நாமல் ராஜபக்ஸ மீது பாய்ந்த சட்டம், ஏன் ஞானசார தேரர் மீது பாயவில்லை? » Sri Lanka Muslim

நாமல் ராஜபக்ஸ மீது பாய்ந்த சட்டம், ஏன் ஞானசார தேரர் மீது பாயவில்லை?

nn

Contributors
author image

ஊடகப்பிரிவு

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக நாமல் ராஜபக்ஸவை கைது செய்ய முடியுமாக இருந்தால், நீதி மன்ற உத்தரவை கிழித்தெறிந்து பேரணி நடாத்திய ஞானசார தேரரை ஏன் இவ்வரசினால் கைது செய்ய முடியவில்லை என முன்னாள் பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது…

இவ்வாட்சிக்கு நல்லாட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ள போதும் அதற்கான எந்த பண்பையும் காணவில்லை. நாட்டின் வளங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ஸ தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனை தடை செய்ய எந்தவிதமான நியாயமான காரணங்களும் இருக்கவில்லை.

இவ்வரசு அதனை தடை செய்து, பிரச்சினையை வேண்டுமென்றே தோற்றுவித்து, இன்று நாமல் ராஜபக்ஸவை கைது செய்துள்ளது. இவ் விடயத்தில் இவ்வரசு செயற்பட்ட துரித வேகத்தை ஏனைய விடயங்களிலும் காட்டினால் நாடு எங்கோ சென்றுவிடும். நீதிமன்ற தடையுத்தரவை கிழித்தெறிந்து பேரணி நடாத்தி இதனை விட அதிகம் குற்றம் புரிந்த ஞானசார தேரர் இன்று கூட உச்ச துவேச கருத்துக்களை ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி சுதந்திரமாகவும் தைரியமாகவும் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஸ மீது பாய்ந்த சட்டம் ஞானசார தேரர் விடயத்தில் பதுங்குவதேன்?

ஞானசார தேரரின் பின்னால் ராஜபக்ஸவினரே உள்ளனர் என்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதையே தடுக்க முடியாமல் உள்ள ராஜபக்ஸவினரால் எவ்வாறு ஞானசார தேரர் கைதாவதை தடுக்க முடியும்? இதன் பின் யாராவது ஞானசார தேரரின் பின்னால் ராஜபக்ஸவினர் உள்ளார்கள் என கூறுவார்களா?

ராஜபக்ஸவினர் சிறு தவறாவது செய்கிறார்களென இவ்வாட்சியாளர்கள் அவதானமாக உள்ளதை இவ்விடயம் சுட்டி காட்டுகிறது. எத்தனையோ குற்றச்சாட்டுக்களை அடுக்கும் இவ்வாட்சியாளர்களினால் இப்படியான நாட்டு நலன் சம்பந்தப்பட்டுள்ள விடயங்களில் தான் கைது செய்ய முடிந்துள்ளது. இதன் மூலம் ராஜபக்ஸவினர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் போலியானது என்பதை அறிந்துகொள்ளலாம்.

nn

Web Design by The Design Lanka