நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்குக - அரசாங்கத்தை வலியுறுத்தும் ரணில்..! - Sri Lanka Muslim

நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்குக – அரசாங்கத்தை வலியுறுத்தும் ரணில்..!

Contributors

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீக்கிரையான சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சமுத்திரவியல் சுற்றுச்சூழலுக்கு எக்பிரஸ் கப்பலில் பரவிய தீ காரணமாக ஏற்பட்டுள்ள பல மறைமுகத் தாக்கங்களையும் அதன் எதிர்கால தாக்கங்களையும் அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் மற்றும் 20 அமைச்சர்களை உள்ளடக்கிய தேசிய அனர்த்தப் பேரவையை கூட்டியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக கப்பலில் ஏற்பட்ட தீப் பரவல் குறித்து தீர்மானங்களை மேற்கொண்டு, கடற்பிராந்தியத்தில் அவசர அனர்த்த நிலைமை பிரகடனத்தை செய்திருக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதன்மூலம் சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்ற போதிலும் அதனைச் செய்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team