நினைக்கவே நெஞ்சு கனக்கிறது! வெடிக்கப் பார்க்கிறது!! - Sri Lanka Muslim

நினைக்கவே நெஞ்சு கனக்கிறது! வெடிக்கப் பார்க்கிறது!!

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் இது. பாடசாலை விடுமுறை என்பதால் மிகவும் சந்தோஷமாக காணப்பட்ட இந்த 15 வயதான மாணவன் காலையிலேயே உற்சாகத்துடன் காணப்பட்டான். மறு நாளான திங்கட்கிழமை பாடசாலை என்பதால் அன்றைய ஞாயிறு தினத்தை சந்தோஷமாக போக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் ஆடிப், பாடி, ஓடி விளையாடிய இந்தச் சிறுவனைக் காலன் பதறப் பதறப் பறித்துச் சென்ற இந்தச் சம்பவம் அலவத்துகொடை, ரதுகொஹோ-தீகல பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

அவனது தோட்டத்திலுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாகப் பெற்றப்பட்ட மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்த மின் வேலியில் அந்த மாணவன் சிக்கி உயிரிழந்துள்ளான். எவ்வளவு வேதனையான விடயம். அவன் அணிந்துள்ள காற்சட்டை கூட பாடசாலை சீருடையைக் கொண்டது.

 

தங்களது தோட்டத்தைப் பாதுகாக்கப்பதற்கு பெறப்பட்ட மின்சாரம் சட்ட விரோதம். அமைக்கப்பட்ட மின்வேலி சட்ட விரோதம். அப்படியென்றால் இந்த மரணத்தை அகால மரணம் என்பதா?

 

சட்டவிரோத மரணம் என்பதா? இது கொலைக்கு ஒப்பான செயல் அல்லவா? சட்ட விரோத மின்சாரம், சட்டவிரோத மின்வேலி இவைகளுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்த அநியாய மரணத்துக்கு என்ன நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்?

 

இவ்வாறான சட்டவிரோதமான, தவறான செயற்பாடுகளால் இந்த நாட்டின் நாளைய தலைமுறை ஒன்று இல்லாமல் போயுள்ளது. ஏன் அவன் தலைவனாக வரக் கூடியவனாகவும் இருந்திருக்கலாம் அல்லவா?. இந்தச் சிறுவன் மின்சாரத்தில் சிக்கி துடி துடித்துக் கொண்டிருந்த போது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான். அவனது ஆசைகள்,அபிலாஷைகள் அனைத்தும் ஒரு சில நிமிடங்களுக்குள் கருகிப் போயிருக்கும் அல்லவா? நினைக்கும் போத நெஞ்சு வெடிப்பது போல் உள்ளது. யாராலும் காப்பாற்றவும் முடியாது. அவன் துடிதுடித்து இறக்கும் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருந்திருக்கும்.

 

தங்கள் பயிரைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்வேலியே இன்று அவர்களது உறவு ஒன்றினைக் காவு கொண்டுள்ளது.

 

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரதுகொஹோ-தீகல எனுமிடத்தைச் சேர்ந்த துனுவில ரத்னபால மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த அமில ஹேரத் பண்டார என்ற 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

 

இம் மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி இது சட்டவிரோதமாகப் பெறப்பட்ட மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்டுள்ள மரணம் என தீர்ப்பளித்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team