தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடு ..! - Sri Lanka Muslim

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடு ..!

Contributors
author image

Editorial Team

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

மார்ச் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து இந்த தீர்மானம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த யோசனையை செயற்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும உடன்பாட்டுக்கு வராத காரணத்தால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதனை சம்பள நிர்ணய சபைக்கு மாற்றினார்.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 900 ரூபாவும் மற்றும் பாதீட்டு நிவாரண கொடுப்பனவாக 100 ரூபாவுமாக 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்க கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், அதனுடன் தொடர்புடைய ஆட்சேபனைகளை தெரிவிக்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடியது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் குறித்த கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, மார்ச் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team