நம்பிக்கையில்லா பிரேரணை : ஐ.ம.சக்தியானது மொட்டுவின் பிளவுகளை சரி செய்கிறதா…? - Sri Lanka Muslim

நம்பிக்கையில்லா பிரேரணை : ஐ.ம.சக்தியானது மொட்டுவின் பிளவுகளை சரி செய்கிறதா…?

Contributors

எரிபொருள் விலையேற்ற விவகாரம் இலங்கை அரசியலை உலுக்கி கொண்டிருக்கின்றது. மக்கள் விமர்சனங்களை அள்ளி வீசி கொண்டிருக்கின்றனர். எதிர் கட்சியினரை சொல்லவா வேண்டும், அவர்களும், அவர்களது பங்கிற்கு ஏதோ செய்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் விட ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இவ்விவகாரத்தில் மொட்டு கூட்டணியினர், தங்களுக்குள்ளேயே அடித்து கொள்வதாகும். இவர்களின் இந்த கூத்துக்குள் ஐ.ம.சக்தியானது ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரவுள்ளது. இது எந்தளவு அரசியல் நகர்வுகளை கொண்டது என ஆராய்வதும் பொருத்தமாகும்.

இதனை நாடகம் என சிலர் கூறுவதையும் ஒரேயடியாக மறுக்க முடியாது. தற்போது முரண்படுவது போன்று ஆடிக்கொண்டிருப்பவர்கள் 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தம், துறைமுக நகர சட்டம் போன்ற விடயங்களிலும் தலை கீழாக நின்ற குழுவினரே. குறித்த விடயங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் போது எதிர்ப்பார்கள். வாக்களிப்புக்கு விடப்படும் போது இரு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்பார்கள். அரசை எதிர்க்கட்சியினர் அதிகம் விமர்சிக்காமல், தங்கள் அணியினரை, தாங்களே விமர்சிக்கின்றார்களா என்ற ஐயப்பாடும் உள்ளது. இக் குழுவினரின் நடவடிக்கைகள் சிலவற்றை ஆராயும் போது சந்தர்ப்பத்திற்கு கதா பாத்திரமேந்தி நடிக்கும் நாடகக்காரர்கள் என்ற தோற்றத்தையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பேரின ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், இது நாடகம் என்றே வர்ணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நாடகம் என வர்ணித்து முரண்பான்டை சந்திக்கு கொண்டுவரும் உத்தியாகவும் இருக்கலாம்.

அரசியல் மிக நிதானமானது. இந்த அரசியல் சூத்திரத்தை நன்கு அறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி. மைத்திரியை பொறுத்தமட்டில் மஹிந்தவை எதிர்க்க தருணம் பார்த்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கை அரசியலில் மைத்திரியின் பலம் கடந்த சில தேர்தல்களில் பெரிய பேசு பொருளாக அமையாது போனாலும், எதிர்வரும் காலங்களில் பெரிதும் உணரப்படும் வகையில் அமையும். இவர்கள் நாடகம் ஆடுகிறார்களா என நம்மை சிந்திக்க வைக்கும் விடயங்களான 20வது அரசியலமைப்பு சீர்திருத்தம், துறைமுக நகர சட்டம் போன்றவை எதிர்க்க பொருத்தமான நேரமா என்பது வாதத்திற்குரியது. இவர்கள் எதிர்த்திருந்தால், சில வேளை இவர்கள் அதில் தோற்றிருப்பார்கள். அன்றே எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு தங்களது பலத்தை காட்ட இயலாது போயிருக்கும். புலியும் பதுங்கியே பாயும். அது பதுங்குவது பயத்தால் அல்ல என்பது இங்கு நினைவூட்டத்தக்க வேண்டியதொரு விடயம்.

தற்போது நடைபெறும் சில விடயங்களை வைத்து நோக்கும் போது மொட்டு கூட்டுக்குள் உள்ளக முரண்பாடிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம், குறித்த எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர் உதய கம்மன்பில மீது போட்டிருந்தார். அவரின் குற்றச்சாட்டானது கட்சியின் பெயரை வைத்து வெளிவந்திருந்ததால், அதற்கு பதில் வழங்க வேண்டிய கடமை உதய கம்மன்பிலவுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் உதய கம்மன்பிலவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தனர். அவர்கள் அந் நிலைப்பாட்டில் இருக்கவும் வேண்டும். இது உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானமாக இருக்க சிறுதும் வாய்ப்பில்லை.

இது தொடர்பான சர்ச்சை சாகல காரியவசத்தின் அறிக்கையோடு எழுந்ததும், சாகல காரியவசமும் உதய கம்மன்பிலவும் அரசியல் உயர் மட்டத்தினரது தலையை உருட்டாது மோதியிருக்கலாம். இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய கம்மன்பில, இது எனது தீர்மானமல்ல, ஜனாதிபதி, பிரதமரின் தீர்மானம் என கூறி, எடுத்த எடுப்பில் அவர்களின் கழுத்திலேயே கத்தியை வைத்திருந்தார். இதனுடைய பொருள், ” என் மீது கை வைத்தால், நான் எதுவும் பார்க்காமல் உங்களை வெட்டி வீழ்த்துவேன் ” என்பதாகும். இது அவர்களுக்கிடையில் பாரிய முரண்பாடு இருப்பதை தெளிவு செய்கிறது. உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக ஜனாதிபதியே களம் வந்திருந்தார். எரிபொருள் விலையேற்றம் மக்களிடையே பாரிய எதிர்ப்பை பெற்றிருக்கும் நிலையில், இதனை ஜனாதிபதியே தேசிய பொருளாதாரத்தை முன்னிறுத்தி செய்தோம் என கூறுவது சாதாரணமாக நோக்க வேண்டிய ஒன்றல்ல. முரண்பாடுகளின் உச்ச நிலையிலேயே இது நிகழ சாத்தியமான ஒன்று. இவர்களுக்குள்ளே பாரிய முரண்பாடுகள் இருப்பதை இன்னும் ஆழமாகவே ஆராய முடியும்.

இந்த உள்ளக முரண்பாட்டை எதிர்க்கட்சியினர், குறிப்பாக ஐ.ம.சக்தியினர் உரிய விதத்தில் கையாழ்கிறார்களா என்பதே இங்கு சிந்திக்கத்தக்கது. ஒரு கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் தோற்றம் பெற்றால், அதனை மேலும் விரிவாக்குவதும், அதில் ஒரு அணியை, தன் பக்கம் ஈர்த்தலுமே எதிர்க்கட்சியின் செயலாக அமைதல் வேண்டும். தற்போது மொட்டு கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது உதய கம்மன்பில அணியினரை ஐ.ம.சக்தியினர் அரவணைக்க முயல்வதே சாதூரியமானது. அவர்கள் பேரின வாக்குகளை கவரும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றேயாக வேண்டும். மொட்டணி உதய கம்மன்பில மீது தாக்குதல் நடாத்தும் போது, நாமும் சேர்த்து அவரை தாக்கினால், நாம் உதவி செய்வது யாருக்கு? மொட்டணிக்கல்லவா? அதில் விளையப் போகும் பயன் என்ன?

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ.ம.சக்தியானது உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரும் போது, இது அரசின் பிழையல்ல என்ற ஒரு செய்தியை ஐ.ம.சக்தி மறைமுகமாக மக்களுக்கு கூறுகிறது. இது இவ்விடயத்தில் அரசை நியாயப்படுத்துவதாக அமைகிறதல்லவா? ஐ.ம.சக்தியின் நோக்கம் ஆளும் தரப்பை எதிர்ப்பதா அல்லது உதய கம்மன்பில என்ற தனி மனிதனை எதிர்ப்பதா? எதிர்காலத்தில் உதய கம்மன்பில மொட்டு கூட்டணியை விட்டு பிரிந்தால், அரசின் அனைத்து பிழைகளையும் அவர்கள் மீது சுமத்த முற்படுவார்கள். இதுவே அரசியல். அப்போது இவ்வாறான விடயங்கள் மொட்டணிக்கு சார்பாக அமையும். நாங்கள் மாத்திரமல்ல, அன்றே ஐ.ம.சக்தியினரும் கம்மன்பிலவை எதிர்த்திருந்தார்கள், அன்று நாங்கள் தான் அவரை காப்பாற்றினோம் என மொட்டணியினர் கூறுவர். இது யாருக்கு பாதகமாக அமையும்? இங்கு மொட்டணியும், கம்மன்பில அணியும் பிரிந்திருப்பதாலேயே இவ்வாறான விடயங்களையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவர்கள் (ஐ.ம.ச) நம்பிக்கையில்லா பிரேரணை மூலம், மொட்டணியின் நாடகத்தை மக்களுக்கு வெளிப்படுத்த போவதாக கருதுகின்றனர். அது நாடகமாக இருந்தாலும், நம்பிக்கையில்லா பிரேரணை மூலம், அதனை வெளிப்படுத்த முனையாது, அவரை எதிர்ப்போரை நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருமாறு ஊடகங்கள் வாயிலாக அழுத்தத்தை வழங்கியிக்கலாம். ” உதய கம்மன்பில தான் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்றால், நீங்கள் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள், நாங்கள் அதனை ஆதரிப்போம் ” என கூறி அவர்களிடையிலான முரண்பாட்டை அதிகரித்திருக்க செய்திருக்கலாம். கதையும் தொடர்ந்திருக்கும். கதை தொடர தொடர பிரச்சினை அதிகரித்து கொண்டே இருக்கும்.

இந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு வரும் போது சாகல காரியவசம் மாத்திரம் நடுநிலை வகிக்க, ஏனைய ஆளும் கட்சியை சேர்ந்த அனைவரும் எதிர்த்து வாக்களிப்பர். பிரேரணை தோல்வியை சந்திக்கும். கட்சியின் சவாலை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டுள்ளதாக கூறுவர். இது ஒரு முக்கிய செய்தியை வெளிப்படுத்தும். கூட்டணிக்குள் முரண்பாடுகள் சகஜம், கூட்டணிக்கு ஒரு பிரச்சினை என்றால், அதனை அனைவரும் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டும் என்பதே அச் செய்தியாகும். இந்த மனோநிலை தோன்றுவது அவர்களை ஒன்றுமைப்படுத்திவிடும் . இதுவா ஐ.ம.சக்தியின் தேவை? மொட்டு கூட்டணிக்குள் தோன்றியுள்ள எரிபொருள் விலையேற்றம் தொடர்பான பிரச்சினைகள் இந்த பிரேரணையோடு முடிவுக்கு வரும். கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிப்பதா ஐ.ம.சக்தியின் தேவை?

இந்த பிரேரணை பாராளுமன்றத்தினுள் விவாதத்திற்கு வரும் போது ஐ.தே.கவின் தலைவரும் பாராளுமன்றத்தில் இருப்பார். இவர் எவ்வாறு, தனது செயற்பாடுகளை அமைக்கப் போகிறார் என்பது பெரிதும் எதிர்பார்ப்புடையதாக அமையும். ஐ.தே.கவானது எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தாலும், அவ் விடயத்தில் உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்துவதை ஏற்கவில்லை என்பதாகவே அறிய முடிகிறது. இது தவிர்ந்து வேறு சில நகர்வுகளையும் அவர் சிந்திக்கலாம். ஐ.தே.கவின் தலைவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க கூடும். ரணில் ஆளும் கட்சியின் அஜன்ட்டாவிலேயே பாராளுமன்றம் வருகிறார் என்ற விமர்சனம் உள்ள நிலையில், இது மேலும் பல விமர்சனங்களை ஏற்படுத்தலாம். இதனை ரணில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதற்கு காலமே பதில் தரும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team