தேர்தல் காலத்திலும் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய முஸ்லிம் கூட்டமைப்பின் கொள்கைகள் » Sri Lanka Muslim

தேர்தல் காலத்திலும் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய முஸ்லிம் கூட்டமைப்பின் கொள்கைகள்

hasam

Contributors
author image

A.L.நிப்றாஸ்

கூட்டுக் குடும்பங்களில் வாழ்தல் ஒரு அலாதியான அனுபவம் என்பார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி ஒத்தாசையாக சில விட்டுக் கொடுப்புக்களுடன் தம்மை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்காக வாழ்தலிலும் ஒரு ஆத்ம திருப்தி இருக்கவே செய்கின்றது. முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பும், உண்மையாகவே தமது கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மக்களுக்காகவே செயற்படுமாக இருந்தால் அதனால் முஸ்லிம்கள் திருப்தியையும் அனுகூலத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஆணை வழங்கிய முஸ்லிம் சமூகம் அந்த அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்த பொறுப்பை சரியாகச் செய்யவில்லை என்பதால்தான், ஒரு கூட்டணியின் அவசியம் உணரப்பட்டது. அதன்படி, காலத்தின் நியதியாக நிறுவப்பட்ட முஸ்லிம் கூட்டமைப்பின் மீது சில பொறுப்புக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவை இதுவரை எந்த முஸ்லிம் கட்சியாலும் சுமக்க முடியாதென இறக்கி வைக்கப்பட்ட பொறுப்புக்கள் எனலாம்.  

பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பொறுப்புக்கூறல் ஆரம்பமாகி விடுகின்றது. அந்த வகையில் முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பாக தம்மை அடையாளப்படுத்தியிருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இப்போது பொறுப்புக்கூறலுக்கு ஏற்றவிதத்தில் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில்; இருக்கின்றது.

நலன்களின் மோதல்
சரி பிழைகளுக்கு அப்பால் நின்று, பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இக்கூட்டமைப்பின் நீடித்த தன்மை அதனது கூட்டிணைந்த செயற்பாட்டிலும் அதன் வெற்றி என்பது பொறுப்புக்கூறக் கூடிய விதத்திலான சமூகத்தை முன்னிறுத்திய அரசியல் நகர்விலும் தங்கியிருக்கப் போகின்றது. கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளுக்குள் அதன் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றித்துப் போக வேண்டுமேயொழிய, அதன் அங்கத்துவ கட்சிகளின் அரசியலுக்குள் கூட்டமைப்பின் கோட்பாடுகள் மூழ்கிக் கிடக்க இயலாது.

உலக அனுபவங்களின் படி, கூட்டமைப்பு அல்லது கூட்டணி எனும் கோட்பாடுகள் ஓரரளவுக்கேனும் வெற்றியடைந்திருக்கின்றன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் மற்றும் அணிகளின் நலன்களுக்கும் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் இடையில் ‘நலன்களின் மோதல்’ (உழகெடiஉவ ழக iவெநசநளவ) ஏற்படாத வரையில், அந்த கட்டமைப்பு சிதையாதிருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு அழுத்தக்குழு அவசியமாக இருக்கின்றது. நமது அரசியலில் முஸ்லிம் மக்களே அந்த அழுத்தக் குழுவாக செயற்பட வேண்டியிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சுமார் 10 வருடங்கள் சிதையாது வைத்திருந்தது விடுதலைப் போராட்டம் என்று சொல்வார்கள்;. யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு தமிழ் மக்களிடையே இருக்கின்ற விடுதலையுணர்வு தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்டுக்குலையாமல் வைத்திருக்கின்றது எனலாம். இன்று, தமிழ் தேசியக் கூட்டடைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவது போல தோன்றுகின்றது. எனவே, ‘இத்தனை கொள்கைப் பிடிப்புள்ள கூட்டமைப்பே வெற்றியளிக்கவில்லை எனவே முஸ்லிம்களுக்கு ஒரு கூட்டமைப்பை உருவாக்கினால் வெற்றி பெறுமா?’ என்ற கேள்விகளும் மாற்றுக் கருத்தாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.

இவ்விடத்தில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இன்று ஏற்பட்டிருப்பது பிளவுகளோ கொள்கை அல்லது கோட்பாட்டு முரண்பாடுகளோ அல்ல என்பதையும், அது பெருமளவுக்கு நலன்களின் மோதலும் பயணிக்கும் வழிகள் பற்றிய கருத்து வேற்றுமைகளுமே என்பதை முஸ்லிம்கள் விளங்க வேண்டும்.

தமிழர் அரசியலில் இன்று புதிதாக உருவாகியிருக்கின்ற அணிகளும் கூட்டமைப்பு கோட்பாட்டையே கடைப்பிடிக்கின்றன என்பதையும், ஏற்கனவே தமிழ் சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான இன்னுமொரு மார்க்கமே இப் புதிய அணிகள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டியிருக்கின்றது.

கூர்ப்படையச் செய்தல்
இன்னுமொரு முக்கிய விடயம். அதாவது, இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை, அபிலாஷைகளை முன்னிறுத்தி ஒரு புள்ளியில் ஒன்றுசேர வேண்டுமென்ற பெரும் விருப்பமும் கனவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது, தமிழ் கூட்டமைப்பின் முன்னகர்வுகளைப் பார்த்த பிறகுதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே, ‘கூட்டமைப்பு’ கோட்பாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு ஒரு முன்மாதிரி என்ற போதிலும், கூட்டமைப்பு கோட்பாட்டின் ஒட்டுமொத்த வரைவிலக்கணமாக த.தே.கூட்டமைப்பை எடுத்துக் கொள்ள முடியாது.

தமிழ்க் கூட்டமைப்பில் இருக்கின்ற நல்ல விடயங்களை பின்பற்றுவதுடன், அதில் இருக்கின்ற பிற்போக்குத் தனங்கள், குறைபாடுகளை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அவ்வாறான நிலைமைகள் ஏற்படாத விதத்தில் முஸ்லிம் கூட்டமைப்பை இன்னுமின்னும் கூர்ப்படையச் செய்ய வேண்டியிருக்கின்றது. அதைவிடுத்து கரப்பான் பூச்சி போல கூர்ப்படையாமல் முஸ்லிம் அரசியலோ அன்றேல் கூட்டமைப்பு உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளோ பயணிக்க முடியாது.

முஸ்லிம் கூட்டமைப்பில் எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் உள்ளடங்க வேண்டும் என்பதே அனைத்து முஸ்லிம் மக்களினதும் எதிர்பார்ப்பாக இருந்தது, இன்றும் இருக்கின்றது. ஆனால், ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, பயண வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கவே செய்கின்றது. மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் கூட்டமைப்பை தனக்கு எதிரான கூட்டணியாக கருதினார்கள்.

சில அரசியல் தலைவர்களுக்கு கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களான பசீர் சேகுதாவூத், ஹசன்அலி போன்றோரில் நம்பிக்கை இல்லை. சிலர் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனோடு சேர முடியாது என்று சொன்னார்கள். சில அரசியல்வாதிகளுக்கு தேசிய அரசியல் நீரோட்ட சாக்கடையில் ஊறிய மேற்சொன்ன எந்த அரசியல்வாதியுடனும் சேர விருப்பமில்லை. சிலர் இதற்குப் பின்னால் ஏதாவது மறைமுக நிகழ்ச்சிநிரல் இருக்குமோ, நாம் எங்காவது ஒரு முட்டுச்சந்தில் கொண்டுசென்று நிறுத்தப்பட்டு விடுவோமோ என்று எண்ணினார்கள். இன்னும் சிலர் கூட்டமைப்பு உருவாகட்டும், நிலைமை சரியென்றால் தக்க தருணத்தில் இணைந்து கொள்வோம் என்று நினைத்தார்கள்.

இப்படி ஆளுக்கொரு நிலைப்பாட்டில் இருந்தார்கள். எனவே எல்லாப் பூனைகளுக்கும் மணிகட்ட முடியாத நிலை இருந்ததாக விடயமறிந்தோர் கூறுகின்றனர். யாரையும் வலுக்கட்டாயமாக கூட்டமைப்பிற்குள் இழுத்துப் போட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசு கட்சி போல இதில் அங்கம் வகித்து, அதன் தலைவர் மாவை சேனாதிராஜா போல சிறுகட்சிகளையும் அணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை பிரதான முஸ்லிம் கட்சியின் தலைவர் செய்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை.

நிலைபேண்தகு போக்கு
எனவேதான், விரும்பி முன்வந்த அல்லது சிலர் சொல்வது போல தமக்கு அரசியல் இலாபம் கிடைக்குமென நம்பிய மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியும் இணைந்து முதன்முதலாக முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நாமறிவோம்.

முஸ்லிம் கூட்டமைப்பு நிறுவப்பட்டு விட்டது என்பதற்காக எல்லாம் வெற்றியடைந்து விட்டது என்றோ, முஸ்லிம்களின் கனவு நிறைவேறி விட்டது என்றோ இனி முஸ்லிம் சமூகம் ஆயாசமாக இருக்கலாம் என்றோ கருத இயலாது. கூட்டமைப்பின் உருவாக்கம் ஒரு ஆறுதலே அன்றி அதுவே முஸ்லிம்களுக்கு நிம்மதியைக் கொண்டு வரும் என்று நினைத்துக் கொண்டு வாழாவிருக்க முடியாது.

இதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பதவி பட்டங்கள், பண வருவாய்,சோரம் போதல்கள் என்ற பழைய பல்லவிகளுக்கு அப்பால் நின்று முஸ்லிம்களின் எல்லா அபிலாஷைகளையும் வென்றெடுக்க முழு மூச்சாக ஈடுபட வேண்டும். கோஷங்களை விட கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இன்று இரண்டு கட்சிகள் இந்த கூட்டமைப்பில் இணைந்திருக்கின்றன. இன்னும் சில காலத்தின் பின்னர் றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற இதர கட்சிகள் இதில் இணையலாம் அல்லது வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம். அதேபோன்று இக் கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சியோ அரசியல்வாதியோ வெளியேறிச் செல்லவும் கூடும். ஆனால் என்ன நடந்தாலும் கூட்டமைப்பின் கொள்கைகளும் கோட்பாடுகளும் தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நிலைபேண்தகு தன்மை கொண்டதாகவும் காலமாற்றத்திற்கேற்ப தன்னை சீர்படுத்திக் கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்பதையே இக்கட்டுரையின் ஊடாக அழுத்தமாக கூற விளைகின்றோம்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் இக் கூட்டணி இம்முறை முதன்முதலாக அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மட்;டக்களப்பு மாவட்டத்தில் வகுக்கப்பட்ட வியூகம் வேறு விதமாக அமைந்திருப்பது சில விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் இவ்விரு மாவட்டங்களும் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம், கூட்டமைப்பு கோட்பாட்டை மக்கள் ஆணையூடாக பரிசீலிக்கும் ஒரு பரிசோதனை களமாக கருதப்படுகின்றது.

விமர்சன கருத்துக்கள்
சட்டென மாறியிருக்கின்ற களநிலவரங்களின் பிரகாரம், பல பிரதேசங்களில் கூட்டமைப்புக்கு ஆதரவு இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். கூட்டமைப்பும் அதற்கு வெளியிலுள்ள கட்சிகளும் எவ்வாறு களமாடுகின்றன என்பதைப் பொறுத்தே இறுதி வெற்றிதோல்வி தீர்மானிக்கப்படும். இந்நிலையில், ஐ.ச.கூட்டமைப்பு என்ற சிறிய கட்சி, மக்கள் காங்கிரஸிற்குள் முற்றாக சங்கமமாகி விட்டதாக ஒரு விமர்சனமும் கருத்துக்களும் முன்வைக்கப்படுவதை காணப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில்தான் அக்கூட்டமைப்பு இன்று வரையும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை முன்மாதிரியாகக் கொண்டே, முஸ்லிம் கூட்டமைப்பின் பிரதான கட்சியான மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. ஒருவேளை, இக்கூட்டமைப்பிற்குள் முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகித்திருந்தால் அது மரச்சின்னத்திலேயே போட்டியிட்டிருக்க வேண்டும் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மறுபுறத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஹசனலி அணியினர் (ஐ.ச.கூ) மக்கள் காங்கிரஸிற்குள் கரைந்துவிட்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு சில நியாயப்படுத்தக் கூடிய காரணங்களும் இருக்கவே செய்கின்றன. அதாவது, முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பு இப்போதுதான் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் அதன் கொள்கையில் ஒரு அடி கூட கூட்டமைப்பு முன்னோக்கி நகரவில்லை, உடன்பாடு காணப்பட்ட 12 கொள்கைப் பிரகடனங்களில் எந்த விடயத்தை பெற்றுக் கொடுக்கவும் இல்லை, அதற்காக ஜனநாயக போராட்டங்களை மேற்கொள்ளவும் இல்லை, அழுத்தங்களை கொடுக்கவும் இல்லை.

இந்நிலையில், கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.ஹசன்அலி, பிரதான பங்காளிக் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன், பசீர் சேகுதாவூத் மற்றும் தூய அணி அதிருப்தியாளர்கள் எல்லோரும் இப்போது முற்றுமுழுதாக தேர்தல் பிரசாரங்களில் ஒன்றித்துப் போயிருக்கின்றனர். அதாவது கூட்டமைப்பு நிறுவப்பட்ட உடனேயே தேர்தல் வந்துவிட்டது. எனவே அனைவரும் வாக்குச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர்க்க முடியாதது என்றாலும் இந்தக் காரணத்தினாலேயே, இந்தக் கூட்டு தொடர்பான சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

எனவேதான், கூட்டமைப்பின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எக்காலத்திலும் ஒரு மிதமான அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. கூட்டமைப்பானது தேர்தல் பிரசாரங்களுக்கு சமாந்திரமாக கொள்கைப் பிரகடனங்களை கடைப்பிடிப்பதிலும், கூட்டமைப்பின் இறுதி இலக்கு எதுவோ அதை நோக்கி நகர்வதற்கும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கூட்டமைப்பு செயற்படுமாயின் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறத் தொடங்கும். அப்போதுதான் முஸ்லிம் கூட்டமைப்பு என்பது மக்கள் காங்கிரஸில் சங்கமிக்கவில்லை என்பதையும் அது ஒரு சிறந்த அரசியல் வழித்தடம் என்பதையும் மக்கள் உணரச் செய்ய முடியும்.

இவ்விடத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணக்கம் கண்டுள்ள 12 கொள்கைகளும் மக்கள்மயப்படுத்தட வேண்டியதும் சிலருக்கு ஞாபகப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகின்றது. அந்தவகையில், அவ்வாறான 12 கொள்கைகளுள் பின்வருவன மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்:

•    முஸ்லிம்களும் ஒரு தனியான தேசியம் என்பதையும் அவர்களது சுயநிர்ணத்தையும் உறுதிப்படுத்தல்.
•    வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எந்த அடிப்படையிலும் இணைக்கப்படுவதை எதிர்த்தல்.
•    நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நேரடியாக மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருத்தல்.

•    பாராளுமன்ற தேர்தல் முறைமையி;ல் மாற்றம் ஏற்படுத்தப்படுவதை தடுப்பதுடன்  அண்மைக்காலத்தில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களை நிவர்த்திக்க முயற்சித்தல்

•    சகல  மதப்  பிரிவினரினதும்  சுதந்திரமான  மதவழிபாட்டுக்கான  உரிமை உறுதிப்படுத்துவதுடன் மத வழிபாடுகளில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்தல்
•    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீள மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல்

•    அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது மாவட்ட ரீதியான இன விகிதாசாரத்தை பேணும் வகையில் அதனை மேற்கொள்ளல்.

•    அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளை மையமாகக் கொண்டும் இன விகிதாசாரப்படி காணி அதிகாரங்களுடன் கரையோர மாவட்டத்தை உருவாக்கல் போன்றவை இவற்றில் முக்கியமானவை எனலாம்.  

ஹசனலியின் பொறுப்பு
இது விடயத்தில் பொதுவாக கூட்டமைப்பின் நிறுவுனர்களுக்கு அதிலும் முக்கியமாக அதன் தலைவர் எம்.ரி. ஹசன்அலிக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது. முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் என்ற பதவியும் அதற்குண்டான கௌரவமும் வெறும் பதவியால் அழகுப்டுததப்படுவதில்லை. தனது உடம்புக்கு முடியாத வயதிலும் இரா. சம்பந்தன் செயற்படுவது போன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவராக ஹசனலியும் கூட்டமைப்பும் இருக்கும் போதே அழகுபடுத்தப்படும்.

கூட்டமைப்பு என்ற பொது வேலைத்திட்டத்தில் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்த தன்மையுடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை, அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை வைத்து உய்த்தறிந்து கொள்ளலாம்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு உண்மையில் முஸ்லிம்களின் மனங்களை வென்ற கூட்டமைப்பாக இருக்க வேண்டுமென்றால் தலைவர் ஹசனலியும் அதில் அங்கம் வகிப்போரும் எப்போதும் கூட்டமைப்பின் கொள்கைகள் என்ற பொது வேலைத்திட்டத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. அதிலுள்ள கட்சியின் அல்லது தனிநபர் யாருடைய அஜந்தாவுக்கும் பின்னால் போக வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. அவ்வாறு சென்றால் கூட்டமைப்பு வெற்றியளிக்காது.

முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பு மு.கா. தலைவரை அல்லது வேறு அரசியல்வாதியை தோற்கடிப்பதை தமது தலையாய நோக்காகக் கொண்டிருக்க முடியாது. கூட்டமைப்பு என்பது உயரியது என்பதால் அதன் போக்குகளும் கொள்கைகளும் உயர்வாக இருக்க வேண்டும். ஹக்கீம் தவறு செய்திருக்கின்றார் என்பது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் அதில் இன்று கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் முதற்கொண்டு பொது மக்கள் வரைக்கும் எல்லோருக்கும் ஏதோ ஒருவகையில் பங்கிருப்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியது
எனவே, 17 வருடம் தவறிழைத்திருக்கின்றோம் அல்லது அதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றோம் என்பதை கூட்டமைப்பினர் மனதார உணர்வார்கள் என்றால் அவர்கள் சரியானதை செய்வதன் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும். அப்படியாயின் நல்லாட்சியை அமைத்து விட்டு மீண்டும் மஹிந்த அணியினரை உள்வாங்கியது போல், தூய்மையானவர்கள் என்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாதவர்களை ஆட்கணக்கிற்காக சேர்த்துக் கொண்டால், அது கூட்டமைப்பின் கோட்பாட்டிற்கும் பாதகமாகவே அமையும்.

அரசியல் பிரசாரங்களும் தேர்தல் வேலைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமே. ஆனால் அதற்காக கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனங்கள் எழுத்தில் மட்டும் இருக்க முடியாது. தேர்தலில் வெற்றிக்காக பாடுபடுதல் என்ற பெயரில் ஒரு கட்சிசார்பு அரசியலுக்குள் முற்றாக மூழ்கி தன்னிலை மறந்து விடக் கூடாது. பொது விடயங்களில் தனிப்பட்ட கட்சிகளன்றி கூட்டமைப்பு என்ற பொது இயக்கமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சமாந்திரமாக, கூட்டமைப்பின் பிரகடனங்கள் இறுதி இலக்கை நோக்கி உயிர்ப்புடன் நகர்ந்து செல்ல வேண்டியிருக்கின்றது.

கூட்டுக்குடும்பத்தில் ஏற்படும் பின்னடைவுகள், பிளவுகள் மிகவும் பாரதூரமான தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நினைவிற் கொள்ளவும்.
–    ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 31.12.2017)

Web Design by The Design Lanka