசனை பெற்று இந்த தகனத்தை செய்திருக்கலாம். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

புலம்பெயர் தேசத்திலும், பல்லினக் காலச்சார வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கும் கொழும்பு போன்ற தலைநகரதிலும் மிகவும் வாகன நெரிசல் உள்ள பகுதிகளிலும், நேரங்களிலும் பல மணித்தியாலங்களுக்கு பொது வீதியில் சமய ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. யாரும் இதை இன மத பேதங்களைக் காட்டி எதிர்ப்பதில்லை. காவல்துறையும் இதற்கு ஒத்துழைகிறது. இது போலவே பொது மயானங்களும் காணப்படுகின்றன . இவ்வாறான சகிப்புத் தன்மை உடைய இன ,சமய காலசார விழுமியங்களையும் சம்பிரதாயங்களையும் மதிக்கும் சமூகம் இலங்கையில் சகல பிரதேங்களிலும் சகல இனங்களுக்கு மத்தியிலும் உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால்தான் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை நகரும்.

Web Design by The Design Lanka