நிந்தவூர் பிரச்சினையை திசை திருப்ப முயல்வது ஏன்? - Sri Lanka Muslim

நிந்தவூர் பிரச்சினையை திசை திருப்ப முயல்வது ஏன்?

Contributors

கடந்த சில நாட்களாக நிந்தவூரில் பெரும் பதட்டமான நிலை நிலவி வருகிறது. இனந்தெரியாதோரால் தொடர்ந்தும் கொள்ளைச் சம்பவங்களும் அச்சமூட்டும் நிலைமைகளும் ஏற்படுத்தப்பட்டதன் எதிரொலியாகவே மக்கள் தமது எதிர்ப் புணர்வை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதுவும், சீருடை அணிந்த அரச படையைச் சேர்ந்த சிலர், தமது சீருடைகளை களைந்து சிவில் உடையணிந்து முறைகேடான செயல்களில் ஈடுபட முனைந்தபோதே மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அவர்களைத் தப்ப வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தீவிரமாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சந்தேகத்தின் எதிரொலியாகவே மக்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் தமது உள்நோக்கம் வெளிப்பட்டு விடும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் அஞ்சுவதுபோல் தெரிகிறது.

அதனால்தான் குற்றவாளிகளை நோக்கி திரும்ப வேண்டிய சட்ட ஒழுங்கின் காவலர்கள், இப்போது அப்பாவி மக்களை இலக்கு வைத்துள்ளனர். முதல் கட்டமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள் என்ற பெயரில் இவர்களை இலகுவில் சட்டத்தின் இரும்புப் பிடிக்குள் அமுக்கி விடலாம். ஆனால், சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டங்களை மீறும் போது எங்கு போய் நியாயம் தேடுவது? படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை பாதிப்புறச் செய்வதன் மூலம், எதிர்மனநிலையை உருவாக்குவதற்கு சிலர் திரை மறைவில் நின்று செயற்படுகின்றனர்.

உண்மையான குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் கொண்டு வருவதே இப்போது செய்ய வேண்டிய உடனடிப் பணியாகும். ஆனால், பிரச்சினையை திசை திருப்பி அப்பாவி மக்களை இலக்கு வைப்பதன் மூலம், எதிர்காலத்திலும் மக்கள் கிளர்ந் தெழுந்து விடக்கூடாது என்ற இராணுவ ஆதிக்க மனோ நிலையே வெளிப்படுத்தப்படுகிறது. நிந்தவூரில் மட்டுமல்ல எல்லாப் பிரதேசங்களிலும் இதுவே நிகழும் என்ற மறைமுக எச்சரிக்கையே இதுவாகும்.

இராணுவ உயர் அதிகார மட்டத்தின் ஆலோசனை இல் லாமல் இவ்வாறான விடயங்கள் நடைபெற முடியாது. உயர் அதிகார மட்டத்திடமிருந்து குறைந்தபட்சம் சில சமிக்ஞை களையாவது பெற்று இயங்குவதே பொலிஸாரினதும் இராணு வத்தினரதும் பொதுப் பண்பாகும். ஆதலால், யாரை நோக்கி கையை நீட்டுவது என்ற கேள்வி எழுகிறது.

கிறீஸ் மனிதன் விவகாரத்தில்கூட இதேபோன்ற நிலை மையே காணப்பட்டது. புத்தளத்தில் இதேபோல அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் வாடுகின்றனர்.

கிறீஸ் மனிதன் பிரச்சினையால் நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும் மக்கள் கலவர மனநிலையில் குழம்பிப் போயிருந்தனர். சட்டம் ஒழுங்கைப் பேணுவோர் இதனை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத் தனத்தையே ஆரம்பத்தில் வெளிப்படுத்தினர்.

பொதுமக்களது எதிர்ப்பு கடுமையாக வலுவ டைந்தபோது அப்பிரச்சினை திடீரென முடிவுக்கு வந்தது. இது சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தது.

இனந்தெரியாத ஆசாமிகளின் கைவண்ணம் என்று அதனை யாரும் கருதவில்லை. பிரச்சினை தீவிரமடைந்தபோது எய்தவை நோக்கி அம்பு திரும்பி விடும் என்பதால், அது திடீரென நிறுத்தப்பட்டது என்றே பலரும் நம்புகின்றனர்.

நிந்தவூர் பிரச்சினையை இதே பின்புலத்தில் பார்க்க வேண்டும் என்றெ பலரும் வலியுறுத்துகின்றனர். அமைதியான வாழ்க்கைப் போக்கில் அனாவசியமாக பிரச்சினைகளை உண்டுபண்ணுவதன் மூலம் இந்த சக்திகள் சாதிக்க நினைப்பது என்ன?

போருக்குப் பிந்திய இலங்கையில் புதிய எதிரிகளை உருவாக்குகின்ற சதி முயற்சியின் இன்னொரு அங்கமா இது? சம்பவங்களையும் அதன் போக்குகளையும் பார்க்கின்றபோது இவ்வாறான கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாதது.

சம்பந்தப்பட்ட சக்திகள் – குறிப்பாக அமைச்சர் வாசுதேவ குறிப்பிட்டதுபோல் – ஜனாதிபதி தலையிட்டு இப்பிரச்சினை யை உடன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். திசை திருப்புவதால் பிரச்சினையை வளர்க்கலாமே தவிர, தீர்க்க முடியாது.(vidivelli)

Web Design by Srilanka Muslims Web Team