தேர்தல் காய்ச்சல் ! » Sri Lanka Muslim

தேர்தல் காய்ச்சல் !

politics

Contributors
author image

A.L.நிப்றாஸ்

காய்ச்சல் என்பது பலவற்றின் அறிகுறியாகும். அந்தக் காய்ச்சல் வருவதற்கு முன்னர் தடிமனும் இருமனும் உடல்வலியும் வழக்கத்திற்கு மாற்றமான அறிகுறிகளும் உடம்பில் இருக்கும். இதைக் காய்ச்சல் குணங்குறி, முன்-காய்ச்சல் என்பார்கள். சிலவேளை இதைக்கூட சிலர் காய்ச்சல் என்றுதான் நினைப்பார்கள். தீவிரமான காய்ச்சல் வந்தாலும் வராவிட்டாலும் அவர்கள் உணர்கின்ற முன்-காய்ச்சல் வந்தே தீரும். இந்தக் காய்ச்சல் வந்துவிட்டால் அது தீர்வதற்கு நாளெடுக்கும்.

தேர்தல் காய்ச்சலும் ஒருவகையில் அப்படித்தான். தேர்தல் காய்ச்சல் வந்து விட்டால் சிலருக்கு நடுக்கம் எடுத்துவிடும். ஒரு போர்வையால் போத்திக்கொண்டு சத்தமில்லாமல் உறங்கினால் போதும் என்று சிலர் நினைப்பர். சிலர் மருந்தெடுக்கச் செல்வதற்கு அச்சப்படுவர்.

அதிர்ச்சியடையும் விதத்தில் வைத்தியர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்ற உதறல் பலருக்கு இருக்கும். வேறு சிலருக்கு தமது மருத்துவ ஆய்வறிக்கை முடிவுகள் பிழையாக அமைந்து விடுமோ என்ற சந்தேகமும் எழும் இதனால், வைத்தியாலைக்கே போகாமல் இருப்பவர்களும், பின்னர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுபவர்களும் நம்மிடையே உள்ளனர்.

எதனை நடாத்துவது
இது தேர்தல் காய்ச்சல் காலம்! நாட்டில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நடந்து விட்ட நிலையில், மகாண சபை மற்றும் உள்ள10ராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. தேர்தல் முறைமையை மாற்றியமைத்து, தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக அரசாங்கம் மேற்கொண்டாலும், வாக்கெடுப்பை நடாத்துவதில் பல்வேறுபட்ட நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

உள்ள10ராட்சி மன்ற தேர்தலை முதலில் நடாத்துவதா மாகாண சபைத் தேர்தலை முற்படுத்துவதா அல்லது இரண்டையுமே மறுஅறிவித்தல் வரை தள்ளிப்போடுவதா என்ற குழப்பம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு, உரிய காலத்தில் தேர்தல்கள் நடாத்தப்படும் என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்த நல்லாட்சி அரசாங்கம், ஒரு காய்ச்சல் காரன் நாளைக்கு வைத்தியசாலைக்கு போவோம் என்று சொல்வது போல, கொஞ்சம் தடுமாறுவதாக தெரிகின்றது. இதற்கான காரண காரியங்கள் நாமறியாத அரசியலும் அல்ல.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரக் கட்சியினதும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் முழுக்கட்டுப்பாடும் கிட்டத்தட்ட அவரது கைகளிலேயே இருந்தது. அப்படி இருந்தும் அவரது அரசாங்கத்திற்குள்ளேயே எத்தனையோ முரண்பாடுகளும் உள்குத்து வெட்டுக்களும் இருந்தன. பொது எதிரணியின் வேட்பாளர் கூட அங்கிருந்தே இழுத்தெடுக்கப்பட்டார்.
எனவே, இரண்டு நிகழ்ச்சி நிரல்களுடன் பயணித்துக் கொண்டிருக்கின்ற இரு பிரதான கட்சிகள் சேர்ந்து நிறுவப்பட்டுள்ள இந்தக் கூட்டு அரசாங்கத்தினுள்ளே பிரச்சினைகளும் முரண்பாடுகளும் வருவது இயல்பானதே. இன்னும் சொல்லப் போனால் அது எதிர்பார்;க்கப்பட்டதும் கூட.

மாறும் களநிலைகள்
இப்போது சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டி ஒரு பனியுத்தம் போல ஆரம்பமாகியிருக்கின்றது எனலாம். இனிவரும் காலங்களில் சுதந்திரக் கட்சியின் துணையின்றி ஆட்சியமைக்க வேண்டுமென்ற அவா ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று, சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் சுயமாக ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டி கட்சியை வளர்க்க வேண்டிய தேவை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம்.

நாட்டில் கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு, அல்லது அது சாத்தியமில்லாவிடின் இந்த ஆட்சியை சீர்குலைத்து ‘மஹிந்தவின் ஆட்சியே பரவாயில்லை’ என்று மக்கள் நினைக்கச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவும் சு.க.வின் ஒரு பிரிவினரும் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கடும்போக்கு சக்திகளும் ஏதோ ஒரு காரியத்தை சாதிப்பதற்காக ஆட்சியாளர்களுக்கு பயங்காட்டிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது

சமகாலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் சுதந்திரக்கட்சிக்குள்ளும் ஐ.ம.சு.மு.வுக்குள்ளும் பல கருத்து வேற்றுமைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன.

அதுமட்டுமன்றி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் பொது (கூட்டு) எதிரணியே வெற்றி பெற்றதே தவிர தனியே ஐக்கிய தேசியக் கட்சியோ சுதந்திரக்கட்சியோ வெற்றிபெற்றதாக சொல்ல முடியாது. அந்த வெற்றிகூட சில இலட்சம் வாக்கு வித்தியாசத்திலேயே நிகழ்ந்தது. சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற போதிலும் சு.க.வினர் எல்லோரும் அவருடன் இல்லை என்பதுடன், மஹிந்தவை எதிர்த்து நின்று சு.க.வை வெற்றிபெறச் செய்ய முடியாது என்பதும் களநிலை யதார்;த்தமாகும். அதேபோன்று, தனியே களமிறங்கி யார் தயவும் இன்றி வெற்றிபெறக்கூடிய நிலைக்கு ஐ.தே.க. முன்னேறிவிட்டதாகச் சொல்லவும் முடியாது.

மஹிந்த அணியின் நகர்வுகள், இரு பெருந்தேசியக் கட்சிகளுக்குள்ளும் உருவான முரண்பாடுகள், கடும்போக்காளர்களின் அரசியல் செல்வாக்கு என்பன முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்த விடயங்களே. ஆயினும், எதிர்பார்க்கப்படாத ஒரு காரியத்தைச் செய்து நல்லாட்சி அரசாங்கம் இன்னும் சிறுபான்மை மக்களின் ஆதரவுத் தளத்தை குறைத்துக் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்கு வித்திட்டதே முஸ்லிம்கள் மீதான இனவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிரான மக்களின் மனோநிலையும்தான். மஹிந்த அரசாங்கம் இனவாதத்தை அடக்காத காரணத்தாலும் இனவாதத்தை சிறைப்பிடிப்போம் என்று பொது எதிரணி கூறியதாலுமே சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், தீவிர பௌத்த சிங்கள வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்காக இன்று மைத்திரி – ரணில் அரசாங்கமும் கிட்டத்தட்ட அதே தவறைத்தான் செய்து கொண்டிருக்கின்றது.

தயங்கும் ஆட்சியாளர்கள்
எனவே, இந்தப் பின்புலங்களின் அடிப்படையில் தேர்தல் ஒன்றை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கம் சற்று தயங்குகின்றது. பாராளுமன்ற தேர்தல் வெற்றி அலை ஓய்வதற்கு இடையில் தேர்தலை நடத்தியிருந்தால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்த கடந்த 2 வருடங்களுக்குள மேற்படி சவால்கள் உருவாகியுள்ள களச்சூழலில் தேர்தலுக்கு முகம் கொடுப்பது பற்றி, ஐ.தே.கவும், சு.க.வும் கடுமையாக சிந்திக்கின்றன. அவசரப்பட்டு தேர்தலை நடத்தி இருப்பதை கெடுத்துவிடுவோமா என்பதே அந்த சிந்தனைக்கான தோற்றுவாயாக இருக்கும்.

மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மூன்று தடவை ஜனாதிபதியாவதற்கான சட்ட அங்கீகாரத்தைப் பெற்றார். ஆனால் தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் காலம் மீதமிருக்கின்ற நிலையில் தேர்தலை நடாத்தி தோல்வியடைந்து, வீட்டுக்குப் போனார். இன்று, உரிய காலத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அஞ்சுகின்றது.

முடிவடையும் ஆயுள்
நாட்டிலுள்ள பல பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து பல மாதங்களாயிற்று. இப்போது ஆணையாளர் மற்றும் செயலாளரினால் இந்த உள்ள10ராட்சி மன்றங்கள் கொண்டு நடாத்தப்படுகின்றன. எனவே, இதற்கு வட்டார முறையிலோ அல்லது பழைய முறைப்படியோ தேர்தலை நடாத்த வேண்டியிருக்கின்றது. அதேபோன்று ஆயுட்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளுக்கும் வாக்கெடுப்பை நடாத்த வேண்டியிருக்கின்றது.

நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளினதும் ஆட்சிக்காலம் அடுத்த இரண்டரை வருடங்களுக்குள் வேறுவேறு திகதிகளில் நிறைவுக்கு வரவுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணத்தின் ஆட்சிக் காலம் இந்த மாத நிறைவோடு முடிவுக்கு வருகின்றது. எனவே, செப்டம்பரில் இந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உரிய காலத்தில் தேர்தலை நடாத்தி முடிப்பதில் அக்கறையுடன் இருக்கின்றார். துணிச்சலான, பொறுப்புவாய்;ந்த ஒரு அரச அதிகாரி என்ற வகையில் அரசியல் காரணங்களுக்குப் பின்னால் போக வேண்டிய தேவை அவருக்கு கிடையாது. அந்த அடிப்படையில் உள்ள10ராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடாத்துவதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

ஆனால், உள்ள10ராட்சி மன்ற தேர்தலே முதன்முதலாக நடத்தப்படும் என்று ஆரம்பத்தில் கூறிய அரசாங்கம் பின்னர் மாகாண சபைகளை கலைத்து விட்டு புதிய தேர்தலை முதலில் நடாத்தப் போவதாக அறிவித்தது. தற்போது, ஒரே தடவையில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவது பற்றி பேசுகின்றது.

தேர்தலை தனித்தனியாக, வேறு வேறு நாட்களில் நடாத்துவதால் செலவு அதிகம் எனவும், எனவே ஒரே நாளில் நடாத்துவது நல்லது என்ற அடிப்படையில் பிரதமர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அதாவது, ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள மாகாண சபைகளில் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. அவ்வாறு முடிவடைந்த பின்னர் மேற்படி எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடாத்துவது என்பதே இக்கருத்தின் உள்ளடக்கமாகும்.

இதனால், மாகாண சபைகளுக்கான தேர்தலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நடத்தாமல் தள்ளிப்போடுவதற்கு நாடிபிடித்துப் பார்க்கப்படுகின்றது. இப்போதிருக்கின்ற சவால்களை உடனே எதிர்கொள்ளாமல் அதற்கான காலத்தை ஒத்திப்போடுவதாகவும் இதனை எடுத்துக் கொள்ள முடியும். அதிக செலவு என்பதை விட, இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கின்ற போது ஏற்படுகின்ற நிர்வாகச் சிக்கல்கள், மாகாண சபையின் செயற்பாடுகளில் ஏற்படும் தேக்கம் என்பவை மிகவும் முக்கியமானது என்பது தெரிந்திருந்தும், இவ்வாறான வியாக்கியானம் ஒன்று சொல்லப்பட்டுள்ளமை அரசியல் நோக்கக் கலப்பற்றது என்று சொல்வது கடினம்.

நியாயங்களின் நியாயம்
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஒத்திவைப்பதற்கு பல நியாயமான காரணங்களும் சில அரசியல் நோக்குள்ள காரணங்களும் இருக்கின்றன. ஆனால் ஒத்திவைப்பதால் மட்டும் ஆளும் கட்சிகளுக்கு களத்தில் இருக்கின்ற சவால் சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. காய்ச்சலுக்கு மருந்தெடுக்காமல் நாட்களை இழுத்தடிப்பதால் காய்ச்சல் குறைந்து விடும் என்று கூற முடியாது. காய்ச்சல் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.

அது மாதிரி, நிலைமைகள் இன்னும் மோசமடையலாம். ஏனெனில், ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் சந்திக்கின்ற நெருக்கடிகளின் வரைபு மேல்நோக்கிய போக்கையே கொண்டிருப்பதாக தெரிகின்றது. இதனை சரிசெய்வதற்கான வியூகங்கள், நல்லாட்சியை மக்கள் உணரச் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் என்பன வெற்றிகரமான முன்னெடுக்கப்படுதாகவும் சொல்ல முடியாது. இந்நிலைமை தொடருமாயின், ஒரே காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் சமாந்திரமாக பலமடைவதற்கான சாத்தியங்கள் இருக்காது.

எனவே, அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிசெய்து, மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினருக்கு நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு, மேலும் காலம் தாழ்த்தாமல், தேர்தலை நடாத்துவதே உசிதமானது என்று பரவலாக அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆளும் கட்சிகள் வேறு ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதில் குறியாக நிற்கின்றன.

அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் அரசியலமைப்பின் உறுப்புரைகள் மற்றும் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் அதற்குரிய பிரிவினை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தையும் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலத்தையும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரசுரிக்கப்பட்டதும், பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியினர் எச்சரிக்கை செய்துள்ளனர். அதுமட்டுமன்றி, உரிய திகதியில் மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதையும், காலதாமதமின்றி தேர்தல்கள் நடாத்தப்படுவதையும் பெப்ரல், கபே போன்ற, தேர்தலோடு தொடர்புடைய அமைப்புக்கள் அறிவித்துள்ளன. ஒரே நாளில் தேர்தலை நடாத்தும் திட்ட யோசனைக்கு தாம் எதிர்ப்பில்லை என்றாலும், அதனூடாக தேர்தலை பிந்திப்போடுவதற்கு முயற்சிக்கப்படுவதை ஆட்சேபிக்கின்றோம் என்று பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிறுபான்மையினரின் நிலை
மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அந்த மாகாண சபைகளில் பதவியில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முதலமைச்சர்கள், உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகிவிடும். பிரதானமாக ஆளுநரிடமே அதிகாரங்கள் குவிக்கப்படும். சபை செயலாளர்களுக்கும் சில அதிகாரங்கள் கிடைக்கும். நிலைமை இவ்வாறிருக்கையில், மற்றைய மாகாண சபைகளுக்கு உரிய காலதத்தில் தேர்தல் நடத்தப்படாது ஒத்திவைக்கப்பட்டு, ஊவா மாகாண சபைக்குரிய காலம் முடிவடைந்த பிறகே தேர்தல் நடத்தப்படுமானால் சிறுபான்மையினரின் அதிகாரங்களுக்கு என்ன நடக்கும் என ஊகிக்க முடியாது.

குறிப்பாக, காலம் முடிவடையும் கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டாலும் பொதுவாக ஏனைய மாகாணங்களை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம் ஆளுநரோ அல்லது தமிழ் ஆளுநரோ யர்ரும் இல்லை. இப்படியிருக்கையில் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ போன்ற மாகாண சபைகளை கலைத்துவிட்டு, உரியகாலத்தில் தேர்தல் நடத்தாமல் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்குமானால், அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் ஆளுநர்களே அங்கு கோலோச்சுவர் என்பதை மறந்து விடக் கூடாது.

கிழக்கு மாகாணத்தில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநராக இருப்பதைப் போன்று, ஏனைய மாகாண சபைகளிலும் சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மைச் சமூகத்தவரே ஆளுநர்களாக பதவி வகிக்கின்றனர். எனவே, தேர்தல் நடைபெறுவது ஒத்திபோடப்பட்டால் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே மாகாண சபைகள் இருக்கும். ஆளுநர்களின் மூக்கணாங்கயிறு பெருந்தேசியக் கட்சிகளின் கைகளில் இருக்கின்ற நிலையில், கிழக்கிலும் பிற மாகாண சபைகளிலும் யாருடைய இடைக்கால நிழல் ஆட்சி நிலவும் என்பதை விபரிக்க வேண்டியதில்லை.

நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும், இதற்குப் பின்னால் இருக்கின்ற பெருந்தேசிய அரசியலை உணரக் கூடியதாக இருந்தபோதிலும் சிறுபான்மைக் கட்சிகள் மௌனம் காக்கின்றமை மர்மங்கள் நிறைந்த வினோதமாக இருக்கின்றது. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்போ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதற்கு பகிரங்கமாகவேப பலமான எதிர்ப்பை வெளியிட்டதாக அறிய முடியவில்லை.

அது உண்மையாயின், தத்தமது மாகாண அரசியல் தளத்தில் அதிர்வுகளும் சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்ற ஒரு பின்னணியில், தேர்தல் ஒன்றுக்கு அவசரப்படாமல் வடக்கில் த.கூட்டமைப்பிற்கும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தற்போதிருக்கின்ற அதிகாரத்தை இன்னும் கொஞ்சக் காலத்திற்கு சுகித்துக் கொள்ள இக்கட்சிகள் எண்ணுகின்றதா அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் நியாயம் காண்கின்றதா? அன்றேல் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டுக் கொள்ளக் கூடாது என்று நினைக்கின்றனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சொல்லியிருப்பது போல, ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதற்காக தேர்தலை ஒத்திப்போட்டு, மாநில அதிகாரத்தை சிலகாலம் மத்தியில் குவிவடையச் செய்வது நல்லாட்சிக்கு நல்லதல்ல.

இப்போது இல்லாவிட்டாலும் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துத்தானே ஆகவேண்டும்.
– ஏ.எல்.நிப்றாஸ்
(வீரகேசரி 06.08.2017)

Web Design by The Design Lanka