தொடர்ச்சியாக 19 வருடங்களாக இயங்கி வரும் ஒரே அமைப்பு செடோ - செயலாளர் எம்.எம்.எம் அஜ்மல் » Sri Lanka Muslim

தொடர்ச்சியாக 19 வருடங்களாக இயங்கி வரும் ஒரே அமைப்பு செடோ – செயலாளர் எம்.எம்.எம் அஜ்மல்

1

Contributors
author image

முஸாதிக் முஜீப்

நீர்கொழும்பு SEDO அமைப்பினால் (Social Educational Development Organization) 17 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட யாழ், முஸ்லீம் சமூக ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03-06-2018) நீர்கொழும்பு ஸைபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 4.30 மணியளவில் இந்நிகழ்ச்சி கிராஅத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அஷ்ஷெக் எஸ். எச். எம் பளீல் ( நளீமி) “கல்விக்கன சூழலை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் யாழ், முஸ்லீம்கள் மாத்திரமல்லாது நீர்கொழும்பு பிரதேச மக்கள் அடங்களாக சுமார் 500 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

யாழ்,முஸ்லிம் சமூகம் 1990,ஒக்டோபர்,30அன்று விடுதலை புலிகளால் “இனச்சுத்திகரிப்பு” செய்யப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை யாழ்,முஸ்லிம் சமூகத்தோடு இணைந்து செயாலாற்றி வரும் செடோ அமைப்பு 2002ம் ஆண்டிலிருந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டிய சட்டத் தேவையின் காரணமாக செடொ (SEDO) எனும் பெயரில் அமைப்பை உருவாக்கி சட்டரீதியான அமைப்பாக பதிவு பெற்று அதன் பெயரில் வங்கிக் கணக்கையும் ஆரம்பித்து, தேசிய ரீதியான சமூக ஒன்றியங்களின் அங்கத்துவம் பெற்ற அமைப்பாகவும் செயற்பட்டு வருகின்றது.

இதன் போது கருத்து தெரிவித்த செடோ அமைப்பின் செயலாளர் எம்.எம்.எம் அஜ்மல் குறிப்பிடுகையில்….

புத்தளம்,றத்மல்யாய,வை.எம்.எம்.ஏ நகர் பிரதேசங்களுக்கு அண்மித்ததாக ஐந்து ஏக்கர் நிலப் பரப்பில் “ ஓஸ்மானியா கார்டின் “ எனும் பெயரில் மையாவாடி,மஸ்ஜித்,விளையாட்டு மைதானம்,தொழில்நுட்ப கல்லூரி என்ற பல்தொகுதித் திட்டத்தை உருவாக்கி 2007ம் ஆண்டிலிருந்து மையவாடி ஜனாஸா நல்லடக்கத்திற்காக பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இன்று வரை 270 ற்குமேற்பட்ட ஜனஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் “ மஸ்ஜிதுல் ஹம்ந் “ எனும் பள்ளிவாசலும் இயங்கி வருகின்றது. மஸ்ஜித்,மையவாடி என்ற இரண்டும் “ மஸ்ஜிதுல் ஹம்ந் ட்ரஸ்ட் “ எனும் பெயரில் சட்டமுறையில் பதிவு பெற்று வக்பு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம் ஒஸ்மானியா கார்டின் ஜின்னா மைதானம் என்ற பெயரில் அப்பிரதேச இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மைதானம் இன்னும் தரமுயர்த்த வேண்டி உள்ளது. அத்துடன் ஒரு தொழில் நுட்பக் கல்லூரிக்கான இடமும் ஒதுக்கப்‌பட்டுள்ளது. மைதானம்,கல்லூரி என்பவற்றிற்கான இடம் யாவும் “ ஒஸ்மானியா கார்டின் ட்ரஸ்ட்“ என்ற பெயரில் சட்ட ரீதியாக பதியப்பட்டு வக்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 கடைகளுக்கான ஒரு வர்த்தக தொகுதிக்கான இடமும் ஒதுக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் சந்ததியினர் அவ்வர்த்தக தொகுதியை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு….

1997ம் ஆண்டிலிருந்து விடுதலை புலிகளால் வடக்கின் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பால் வெளியேற்றப்பட்டு,றத்மல்யாய,தில்லையடி பிரதேசத்தில் தஞ்சம் புகுந்து அகதிகளாக வாழ்ந்த மாணவர்களுக்கான மாலை நேர இலவச கல்வியை ஆறு வகுப்புக்களைக் கொண்ட இடம் அமைத்து நடத்தி வந்தோம்.

2003ம் ஆண்டு ரணில்- பிரபா ஒப்பந்த்தத்தின் மூலம் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் யாழ்,சோனகதெருவில் மீள்குடியேறி வாழ ஆரம்பித்த நம் சமூகத்தின் நலன் கருதி ,அன்று யாழ்,ஒஸ்மானியா கல்லூரியின் மீள் திறப்பில் பிரதான பங்காளராக செயற்பட்டதோடு தொடர்ந்து 2014ம் ஆண்டு வரை ஒஸ்மானியாவின் வளர்ச்சியில் தனித்து நின்று முழுமையான பங்களிப்பை வழங்கினோம்.

மீள்குடியேற்ற திட்டங்களை ஒழுங்கு படுத்தவும் ஒற்றுமையாக ஒரே அணியில் செயற்படுவதற்காகவும் என “ யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் “ ஒன்றை உருவாக்க முழுமையான பங்களிப்பை வழங்கினோம்.

சுனாமி அழிவின் போது அம்பாந்தோட்டை,கிண்ணியா பகுதிகளில் உயர்தர,சாதாரணதர மாணவர்களுக்கும்,தொண்டர் ஆசிரியர்களுக்குமான ஒரு வருட ஆதார நிதியை வழங்கினோம்.

இவை தவிர வழமையான நிவாரணம் வழங்குதல்,கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்குதல் போன்றவற்றையும் மேற்கொண்டோம்.

யாழ்,முஸ்லிம் சமூக மத்தியில் தொடர்ச்சியாக பத்தொன்பது வருடங்களாக இயங்கி வரும் ஒரே அமைப்பான செடோ (SEDO) அமைப்பினராகிய எமக்கு சில விரும்பத்தகாதவர்களால் அவதூறுகளும்,பழிச்சொற்களும் சமூகவலைத் தளங்களூடாக பரப்பப் பட்டதோடு, எமக்கு எதிராக பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்கள் நாற்பது ஜும்மா பள்ளிகளில் ஒரேநாளில் விநியோகிக்க பட்டன.

மேலும் எமக்கு எதிராக புத்தளம் தில்லயடி அம்மார் மண்டபத்தில் கண்டனக் கூட்டத்தையும் நடத்தி வசை பாடினார்‌.

எனினும் எங்களுடைய பொறுப்புக் கூறல்,கணக்களிதகைமை ( Accountability ) வல்ல அல்லாஹ்வுக்கே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு அமைதியாக சகல எதிர்ப்புக்களையும் தாங்கிக் கொண்டோம்.

ஏற்படக்கூடிய எல்லா இன்னல்களையும்,எதிர்ப்புக் களையும்,துயரங்களையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் தருகின்ற மன்னிப்பும்,அருளும் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமானது என்பதில் அசைக்க முடியாத நம்பிகையோடு பொறுமை அல்லாஹ்விடமே சாட்டுதல் செய்தோம்.

இறுதியாக எமது செடோ அமைப்போடு ஒத்துழைத்த JMA ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் யாழ்,முஸ்லிம் சமூகம்,மற்றும்‌புலம்பெயர்ந்து வாழும் யாழ்,முஸ்லிம் சமூகம்,இலங்கை வாழ் யாழ்,முஸ்லிம் வர்த்தக சமூகம்,கல்விச் சமூகம்,றத்மல்யாய மெற்றோ அமைப்பு அனைவருக்கும் எமது நன்றிகளும்,பிரார்த்தனைகளும் என்றார்.

Web Design by The Design Lanka