தொடரை இழந்தாலும் இந்தியா நம்பர்-1, இலங்கை-4 - Sri Lanka Muslim

தொடரை இழந்தாலும் இந்தியா நம்பர்-1, இலங்கை-4

Contributors

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் வீராட் கோஹ்லி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இவர், சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காதது தான் பின்னடைவுக்கு காரணம்.

இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 189 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்ரிக்க அணியின் அணித்தலைவர் டிவில்லியர்ஸ், 872 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார்.

ஏற்கனவே இவர், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் நம்பர்-1 இடத்தில் உள்ளார்.

இதன்மூலம் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் 9வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

தென் ஆப்ரிக்கா சார்பில் காலிஸ், ஆம்லாவுக்கு பின் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரரானார்.

கேப்டன் தோனி 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சோபிக்காத இந்தியாவின் ஷிகர் தவான் (10வது இடம்), ரோகித் சர்மா (18வது), சுரேஷ் ரெய்னா (23வது) ஆகியோரும் பின்னடைவை சந்தித்தனர்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியல்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மூன்று இடங்கள் முன்னேறி 2வது இடம் பிடித்தார்.

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா(7வது இடம்), அஷ்வின்(17வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.

தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (8வது இடம்), மார்னே மார்கல் (9வது) ஆகியோர் “டாப்-10′ வரிசையில் உள்ளனர்.

இந்தியா நம்பர்-1

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது.

அடுத்த மூன்று இடங்களில் அவுஸ்திரேலியா(114 புள்ளி), இங்கிலாந்து(111), இலங்கை(110) அணிகள் உள்ளன.

மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் ஆப்ரிக்க அணி 110 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது.

அடுத்த இரண்டு இடங்களில் பாகிஸ்தான்(100 புள்ளி), மேற்கிந்திய தீவுகள்(90 புள்ளி) அணிகள் உள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team