நான் உங்களுடைய கோரிக்கைக்குச் செவிசாய்க்க முடியாத நிலையில் இருக்கின்றேன் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

நான் உங்களுடைய கோரிக்கைக்குச் செவிசாய்க்க முடியாத நிலையில் இருக்கின்றேன் – ஜனாதிபதி

maithry

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Chittampalam Paranthaman


அண்மையில், கொழும்பில் – ஒருசில தமிழ் பேசுவோர்களையும் ஒருசில வெளிநாட்டவர்களையும் தவிர – முழுவதும் சிங்களவர்களே பங்கேற்றிருந்த ஒரு சபையில் நான் அமர்ந்திருந்தேன்.

வடக்கு முதலமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். பின்னர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பதிலளித்தார்.

அவரிடம் ஒரு கேள்வி — ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன யாழ்ப்பாணத்திற்கு 12 தடவைகளுக்கு மேல் வந்திருக்கிறார். அப்படியான ஒருவரோடு நேரடியாகப் பேசுவதன் மூலமாக உங்கள் மக்களின் பிரச்சனைகளை நீங்கள் தீர்க்க முடியாதா?

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்தார்:

“ஜனாதிபதி ஒரு நல்ல மனிதர். அவரில் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்காக நான் கேட்ட பல விடயங்களை அவர் செய்து தந்திருக்கின்றார்… அண்மையில் அவரை நான் சந்தித்த பொழுது கூட மிகவும் நட்போடு என்னோடு அவர் உரையாடினார்.

அப்போது, சிறைப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பல்லாண்டு காலமாகப் படும் துன்பங்களையும், அவர்களது வழக்குகள் நியாயமற்ற முறையில் கையாளப்படுவதனையும் அவருக்கு விளக்கி, அவர்களை அவர் விடுவிக்க வேண்டும் என்று கேட்டேன்… நான் சொல்லியவற்றை ஜனாதிபதி மிகவும் பொறுமையாகவும் அக்கறையோடும் செவிமடுத்தார்… அதன் பின்னர் அவர் மிகவும் நிதானமாக என்னிடம் சொன்னார் — (ஜனாதிபதி மைத்திரிபால முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் சொன்னார்…) —

‘நீங்கள் சொல்லுவதை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளுகின்றேன்… இந்த விடயம் தொடர்பில் நீங்கள் என்னிடம் நேரடியாகவே பேச வந்ததை நான் மிகவும் மதிக்கின்றேன்… பல ஆண்டுகளுக்கு முன்னர், நான் கூட ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தேன்… சிறை வாழ்வின் துன்பங்களை நானும் நன்கு அறிவேன்… ஆனால், நான் மிக வெளிப்படையாக உங்ளிடம் ஒரு விடயத்தை ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது…

தயவுசெய்து நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளுங்கள்… நான் உங்களுடைய கோரிக்கைக்குச் செவிசாய்க்க முடியாத நிலையில் இருக்கின்றேன்… அரசியல் விடயங்களின் காரணமா, நான் உங்களுடை ஆட்களை விடுதலை செய்ய முடியாதவனாக உள்ளேன்… நான் அவ்வாறு விடுதலை செய்தால், உடனே தெற்கில் இருப்பவர்கள் சொல்லுவார்கள்…, (தன் முன்னாலிருந்த சபையை நோக்கி முதலமைச்சர் சொன்னார்.

“நீங்கள் சொல்லுவீர்களாம்…”) “இவர் சிங்களவர்களை ஒவ்வொருவராகப் பிடித்து சிறைக்குள் அடைத்துக்கொண்டு, தமிழர்களை மெதுமெதுவாக விடுதலை செய்கின்றார்” என்று… அதனால், நான் எனது ஒவ்வொரு அடியையும் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும்தான் எடுத்துவைக்கவேண்டியவனாக உள்ளேன்… தயவுசெய்து எனது நிலையைப் புரிந்துகொள்ளுங்கள்…’”

இதனை கூறிய பின்பு – முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சபையில் இருந்தோரை பார்த்து சொன்னார், “ஜனாதிபதி இவ்வாறு நேரடியாகவும் வெளிப்படையாக என்னிடம் கூறியதை நான் மதிக்கின்றேன்.”

Web Design by The Design Lanka