நாட்டில் சிறுமி ஒருவர் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத சூழல், இதனை எண்ணி நாம் வெட்கமடைய வேண்டும்..! - Sri Lanka Muslim

நாட்டில் சிறுமி ஒருவர் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத சூழல், இதனை எண்ணி நாம் வெட்கமடைய வேண்டும்..!

Contributors

(செ.தேன்மொழி)

மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாகும். இதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள ‘மிஹிஜய செவண’ தொடர்மாடி குடியிருப்பில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலைய கட்டடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்காகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதன் காரணமாகவே ஜனாதிபதி இவ்வாறான அமைச்சை நியமித்துள்ளார். இந்நிலையில் இந்த பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டியது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் எனது பொறுப்பாகும். இதற்காக சிறந்த பொலிஸ் அதிகாரிகள் நாட்டில் உள்ளனர்.

இலங்கையை பொறுத்தமட்டில் வளர்ந்த பெண் உட்பட சிறுமி ஒருவர் கூட அச்சமின்றி செல்லக்கூடிய சூழல் இல்லை. இதனை எண்ணி நாம் அனைவரும் வெட்கமடைய வேண்டும். பாதாளகுழுக்கள், கப்பம் பெறுபவர்கள் , போதைப் பொருள் கடத்தல் காரர்கள் உள்ளிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டில் இருக்கும் வரையில் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியாது. அதனால் அவர்களை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும். இந்நிலையில் இத்தகைய நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.

தொடர்மாடி குடியிருப்புகளில் வசித்து வரும் பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் இங்குள்ளவர்களை சுயதொழில்களில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சில குழுக்களை உருவாக்க எதிர்பார்த்துள்ளேன். அப்போது அந்த குழுவினர் தங்களது முன்னேற்றத்திற்கான யோசனைகளை ஆராய்ந்து, பொலிஸ் அதிகாரிகள் ஊடாகவோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாகவோ எனக்கு அறிவிக்க முடியும். அதற்காக அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team