தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரி: 60 வருடங்களைத்தாண்டியும், உயர் தரம், கற்பதற்கான வசதி இல்லை ? » Sri Lanka Muslim

தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரி: 60 வருடங்களைத்தாண்டியும், உயர் தரம், கற்பதற்கான வசதி இல்லை ?

school1

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை, மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட, தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, 60 வருடங்களைத் தாண்டியும் இன்னும், இக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பிரிவில் மாணவர்கள் கணித, வர்த்தக, தகவல் தொழில் நுட்ப மற்றும் உயிரியல் பிரிவுகளில் உயர் தரம் கற்பதற்கான வசதி, வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லையென மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இக்கல்லூரியின் வரலாறு மிக நீளமானதாகும், தோப்பூர் பிரதேசத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கப்பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.இது இங்குள்ள தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி வழற்சியில் கணிசமான அளவு பங்காற்றியுள்ளது.

யுத்த காலத்தில் கூட இப்பாடசாலையில் கல்வி கற்ற அனேக மாணவர்கள் தரம் 5 பலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் ஆகியவற்றில் சிறப்பான பெறுபேறுகளைப்பெற்றிருக்கின்றனர்.

இங்கு அதிகமானோர், கல்வி பயின்று வருகின்றனர். இப்பாடசாலையை நம்பி தோப்பூர், அல்லை நகர், செல்வ நகர், பாலைத்தோப்பூர், இக்பால் நகர், பாரதி புரம், ஜின்னா நகர் ஆகிய பிரதேச மாணவர்கள் அதிகம் இங்கு கல்வி கற்கிறார்கள்.

இங்கு உயர் தரத்தில் கலைப்பிரிவில் மாத்திரம் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்குள்ளது இங்கு கல்வி பயிலும் அனேக மாணவர்கள் இப் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரி ஆகியவற்றிற்குச் செல்கிறார்கள்.

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து தோற்றி சிறந்த பெறு பேறுகளைப்பெற்றுக்கொள்கின்ற மாணவர்கள் கூட இங்கு உயர் தரம் கற்க வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கணித, உயிரியல், வர்த்தக, தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் ஆகிய பாட நெறிகளை கற்க வேறு இடங்களிலுள்ள நகர்ப்புறப்பாடசாலைக்குச் செல்ல வேண்டிய அவல நிலையுள்ளது.

இதனால் இவர்கள் திருகோணமலை, மருதமுனை, கல்முனை, கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய தூரப்பிரதேச பாடசாலைக்கு சென்று கல்வி பயில வேண்டிய அவல நிலை காணப்படுகிறது, இதனால் மாத மொன்றுக்கு பிள்ளைகளின் கல்விக்காக 25000 ரூபாவுக்கு மேலான தொகையினை செலவிட்டு தூர இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்பிக்க வைக்க வேண்டிய நிற்பந்தம் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் வீண் செலவினத்தையும் பெரும் அசௌகரியத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

இவ்வாறு மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைகளை நோக்கிப்படையெடுப்பதால் அங்குள்ள பாடசாலைகளிலும் இட நெருக்கடி ஏற்படுகிறன .

வசதி குறைந்த ஏழைப் பெற்றார்களின் பிள்ளைகளுக்கு திறமை இருந்தும் கற்க கூடிய அறிவு ஆற்றலிருந்தும் வேறு பிரதேச பாடசாலைக்கு அனுப்பி கற்பிக்க வைக்க முடியாத நிலையும் இங்குள்ள பெற்றாருக்கு ஏற்படுகின்றன இதனால் கண் கலங்கும் பெற்றார்களும், கண்ணீர் வடிக்கும் மாணவர்களும் கூட இப்பிரதேசத்தில் இல்லாமலில்லை, இதனால் ஏழை மாணவர்களின் திறமைகள் வீணே மழுங்கடிக்கப்படுகிறன

இவ்வாறான நிலை 60 வருடங்களை தாண்டியும் இன்னும் சீர் செய்யப்படவில்லை,இனியாவது உரிய பகுதியினர் கவனம் செலுத்தி தோப்பூர் அல்ஹம்றா ஆண்கள் மத்திய கல்லூரியில் கணித, விஞ்ஞான, வர்த்தக, தகவல் தொடர்பாடல் பிரிவுகளை ஏற்பபடுத்திக்கொடுக்க வேண்டுமென்பதே இவர்களின் கோரிக்கையாகும்.

Web Design by The Design Lanka