நிந்தவூர்: கொள்ளையர்களை பாதுகாப்புத் தரப்பு காப்பாற்ற முயல்வது ஏன்– அஸாத் சாலி கேள்வி - Sri Lanka Muslim

நிந்தவூர்: கொள்ளையர்களை பாதுகாப்புத் தரப்பு காப்பாற்ற முயல்வது ஏன்– அஸாத் சாலி கேள்வி

Contributors

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக மக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி அவர்களின் நிம்மதியை குலைத்து மக்களின் பணம் மற்றும் உடைமைகள் என்பனவற்றை கொள்ளையடித்து வந்த கும்பல் தற்போது கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளது.

இந்தக் கொள்ளையர்கள் மீதாவது அரசாங்கம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமா? அல்லது இவர்கள் விஷேட அதிரடிப் படை வீரர்கள் என்பதால் வேறு ஏதாவது சாக்கு போக்கு கூறி அரசாங்கம் வழமைபோல் முழுப் பூசனிக்காயையும் சோற்றில் மறைக்க முயலுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி. நிந்தவூரில் கடந்த சில வாரங்களாக மக்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பணம் மற்றும் பொருற்கள் ஒரு குழுவால் தொடர்ந்து சூறையாடப்பட்டு வந்துள்ளது.

இந்தக் கொள்ளைகள் இடம்பெற்ற விதம் இது பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த ஒரு கும்பலாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை ஆரம்பம் முதலே மக்கள் மனதில் தோற்றுவித்து வந்துள்ளது. பொலிஸாரின் கவனத்துக்கு இதுபற்றி பல தடவைகள் கொண்டு வரப்பட்டபோதிலும் அவர்களும் இந்த விடயத்தில் அசமந்தமாகவே நடந்து கொண்டனர். நிலைமை மோசமடையத் தொடங்கியதும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு கூட்டம் ஊர் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

ஊர் மக்களை மிகவும் விழிப்பாக இருக்குமாறும் இரவு நேரத்தில் வெளியே வருவதாயின் தேசிய அடையாள அட்டைகளை கட்டாயம் எடுத்து வருமாறும், சந்தேகத்துக்கு இடமான முறையில் யாராவது ஊருக்குள் நடமாடினால் அவர்களைப் பிடித்து பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ மக்கள் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தின் போது மக்களுக்கு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஊர்மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து பல முனைகளிலும் இரவு நேரத்தில் விழிப்புடன் இருந்த போது கரையோரப் பகுதியில் விஷேட அதிரடிப் படையினரின் வாகமொன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சுமார் எட்டுப் பேர் கரையோர காட்டுப் பகுதியில் இறங்கி உடைகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.இவர்களை இறக்கிவிட்ட வாகனமும் அங்கிருந்து சென்றுவிட்டது.அந்த இடத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கும் செய்திகளை அனுப்பிய மக்கள் ஒரு பெரிய குழுவாக அந்த இடத்தில் ஒன்று திரண்டு அவர்கள் எட்டுப் பேரையும் சுற்றி வளைத்துள்ளனர்.அதில் நான்கு பேர் தப்பி ஓடியுள்ளனர்.

மற்ற நான்கு பேரையும் விசாரித்தபோது அவர்களிடம் அடையாள அட்டைகள் இருக்க வில்லை.ஆனால் அவர்கள் வைத்திருந்த கைப் பைகளில் விஷேட அதிரடிப் படையினர் பாவிக்கும் பல பொருள்கள் இருந்துள்ளன. சீருடை இல்லாத நேரங்களில் அணியும் அரைக் காட்சட்டை மற்றும் தொப்பி என்பனவும் இருந்துள்ளன. இவர்கள் பொதுமக்களாலும் அங்கு வருகை தந்த பொலிஸாராலும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த இடத்துக்கு வேகமாக ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறு வந்த அதிரடிப் படை வாகனம் மக்கள் மீது கண்டபடி தாக்குதல் நடத்தி விட்டு மக்களிடம் பிடிபட்ட நால்வரையும் காப்பாற்றிச் சென்றுள்ளது.

பொலிஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று நின்றுள்ளனர். வந்தவர்கள் அதிரடிப் படையினர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவர்களை அடையாளம் காண்பதில் கூட எவ்வித சிரமமும் இல்லை. மக்கள் தேவையான அளவு அவர்களைப் படம் பிடித்துள்ளனர். ஏற்கனவே பேஸ்புக் வழியாகவும் இன்னும் இணையத் தளங்கள் வழியாகவும் இந்தப் படங்கள் பிரசுரமாகியுள்ளன. கொள்ளையர்களை மீட்டுச் செல்ல வந்த அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் நிந்தவூர் பிரதேச சபைத் தலைவரும் இன்னும் சில சமூகத் தொண்டர்களும் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் நேரில் கண்ட சாட்சியாகவுமுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிந்தவூர் மக்கள் இன்று கிளர்ந்து எழுந்துள்ளனர்.

அரசும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் உண்மையிலேயே நேர்மையானவர்களாக இருந்தால் மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அமைதிப் படுத்தும் வகையில், அவர்கள் இழந்துள்ள நிம்மதியையும் அமைதியையும் மீளக் கட்டி எழுப்பும் வகையில் மக்களால் பிடிக்கப்பட்ட கொள்ளையர்களை அவர்களின் தகுதி தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அப்படிப்பட்ட ஒரு வழமையான வாக்குறுதியையேனும் மக்களுக்கு வழங்க வேண்டும்.

அதை விட்டு விட்டு நியாயமான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை அச்சுறுத்தி கொள்ளையர்களைக் காப்பாற்ற அரசும் பாதுகாப்பு அதிகாரிகளும் முயலக் கூடாது. அடையாளம் காணப்பட்ட கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் பொலிஸாரும்,புலனாய்வு பிரிவினரும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினரும் இந்தச் சம்பவங்களை படம் பிடித்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளனர்.

அந்தப் படங்களை எந்தவொரு பிரசுர நிறுவனங்களுக்கும் அனுப்பாமல் அவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறும் இன்று காலையில் ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயமாகும்? மக்களால் பிடிக்கப்பட்டு அதிரடிப் படையினரால் காப்பாற்றப்பட்டவர்கள் தமது கடமை நேரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவர்கள் இழைத்திருப்பது மாபெரும் குற்றமாகும். பொலிஸாரின் அறிவுறுத்தல் மற்றும் வேண்டுகோள் என்பனவற்றின் பேரிலேயே மக்கள் விழிப்புடன் இருந்து இவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். எட்டு கொள்ளையர்களகை; காப்பாற்ற அரசாங்கம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் இன்று வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

மனித உரிமைகளை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன் என சர்வதேச ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி உறுதி அளித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது இந்த அரசின் நம்பகத் தன்மையை முஸ்லிம்களிடம் மேலும் கேள்விக்கு உரியதாக ஆக்கியுள்ளது. பாதுகாப்பு தரப்பு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இந்தக் கொள்ளையர்களைக் காப்பாற்ற முனைகின்றது என்றால் இவர்களுக்கு பின்னணியில் பக்கபலமாக இருப்பவர்கள் யார்? என்ற நியாயமான கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசாங்கம் இதனை உடனடியாக தெளிவு படுத்த வேண்டும்.

மக்களால் பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நிந்தவூர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும். நாடு முழுவதும் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் ஓரிரு வருடங்களுக்கு முன் கிறீஸ் பேய்கள் ஏவிவிடப்பட்டது போல் கொள்ளையர்களை ஏவிவிடும் ஈனச் செயலுக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.-lm

Web Design by Srilanka Muslims Web Team