தொழிநுட்ப சேவையில் பதவி உயர்வு தொடர்பில் ஷிப்லி சபையில் முன்மொழிவு - Sri Lanka Muslim

தொழிநுட்ப சேவையில் பதவி உயர்வு தொடர்பில் ஷிப்லி சபையில் முன்மொழிவு

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

தொழிநுட்ப சேவையில் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கான 1ஆம், 2ஆம் திணைக்கள பதவி உயர்வுக்கான பரீட்சைகள் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் சுமார் 8 வருடங்களாக நடாத்தப்படவில்லை. இதனால் திணைக்களங்களில் பணி புரியும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பரீட்சைக்கு தோற்ற முடியாது பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் அவதியுறுகின்றனர்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண பொதுச்சேவை அணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016.10.06ஆந்திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார்.

தொழிநுட்ப சேவை என்று கருதுகின்றபோது கிழக்கு மாகாண சபையினுடைய எல்லா வகையான திணைக்களங்களுக்குள்ளும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் என்று உள்வாங்கப்படுகின்றவர்கள் அவர்களுடைய நியமனங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கான பதவி உயர்வுகளுக்காக விண்ணப்பிக்கின்றபோது அதாவது வடகிழக்கு மாகாண சபைகள் இணைந்திருந்த காலப்பகுதியில் நடைபெற்ற இவ்வாறான பரீட்சைகளின்போது அவர்களுடைய பதவி உயர்வுகளை பெற்றதன் ஊடாக அவர்களுடைய ஊதியங்களை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக கடந்த 8 வருட காலமாக கிழக்கு மாகாணத்தில் எவ்விதமான இவ்வாறானதொரு பரீட்சைகள் நடாத்தப்படாமையின் காரணத்தினால் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். குறிப்பாக இது கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் நடைபெறுகின்ற ஒரு அநீதியாக இதனை நாம் பார்க்கின்றோம். ஏனென்றால் இவர்களுக்கு சமாந்தரமாக ஏனைய 8 மாகாணங்களிலும் திணைக்களங்களில் பணி புரிகின்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இப்பொழுது அவர்களை விட ஒரே அளவான ஒரே காலகட்டத்தில் வெளியானவர்கள் இப்பொழுது உயர்ந்த பதவிகளில் இருப்பதென்பது உண்மையில் இம்மாகாணத்திலே பணி புரிந்த ஒரேயொரு காரணத்திற்காக அந்த தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மன உழைச்சலுக்குள்ளாக்கப்பட்டு தரமுயர்த்தப்படாமல் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் இருந்துகொண்டு இருக்கின்றார்கள். ஆகவே இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

சம்மந்தப்பட்ட தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்ழுவிடம் கேட்டபோது இப்பரீட்சையை நாங்கள் நடாத்த முடியாது எங்களுக்கு தெரியாது என்று கூறி இருக்கின்றார்கள். அதேபோன்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களிடம் இது விடயமாக முன்வைத்தபோது இதனை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால்த்தான் நடாத்தபட வேண்டுமென்ற ஒரு விடயத்தினை கூறி இருக்கின்றார்கள்.

ஆகவே இவர்கள் இங்கும் அங்குமாக பந்தாடப்பட்டு கடந்த 8 வருடங்களாக அலைந்து திரிந்து தங்களது பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படாததன் காரணத்தினால் மிக நீண்டகாலமாக இவர்களுடைய பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் சில தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் தங்களது ஓய்வூதிய வயதினை அடைகின்றபொழுது அவர்களுடைய ஓய்வூதியத்தில் மிக சொற்ப தெகையினை பெறுகின்றபோது பழிவாங்கப்படுகின்ற அல்லது அநியாயப்படுத்தப்படுகின்றார்கள் என்கின்ற ஒரு விடயத்தினை உங்கள் முன் நான் முன்மொழிகின்றேன்.

ஆகவே உடனடியாக இந்த விடயங்கள் இந்த மாகாண சபையினூடாக ஆராயப்பட்டு பொதுச்சேவை ஆணைக்குழு நடாத்துவதா அல்லது வேறு யார் இதற்கு பொறுப்பு என்கின்ற விடயத்தினை உடனடியாக ஆராய்ந்து பரீட்சைகள் நடாத்துவதன் ஊடாக சம்மந்தப்பட்ட தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று சபையில் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போது கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team