நாட்டின் தற்கால நிலையறிந்து வெளிநாட்டு நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அரசு அனுமதிக்க வேண்டும்..! - Sri Lanka Muslim

நாட்டின் தற்கால நிலையறிந்து வெளிநாட்டு நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அரசு அனுமதிக்க வேண்டும்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

இந்த காலக்கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் போன்றோர்கள் அனுமதித்தால் பல்வேறு நன்கொடைகளை இலங்கைக்கு எடுத்துவர தயாராக உள்ளோம். பல அமெரிக்க டொலர் நன்கொடைகளை இலங்கைக்கு எடுத்துவந்து மக்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். அரசாங்கத்தினால் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமாவது இந்த நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அனுமதியளிக்க வேண்டும் என்பதை அரசின் பங்காளி கட்சி என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோளாக முன்வைக்கிறேன் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நாகராசா விஸ்ணுகாந்தன் தெரிவித்தார்.

நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலான ஊடக அறிக்கையொன்றினுடாக அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதானது, சில பொருட்களுக்கு அரசினால் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பல்வேறு அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்களிடம் பணமில்லாத நிலை உருவாகியுள்ளது. இப்போது எமது நாட்டை நோக்கி வந்த பல்வேறு நன்கொடைகள் இலங்கை மத்திய வங்கியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவைகளெல்லாம் ஒருபுறமிருக்க மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய சரியான பொறிமுறைகளுடன் இந்த உதவிகள் நாட்டை வந்தடைந்தால் மக்களுக்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இலங்கையில் கொரோனா தொற்று நிலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பல்வேறு வகையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை சீர்செய்ய அரசு பல்வேறு வகையிலும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகிறது. இந்த காலகட்டத்தில் நாட்டிலுள்ள மக்கள் எமக்கிடையிலான பாகுபாடுகளை மறந்து நாட்டை கட்டியெழுப்ப முழுமையாக அர்ப்பணிப்புடன் ஒத்துழைக்க வேண்டியவர்களாக உள்ளோம். அரசும் வெளிநாட்டு நன்கொடைகளை இலங்கைக்குள் அனுமதித்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team