நல்லாட்சியில் மஹிந்த பின் கதவால் நுழையாமல் இருந்திருந்தால் அனைத்தும் சிறப்பாகவிருந்திருக்கும்..! - Sri Lanka Muslim

நல்லாட்சியில் மஹிந்த பின் கதவால் நுழையாமல் இருந்திருந்தால் அனைத்தும் சிறப்பாகவிருந்திருக்கும்..!

Contributors
author image

Editorial Team

நல்லாட்சியின் போது பின் கதவால் மகிந்த ராஜபக்ஸவினை பிரதமராக கொண்டுவந்து குழப்பங்கள் நடைபெற்றிருக்காவிட்டால், மாகாணசபைத் தேர்தல், தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு, நாட்டினது பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களும் சிறந்த நிலையிலிருந்திருக்கும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும் உரை தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை களுவாஞ்சிகுடியில் உள்ள எனது அலுவலகத்தில் திருகோணமலையிலிருந்து உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் விசாரணைக்காக வருகை தந்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் மண் அகழ்வு விடயமாக கேட்கவிரும்புவதாக கேட்டிருந்தார்.

அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். சரியான விடயத்தினைச் செய்யப்போகின்றார்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் 10.09.2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிந்திருந்தது.

அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுநரினால் சிரேஸ்ட காவல்துறைமா அதிபரிடம் 9ம் திகதி ஒரு முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை என்ன என்பது கூட தெரியாமல் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறாக நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். கிழக்கு மாகாண ஆளுநரை பொறுத்தவரையில் அவர் கிழக்கு மாகாணத்தில் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களை சரியான வகையில் கையாளாதவராகவே இருந்து வருகின்றார்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணி விடயம் தொடர்பில் அவரின் செயற்பாடுகள், மண்மாபியாக்களை கட்டுப்படுத்தலிலான அணுகுமுறைகள், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்களை பார்க்கும் போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காவல்துறையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாவேயுள்ளது. நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணை செய்யுமாறு கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாத அரசியலை செய்கின்றது என்று அவர் ஊடகங்களுக்கு எனது பெயரை கூறி தெரிவித்ததமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் என முறையிட்டபோதிலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்மையில் கூட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்  கைதுசெய்யப்பட்டது அவரது சிறப்புரிமையினை மீறும் ஒரு செயல்.

தியாக தீபம் திலிபன் நினைவு தினத்தினை அமைதியான முறையில் அனுஸ்டித்தபோது அவரை கழுத்தைப்பிடித்து இழுத்துச்சென்றதானது நாடாளுமன்ற உறுப்பினர் என்றதுக்கே மதிப்பளிக்காத தன்மையினை அங்கு காணமுடிந்தது. கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் சிறப்புரிமையை மதிக்கவேண்டும்.

அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகத்தான் நாடாளுமன்ற சிறப்புரிமையும் சவாலுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் தனது கவனத்தினை செலுத்தவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையினை பாதுகாக்கவேண்டியது அவரின் பொறுப்பு. கிழக்கு மீட்பு கோசத்தினை செய்து வந்தவர்கள் இன்று காணி, மண் என பல கொள்ளைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும். இன்று ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200பேருக்கு மட்டுமே இவர்களினால் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. 2021ஆம் ஆண்டு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 33325பேருக்கு இலங்கையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிங்கவர்களுக்கு 31517பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு 1060பேருக்கு வழங்கப்பட்டுள்ளது, 748முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 33325பேரில் வெறும் ஆயிரம் தான் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 25வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும்போது இனவிகிதாசார அடிப்படையில் வழங்கியிருந்தால் கூட இதில் 8000பேருக்காவது நியமனங்கள் வழங்கியிருக்கவேண்டும்.

இந்த விடயத்தினைக்கூட உங்களால் கையாளமுடியாவிட்டால் உங்களால் என்ன அபிவிருத்தியை செய்யமுடியும். அண்மைக்காலமாக தூக்கத்திலிருந்த சில இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்கும் கருத்துச்சொல்வதும், ஒருநாளும் நாடாளுமன்றத்தில் உரையாற்றாதவர்கள் இன்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள். சாணக்கியன் பேசுகின்றார் என்ற காரணத்தினால் உங்களது மக்களுக்கு ஏதாவது குரல்கொடுக்கவேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் வந்ததை வரவேற்கின்றேன்.

20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 748 முஸ்லிம்களுக்குதான் நியமனம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பிலாவது சிந்தித்திருக்கவேண்டும். தனிப்பட்ட இலாபங்களுக்காக மாறிவிட்டு என்னை விமர்சிக்க வரவேண்டாம். நான் நாடாளுமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பேன்.

இதுவே எங்களது கட்சியின் நிலைப்பாடுமாகும். தேசிய இனவிகிதாசாரத்தில் நியமனங்களைக்கூட பெற்று வழங்க முடியாதவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானது தங்களது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவேயாகும். கிழக்கு மாகாணசபை தேர்தல் 2017ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டும், வடமாகாணத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தினை அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்கதவு வழியாக மகிந்தராஜபக்ஸவை பிரதமராக கொண்டுவராமல் விட்டிருந்தால் புதிய அரசியலமைப்பும் வந்திருக்கும், தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கும் அரசியல் தீர்வும் கிடைத்திருக்கும், மாகாணசபை தேர்தலும் நடந்திருக்கும்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும்தான் இதற்கு காரணம் என்று அமினிசியா என்னும் மறதி வியாதி ஏற்பட்டவர்கள் தான் இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பார்கள். மகிந்த ராஜபக்ஸவினை பிரதமராக கொண்டுவந்து குழப்பங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் நாட்டினது பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களும் சிறந்த நிலையிலிருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team