நான்கு மாதங்களாக நசுக்கப்பட்டுள்ள உரிமைக்குரல்..! - Sri Lanka Muslim

நான்கு மாதங்களாக நசுக்கப்பட்டுள்ள உரிமைக்குரல்..!

Contributors

அன்பார்ந்த தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, நண்பர்களே எமது தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி சட்டவிரோதமாகக் கைது செய்ப்பட்டு சரியாக நான்கு மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன. நான்கு மாதங்களுக்கு முன் (16ம் திகதி மார்ச் மாதம் ) மஃரிப் தொழுகையை (மாலை வேலை தொழுகை) முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது தான் குற்றத்தடுப்பு பிரிவினரால் எந்தக் காரணமும் கூறப்படாமல் சட்ட விரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சரியான பராமரிப்புக்களும் வசதிகளும் வழங்கப்படாத நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்ட அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளது அஸாத் சாலி என்ற தனிநபரோ அல்லது ஒரு கட்சித் தலைவரோ மட்டும் அல்ல. கிட்டத்தட்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரல் தடுக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. முஸ்லிம் சமூகத்தின் அவலங்களை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் சமூகத்திற்கும் படம் பிடித்துக் காட்டி வந்த ஒரு சிம்மக் குரல் நசுக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தன்னலம் பாராமல் இரவு பகலாக துடிப்புடன் சேவையைாற்றிய ஒரு தன்மானம் மிக்க தலைமைத்துவத்தின் குரல்வளை நசுக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன.

பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசல் என்ற பெயரில் தாய் நாட்டையும், தான் சார்ந்த மொத்த சமூகத்தையும் அற்ப சொற்ப நலன்களுக்காக காட்டியும் கூட்டியும் கொடுக்கும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், வெற்கக் கேடாகக் கூனிக் குறுகி உலாவி வரும் இந்த சமூகத்தில், பதவிக்கோ அல்லது பணத்துக்கோ சோரம் போகாமல் உண்மைக்காகவும், நீதிக்காகவும், நியாயத்துக்காகவும், நேர்மைக்காகவும் மட்டுமே எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி தன்மானமும், தனது சமூக மானமும் காக்க கம்பீரமாக மக்கள் மத்தியில் உலாவிய ஒரு வசீகரக் குரல் நசுக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன.

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிளை உடனுக்குடன் அரங்கேற்றி முஸ்லிம் சமூகத்தை விழிப்பு நிலையில் வைத்திருந்த ஒரு குரல், உறங்க வைக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன.

இந் நிலையில் தலைவர் அஸாத் சாலியின் விடுதலைக்காக குரல் கொடுத்த, மற்றும் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபட்ட சகல உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்கள் பிரதிநிதிகளுக்கும், ஏனைய சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் எமது கட்சியின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அஸாத் சாலி மீது சுமத்தப்பட்டு குற்றச்சாட்டு அபாண்டமானது. அவர் தனது சமூக நலனை முன்னிறுத்தி பேசினார் மற்றும் செயற்பட்டார். இதைத் தவிர பாரிய குற்றங்கள் எதையும் அவர் இழைக்கவில்லை. அவ்வாறான குற்றங்கள் எதற்கும் அவர் துணை போகவும் இல்லை என்பது விரைவில் உரிய நீதி மன்றத்தில் நிருபிக்கப்படும். அந்த வாய்ப்புக்காக எமது சட்டத்தரணிக் குழு தயார் நிலையில் காத்திருக்கின்றது.

விரைவில் அவர் பூரண நலனுடன் வீடு திரும்ப வேண்டும், நிச்சயம் அது நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தொடர்ந்து பிரார்த்தனை புரிவோம்

தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ)

Web Design by Srilanka Muslims Web Team