தேர்தல் முடிவுகள் முழு முஸ்லிம் சமூகத்தின் முகத்தின் மீது சேறைவாரி வீசியுள்ளது - Sri Lanka Muslim

தேர்தல் முடிவுகள் முழு முஸ்லிம் சமூகத்தின் முகத்தின் மீது சேறைவாரி வீசியுள்ளது

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டு எதிர்பாராத தோல்வியை தழுவியமை வேதனைக்குரியது. இந்த இரு கட்சிகள் மீதான தனிப்பட்ட ஆதரவுத் தளம் என்பதற்கு அப்பால் இந்தத் தோல்வியை நோக்கும் போது அது முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் முகத்தில் சேறைவாரி வீசியுள்ளது என்றே நான் கூறுவேன்.

 

இந்த இரு கட்சிகளும் ஐக்கியப்பட்டது போன்று முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் தேவையென்ற நிலைப்பாட்டில் இருந்தவன் நான். ஆனால், ஊவாவில் கட்சிகள் ஐக்கியப்பட்டு விட்டன. அந்த மக்கள் பிரிந்து நின்று வாக்களித்து விட்டனர். இது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் இன்று சாபக் கேடாகி போயுள்ளது.
இதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் எந்தத் தரப்பில் என்றாலும் ஊவாவுக்கு அப்பால் தேசிய ரீதியில் பார்க்கப்படும்போது தேர்தல் முடிவுகள் முஸ்லிம்கள் தரப்பில் ஏமாற்றத்தையும் ஏளனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஊவா முஸ்லிம் மக்கள் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் சேற்றை அள்ளிப் பூசிவிட்டார்களா அல்லது முஸ்லிம் தலைமைகளின் நடவடிக்கைகளினால்தான் இந்த நிலை ஏற்பட்டதா என்பது வேறாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். ஆனால், சமூகம் என்ற வகையில் பாரிய ஏமாற்றமும் வெட்கக் கேடாகவும் இந்த விடயம் போய் விட்டது.

 

அரசுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும் அந்தத் தோல்வி பெரிதான தோற்றத்தில் காணப்பட்டிருக்கமாட்டாது. ஆனால், தனித்து நின்று போட்டியிட்டதால் தோல்வி அப்படியே வெளிச்சமாகத் தெரிந்து விட்டது. இருப்பினும் ஒற்றுமைப்படுவதற்காக தனித்துப் போட்டியிட்டமைக்காகப் பாராட்டாமல் இருக்க முடியாது.

 

ஊவா மாகாண முஸ்லிம் மக்களின் தீர்ப்பு முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் தேசிய அரசியலில் ரீதியாக நிமிர்ந்து நிற்கச் செய்யுமென இறுதி வரை நானும் எதிர்பார்த்தேன். ஆனால், முடிவுகள் எமது சமூகத்தை ஊன்றுகோலுடனும் இன்னொருவர் துணையுடன் நடக்கச் செய்து விட்டது.
இரு கட்சிகளின் தலைமைகள் இன்று இந்த நாட்டின் தலைமையிடமோ அல்லது அரசுடனோ எந்த முகத்துடன் விழிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் எங்கள் பிரச்சினைகள், பாதுகாப்பு, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த தேவைகள் அனைத்தும் இல்லாத நிலைமைக்கு ஆளாகி விடுமோ என்றும் என்னால் நோக்கத் தோன்றுகிறது.

 

மேலும் ஊவா மாகாண முஸ்லிம் மக்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதிலும் பல விடயங்கைள ஆராய வேண்டியுள்ளது.

1. சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் தொடர்பில் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளாமை.

2. குறித்த இரு கட்சிகளும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவை.

3. இந்த இரு கட்சிகளினதும் தலைமைகள் அரசாங்கத்தைச் சேர்ந்தவை.

5. இந்தக் கட்சிகளின் கடந்த கால செயற்பாடுகளில் ஏமாற்றமும் அதிருப்தியும் கொண்டமை.

 

6. ஊவாவைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களான மூன்று முஸ்லிம்களை வேட்பாளர் பட்டியலில் சேர்க்காமை போன்ற காரணங்கள் ஊவா முஸ்லிம்களிடம் இருந்திருக்கலாம்.

 

ஆனால், அவர்கள் இவைகள் அனைத்தையும் மறந்து ஒன்றாக ஐக்கியப்பட்டு இரு கட்சிகளுக்கும் வாக்களித்திருக்க வேண்டும். இது அந்த இரு கட்சிகளுக்குமாகத்தான் என்று அவர்கள் செய்வதாக நினைக்காமல் முழு முஸ்லிம் சமூகத்தினதும் நலனில் அக்கறை கொண்ட நிலையில் வாக்களித்து வெற்றியை வழங்கியிருக்க வேண்டும். அதனைச் செய்திருந்தால் இன்றைய நாள் ஊவா மக்கள் இலங்கையில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்தையும் பேரும் புகழுக்கும் உள்ளாக்கிய நாளாக அமைந்திருக்கும். எங்களுக்கான பேரம் பேசும் சக்தியும் நிமிர்ந்து நின்றிருக்கும்.

 

இதேவேளை, களத்தில் போட்டியிட்ட இரு கட்சிகளும் தங்களை சுய விமர்சனத்துக்கு உட்படுத்தி தங்களது பக்க குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் வேண்டும். இதுவே எனது நிலைப்பாடாகும்.

Web Design by Srilanka Muslims Web Team