நாட்டில் ஒரு சட்டம் என்றால் இந்திய பிரஜைக்கு ஒரு சட்டமும் அசாத் சாலிக்கு வேறு சட்டமும் இடம்பெற முடியாது - சாய்ந்தமருதுவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் வரை சாராவுக்கு உதவி புரிந்தது யார் : முஜிபுர் ரஹ்மான் - Sri Lanka Muslim

நாட்டில் ஒரு சட்டம் என்றால் இந்திய பிரஜைக்கு ஒரு சட்டமும் அசாத் சாலிக்கு வேறு சட்டமும் இடம்பெற முடியாது – சாய்ந்தமருதுவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் வரை சாராவுக்கு உதவி புரிந்தது யார் : முஜிபுர் ரஹ்மான்

Contributors

நாட்டில் ஒரு சட்டம் என்றால் இந்திய பிரஜைக்கு ஒரு சட்டமும் அசாத் சாலிக்கு வேறு சட்டமும் இடம்பெற முடியாது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளான சாராவை இலங்கைக்கு அழைத்துவர இந்திய அரசாங்கத்திடம் இதுவரை ஏன் எவ்வித கோரிக்கையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என முஜிப்புர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்கள், தாக்குதல்கள் நடத்தப்பட்டவிதம், திட்டமிடப்பட்டமை மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான நபர்கள் குறித்து ஒருபுறம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் சஹ்ரானின் பின்புலம், அவருக்கு உதவிகளை செய்தவர்கள் மற்றும் அவரை வழிநடத்தியவர்கள் யாரென அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் அவ்வாறான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

என்றாலும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விடயங்களை தொடர்புப்படுத்துவதன் மூலம் சில தெளிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆணைக்குழுவின் அறிக்கையில் 251 ஆவது பக்கத்தில் சாய்ந்தமருதுவில் குண்டு வெடிப்பு இடம்பெற்றமை தொடர்பில் சாட்சிமளித்துள்ள சஹ்ரானின் மனைவி, குறித்த குண்டு வெடிப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சாராவின் குரல் தனக்கு கேட்டதாகவும் அவர் உயிருடன் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கையிலும் சாராவின் தாயின் டி.என்.ஏ பரிசோதனையின் பிரகாரம் சாரா உயிருடன் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனின் குண்டு வெடிப்பு இடம்பெற்ற சாய்ந்தமருதுவில் இருந்து சாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் வரை அவருக்கு உதவி புரிந்தது யாரென்ற பிரச்சினை எமக்குள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை இடம்பெற வேண்டும்.

மேலும் அண்மையில் குளியாப்பிட்டியவில் புத்தர் சிலை ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை குற்றப் புலனாய்வு பிரிவு தடுத்து வைத்து விசாரிக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அஸாத் சாலி தெரிவித்த ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை குற்றப் புலனாய்வு பிரிவு தடுத்து வைத்து விசாரித்து வருகின்றது. நாட்டில் ஒரு சட்டம் என்றால் இந்திய பிரஜைக்கு ஒரு சட்டமும் அசாத் சாலிக்கு வேறு சட்டமும் இடம்பெற முடியாது.

அதேபோன்று இந்த தாக்குதலை அடிப்படையாக் கொண்டு மத்ரசாக்களை தடைசெய்ய வேண்டும். புர்காவை தடைசெய்ய வேண்டும். அரபு மொழியை தடைசெய்ய வேண்டும் என்று பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்து வருகின்றார். சஹ்ரான் மத்ரசாவில் பூரணமாக கற்கவில்லை. அவருக்கு அரபு மொழி தெரியுமா என்ற எனக்கு தெரியாது. அதேபோன்று சஹ்ரானின் மனைவி புர்கா அணியவும் இல்லை. சஹ்ரான் செய்யாத விடயங்களையே அரசாங்கம் தடை செய்யப்பார்க்கின்றது.

எனவே இலங்கையில் 20 இலட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அந்த விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அழுத்தத்துக்குள்ளாக்க வேண்டாம்.

இதன் மூலம் சஹரானின் அடிப்படைவாத்துக்கு பதிலாக மேலுமொரு அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம். அரசாங்கத்தில் இருக்கும் அடிப்படைவாதிகள் தங்களுடன் இருக்கும் இனவாதிகளை திருப்திப்படுத்தவே இவ்வாற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team