"நிறைவேற்றுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை" - சுமந்திரன்! - Sri Lanka Muslim

“நிறைவேற்றுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை” – சுமந்திரன்!

Contributors

நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26.01.2023) நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தான் தெரிவித்ததாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று (27.01.2023) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்பு நடைபெற்ற 4 கூட்டங்களிலும் சொன்னதையே ஜனாதிபதி இன்றும் கூறுகின்றார். எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சுதந்திர தினத்துக்கு முன்பு எல்லாம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. எதுவும் இடம்பெறவில்லை என்பதுதான் திடமான உண்மை என்பதை இங்கே பதிவு செய்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து கொழும்பு அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மாகாணத்திடம் கையளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கை ஒன்றையும் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team