தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ள ஒலுவில் காணிகளுக்கான நஷ்டஈட்டு விவகாரம் - Sri Lanka Muslim

தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ள ஒலுவில் காணிகளுக்கான நஷ்டஈட்டு விவகாரம்

Contributors

-எஸ்அஷ்ரப்கான்-

ஒலுவில் துறைமுக அபிவிருத்திப்பணிக்காக காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வளங்குவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலக  கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் இதுவரை வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவதாக  காணிகளை இழந்தோர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இதுவிடயமாக அச்சங்கம் பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அட்டாளைச்சேனை பிரதேச செயலக  கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ள  02 கோடி 92 லட்சத்து 29 ஆயிரத்து 120 ரூபாய் பணம் முதல் கட்ட நஷ்டஈட்டுக் கொடுப்பனவு தொகையினை காணிகளை இழந்தவர்களுக்கு வளங்குவதில் இழுபறி நிலை காணப்படுகிறது. இதன் மூலம் எமது உரிமைகள் மறுக்கப்படுகிறது. அதனால்  நஷ்டஈடு வளங்கும் வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபாவின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி  கோரிக்கை விடுக்கின்றோம்.

மேற்படி ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மான பணிக்காக 2008ம் ஆண்டு சுவிகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத்தினைக்களத்தினால் செய்யப்பட்ட மதிப்பீடு அதிகூடியது எனும் யூகத்தின் அடிப்படையில் அதை இலங்கை துறைமுக அதிகார சபை ஏற்றுக்கொள்ளாததினால் 05 வருடங்களாக நஷ்ட ஈடு வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

கடந்த 2013.04.01ம் திகதி ஜனாதிபதி தலைமையில் காணியமைச்சில் நடைபெற்ற காணிப்பிரச்சினைகள் சம்மந்தமாக ஆராயும் கூட்டத்தில் ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிக்காக காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வளங்கப்படாமை சம்பந்தமாக காணியமைச்சின் செயளாளர் அஷோக பீரிசினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அவ்விடயம் கலந்துரையாடப்பட்டதன் பிற்பாடு தெளிவான சட்ட பிரச்சினைகள் அற்ற காணி உறுதிப்பத்திரங்களுக்குரிய உரிமையாளர்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவாக ஒரு பேர்ச் காணிக்கு 30000 ரூபா  படி துரித கதியில் வழங்கும் படியும் இரண்டாம் கட்ட கொடுப்பனவு சம்மந்தமாக காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சுமுகமாக தீர்த்துக்கொள்ளும் படியும் துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அதன் பிற்பாடு 2013.08.26 ம் திகதி காணி இழந்தோர் குழுவுக்கும் துறைமுக அதிகார சபை தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று அதில் முதல் கட்ட கொடுப்பணவாக ஒரு பேர்ச் காணிக்கு 30000ரூபா படி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் பின்னர் 01 பேர்ச் காணிக்கு 20000 ரூபா  படியே 20 பேருக்கு நஷ்ட ஈட்டுப்பணம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக் கணக்கில் 2013.08.29 ம் திகதி வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அந்த நஷ்ட ஈட்டுத் தொகையினை காணிகளின் பரப்புக்கமைய பிரித்துத்தரும் படி பல தடவைகள் பிரதேச செயளாளர் ஐ.எம் ஹனிபாவிடம் கேட்ட போது அதனை தருவதாக பொய் வாக்குறுதி அழித்ததுடன் தற்போது பல்வேறு காரணங்களை கூறி  காலத்தை கடத்தி வருகின்றார் அத்துடன் இவ்விடயமாக நாங்கள் எழுத்து மூலம் அறிவித்தும் கூட இதுவரையில் எதுவிதமான பதிலும் கிடைக்கவில்லை இதனால் 05 வருட காலமாக நாங்கள் மிகவும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விடயம் இவ்வாறு இருக்கையில் பிரதேச செயளாளர் ஐ.எம் ஹனிபா 2014.01.01ம் திகதி இடமாற்றம் பெற்று நிந்தவூர்  பிரதேச செயலகத்துக்கு செல்ல இருப்பதாகவும் தற்போது சம்மாந்துறையில் பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.மன்சூர் அவர்கள் அட்டாளைச்சேனைக்கு இடமாற்றம் பெற்று வர இருப்பதாகவும் தெரியக்கிடைத்துள்ளது. பிரதேச செயளாளர் ஹனிபா பிரசே செயளாளர் மன்சூரிடம் பந்தை அடித்துவிட்டு  செல்வதால் எதிர்  காலத்தில் காணிகளை இழந்தவர்களுக்கும், பிரதேச செயளாளர் மன்சூர் அவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது .  என்பதனையும் சுட்டிக்காட்டுகிறோம்.

ஆகவே பிரதேச செயலாளர் ஹனிபா அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதற்கு முன் ஒன்றில் எங்களுக்கு உரித்தான நஷ்ட ஈட்டினை வழங்குவதற்;கு அறிவுரை வழங்கும் படியும் அல்லது இந்த நஷ்ட ஈட்டினை வழங்கும் வரைக்கும் அவரது இடமாற்றத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆவண செய்யும் படியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team