நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு தொடர்பில் சபையில் குழப்பநிலை! - Sri Lanka Muslim

நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு தொடர்பில் சபையில் குழப்பநிலை!

Contributors

இலங்கையின் நாடாளுமன்ற அமர்வை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

கடந்த வரவு செலவுத்திட்ட அமர்வின் போது ஒளிபரப்பப்பட்ட நாடாளுமன்ற அமர்வு தற்காலிக பரீட்சார்த்த நேரடி காட்சிகள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த ஒளிபரப்பு ஏன் நிறுத்தப்பட்டமை குறித்து ஐக்கிய தேசியக்கட்சியினர் கேள்வியெழுப்பிய போதே சந்திம வீரக்கொடி இந்த அறிவிப்பை விடுத்தார்.

இந்த ஒளிபரப்பை சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆரம்பித்து வைத்தபோது அதனை தற்காலிக பரீட்சார்த்த ஒளிபரப்பு என்று கூறவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே நிறுத்தப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டினர்.

இது பொதுமக்கள் தகவல் அறிவதை தடுக்கும் செயல் என்று அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.

இந்தநிலையில் வெளிநாடு சென்றுள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ச நாடு திரும்பியதும் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team