நல்லாட்சியில் எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை, நான் வெற்றி பெற்றால் மஹிந்தவுடன் செல்வேன் என்று எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தெரியும் - சந்திரகாந்தன் - Sri Lanka Muslim

நல்லாட்சியில் எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை, நான் வெற்றி பெற்றால் மஹிந்தவுடன் செல்வேன் என்று எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தெரியும் – சந்திரகாந்தன்

Contributors

நல்லாட்சியில் எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை, மண்டூர் – குருமணிவெளி பாலத்திற்கு அன்றைய அமைச்சர் வந்து கல்நட்டபோதும் அங்கு பாலத்தினை காணவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 5000 சிறிய குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள், அணைக்கட்டுக்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு, உப்புவெட்டிக்குளத்தின் புனரமைப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் இந்த புனரமைப்பு பணிகள் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ளன. தற்போது குறித்த குளத்தின் ஊடாக 200 ஏக்கர் விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதுடன் குறித்த குளம் புனரமைக்கப்பட்டதும் மேலும் 300 ஏக்கர் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 70 குளங்களும் 18 அணைக்கட்டுகளும் புனரமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பான திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பொறியிலாளர் என்.நாகரத்தினம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பொறியிலாளர் என்.நாகரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சந்திரகாந்தன், கடந்த யுத்த காலத்தில் நாங்கள் எதைப்பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் இருந்தோம். நாணல்புல்கள் இருந்தால் மட்டுமே நாங்கள் ஒளியமுடியும். அந்த நிலைமை இன்று மாற்றம்பெற்றுள்ளது. இன்று அந்த நாணல்புல்களை அழித்துவிட்டு அணைக்கட்டுகளை அமைக்கின்றோம்.

நாங்கள் இந்த நிலத்தினை பயன்படுத்தி இங்கே வாழ்ந்தேயாக வேண்டும். நாங்கள் வளத்தினை வைத்துக் கொண்டு அதனை பயன்படுத்தாத காரணத்தினால் பலர் நாட்டை விட்டுச் செல்லும் நிலையேற்படுகின்றது.

இந்த அரசாங்கத்தின் கொள்கை எமது மண்ணுக்கு பொருத்தமான கொள்கை. நல்லாட்சி அரசாங்கம் எதனையும் இங்கு செய்யவில்லை. மண்டூர் பாலத்திற்கு கல் வைத்தார்கள். அமைச்சர் வந்து கல் வைத்தார். பாலத்தினை இன்னும் காணவில்லை. நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம்.

கிரான் பாலம், கிண்ணையடிப் பாலம், நரிப்புல் தோட்டம் பாலம் என்பனவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அது ஒரு வருடமே செல்லுபடியாகும். மூன்று நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருந்தார்கள். எதனையும் செய்யவில்லை. வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதியைக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்த முடியாதவர்களாகவே அவர்கள் இருந்துள்ளனர்.

பத்து வருடமாக நாடாளுமன்ற உறுப்பினராக யோகேஸ்வரன் ஐயா இருந்தார். அவரின் ஊரில் ஒரு பாடசாலை மூடப்படுகின்றது. இதுதான் அவர் பத்து வருட அரசியலில் இருந்து செய்த சாதனை.

மக்கள் வாக்களிப்பது அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு. நான் வெற்றி பெற்றால் மஹிந்தவுடன் செல்வேன் என்று எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தெரியும் நான் சிறையில் இருந்து வெளிவருவேன், மஹிந்தவுடன் சேர்ந்து வேலை செய்வேன் என்று. மக்கள் வாக்களித்தனர், வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team