தோளில் பெட்சீட்டை சுமந்து வீடு வீடாகச் சென்று விற்று எனது மகனை படிப்பித்தேன் - ஆனந்தக் கண்ணீர் விட்டழுத தந்தை » Sri Lanka Muslim

தோளில் பெட்சீட்டை சுமந்து வீடு வீடாகச் சென்று விற்று எனது மகனை படிப்பித்தேன் – ஆனந்தக் கண்ணீர் விட்டழுத தந்தை

zaj

Contributors
author image

Editorial Team

தோளில் பெட்சீட்டை சுமந்து வீடு வீடாகச் சென்று பெட்சீட் கவர் விற்பணை செய்து எனது மகனை படிப்பத்தேன். இன்று அவர் கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருப்பது எனக்கும் எனது குடும்பத்துக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது என கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் தொழிநுட்பவியல் (பொறியியல்) பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மாணவன் முகம்மட் அம்ரித்தின் தந்தை முகம்மட் அன்சார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது மகன் மாவட்டத்தில் முதலிடம் பெற்றது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எமது குடும்பம் ஏழ்மைக்குடும்பமாகும். எனக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமுள்ளனர். அதில் மூத்தவர் எனது மகன் அம்ரித்தாகும்.

நான் வெளியூர்களுக்கு போய் எனது தோளில் பெட்சீட் கவரை சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பணை செய்வேன்.

மழை வெயில் என்று பாராது எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நான் இந்த தொழிலை செய்து அவர்களின் படிப்பில் அக்கறை காட்டி வந்தேன்.

இன்று எனது மகன் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் தொழிநுட்பவியல் (பொறியியல்) பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று எனக்கும் எனது மனைவிக்கும் எமது குடும்பத்திற்கும் அவர் கல்வி கற்ற காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலைக்கும் இந்த காத்தான்குடிக்கும் பெருமை சேர்த்துள்ளார் அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எனது மகளும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை எழுதியுள்ளார். அடுத்து பிள்ளைகளும் கல்வி கற்று வருகின்றனர். எனது மகன் அம்ரித் எந்தவொரு வீணாண செயற்பாடுகளிலும் ஈடுபடுவது கிடையாது. தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வார். பின்னர் வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருப்பார்.

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில்லை. மகனின் படிப்பு தேவைக்காக ஒரு கணணி இயந்திரமுள்ளது. மகனிடம் எந்த தேவையற்ற பழக்க வழக்கங்களும் கிடையாது.

எனது குடும்பம் காத்தான்குடி தெற்கு எல்லையிலிருந்து வண் செயல் காலத்தின் போது இடம் பெயர்ந்து புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி கபூர் வீதில் வந்து குடியேறினோம்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே பொருளாதார கஸ்டங்களுடன் நான் எனது பிள்ளைகளை படிப்பித்து வருகின்றேன். எனக்கு ஒரு வீட்டை கட்டிக் கொள்ள முடியாமல் மிகவும் கஸ்டமாக உள்ளது. எனது பிள்ளைகளை படிப்பிப்பதே எனது இலக்காகும்.

நமது ஊரில் ஆண் பிள்ளைகள் கல்வி கற்கின்ற வீதம் குறைந்து வரும் நிலையில் ஆண் பிள்ளைகளை கல்வியின் பால் ஒருக்கத்தின் பால் வளர்த்தெடுக்க வேண்டும் இது ஒரு பெரிய சவாலாகும்.

எனது மகன் முதலில் ஒரிரு மாதம் விஞ்ஞான உயிரியல் பிரிவில் படித்தார். பின்னர் வாப்பா இதற்கு கூட பணம் Nவை அதற்கு நம்மிடம் பணமில்லை எனக் கூறி அந்த துறையை மாற்றி தொழிநுட்பவியல் (பொறியியல்) பிரிவில் கல்வி கற்றார். மாஸா அல்லாஹ் இன்று அதில் சித்தியடைந்துள்ளார்.

அவரின் பெறு பேற்றை கேட்டவுடன் மகிழ்ச்சியில் இன்று நான் தொழிலுக்கு செல்லவுமில்லை. என்றார்.

இதன் போது காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவரது இல்லத்திற்கு சென்று அவரையும் மாணவன் அமிரித்தையும் வாழ்த்தினார். zs

(நன்றி  – http://www.zajilnews.lk இணையம்)

Web Design by The Design Lanka